இளைய வாசகர்களுக்குப் புதிய படைப்புகள், படைப்பாளிகளை அடையாளம் காட்டுவது இந்தப் பகுதியின் நோக்கம். 2000-க்குப் பின் எழுத வந்தவர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்களை எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டோம்.

“சிறுவயதில் எதையாவது விதைத்தால் ஒருநாளில் பத்துப் பதினைந்து தடவை சென்று முளைத்திருக்கிறதா என்று பார்ப்பதுண்டு. சில விதைகளின் ஓடுகள் மிக வலுவானவை. முளைக்க நாளாகும். அதற்குள் தோண்டிப்பார்த்துவிட்டுத் திரும்பப் புதைப்பதும் உண்டு. அதே ஆர்வத்துடன் இணையத்தை, அச்சிதழ்களைப் பார்ப்பது என் வழக்கம். ஆர்வமூட்டும் ஒரு தொடக்கத்துக்காக.
என் இன்றைய வாசிப்பின் அளவுகோல் இது. இப்போது பிரபல இதழ்களில் வணிக எழுத்து இல்லாமலாகிவிட்டிருப்பதால், வணிக எழுத்தே இலக்கிய முத்திரையுடன் பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதே ஒரு முக்கியமான அளவு கோலாகப் பலரால் சொல்லப்பட்டு, அத்தகைய நூல்கள் முன்னிறுத்தப்படுகின்றன. சுவாரஸ்யம் என்பது இலக்கியத்துக்கான அளவுகோலே அல்ல என்று சொல்ல விரும்புகிறேன். ஆர்வமில்லாத வாசகனையும் வாசிக்கவைப்பதற்காக முயல்பவை வணிக எழுத்துகளே. இலக்கியம் இணையான உள்ளத்துடன் தேடிவரும் வாசகனுடன் நிகழ்த்தப்படும் அந்தரங்கமான உரையாடல். நான் இலக்கிய வாசகர்களுக்குரிய நூல்களை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சென்ற நூறாண்டுக்கால இலக்கிய மரபின் தொடர்ச்சியாக அமையும் ஒரு நூல், அம்மரபில் அதுவரை இல்லாத ஒன்றைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும். ஒன்றைக் கலைத்து அடுக்குவதாக அமையவும் கூடும். அதுவே எப்போதும் என் தேடல்.

1. அத்துமீறல்: வி.அமலன் ஸ்டேன்லி நல்ல நிலம் பதிப்பகம்
அமலன் ஸ்டேன்லி முக்கியமான கவிதைகளை எழுதியவர். அடிப்படையில் அறிவியலாளர். ஆய்வகச் சுண்டெலி ஒன்றின் வாழ்க்கையின் சித்திரமாக முதல் வாசிப்பில் அமையும் இந்த நுணுக்கமான நாவல், இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது.

2. ஆதிரை: சயந்தன் - தமிழினி பதிப்பகம்
தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.

3. துறைவன் - கிறிஸ்டோபர் முக்கூடல் வெளியீடு
கடலோர மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாமறியாத ஒரு நிலப் பகுதியை, உணர்வுக் களத்தை நுணுக்கமான தகவல்களுடன் சொல்கிறது.

4 குறத்தியாறு: கௌதம் சன்னா உயிர்மை பதிப்பகம்
நாட்டார் பண்பாட்டிலிருந்து பெற்ற குறியீடு களையும் நவீனப் புனைவு முறைமைகளையும் கலந்து எழுதப்பட்ட இந்நாவல், சமகால வரலாற்றின் ஒரு மாற்று வடிவம்.

5. காலகண்டம் - எஸ் செந்தில்குமார் உயிர்மை பதிப்பகம்
நூற்றைம்பதாண்டுகாலப் பரப்பில் கண்ணீரும் கையாலாகாத சோர்வும் கொந்தளிப்புமாக ஓடிச்செல்லும் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவல்.

6. ஆங்காரம் ஏக்நாத் டிஸ்கவரி புக் பேலஸ்
தென்னகக் கிராமம் ஒன்றின் சித்தரிப்பு வழியாக ஓர் இளைஞனின் தேடலையும் தன்னைக் கண்டறியும் தருணத்தையும் சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க படைப்பு.

7. ஆயிரம் சந்தோஷ இலைகள் ஷங்கர் ராமசுப்ரமணியன் பரிதி பதிப்பகம்
படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றை மெல்லக் கைவிட்டுவிட்டு, நுண் சித்தரிப்புகளாகவோ சிறிய தற்கூற்றுகளாகவோ தன் அழகியலை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கவிதை யின் முகம் வெளிப்படும் முக்கியமான முழுத் தொகுப்பு.

8. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: குமரகுருபரன் - உயிர்மை பதிப்பகம்
கவிதைக்கு எப்போதுமிருக்கும் கட்டின்மையும் பித்தும் வெளிப்படும் வரிகள் கொண்ட நவீனப் படைப்பு.

9. ஒரு கூர்வாளின் நிழலில்: தமிழினி காலச்சுவடு பதிப்பகம்
மறைந்த விடுதலைப் புலிப் பெண் போராளி ஒருவரின் வாழ்க்கை விவரிப்பு. இதன் நேர்மையின் அனல் காரணமாகவே பெரிதும் விவாதிக்கப்பட்டது. முக்கியமான வரலாற்றுப் பதிவு.

10. சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்) : ப.சரவணன் - காலச்சுவடு பதிப்பகம்.
இளைய தலைமுறை தமிழறிஞர்களில் முதன்மை யானவரான ப.சரவணன் தொகுத்தளித்திருக்கும் இந்நூல், அவரது முந்தைய ஆய்வுத் தொகுப் புகளைப் போலவே வரலாற்றை அறிவதற்கான ஒரு முதன்மை வழிகாட்டி.