நம்மூர் பறவைகள் நாள்: மே 9 - Endemic Bird Day

வேடந்தாங்கலுக்கும், கூந்தங்குளத்துக்கும் வரும் பறவைகள் எல்லாமே வெளிநாட்டு பறவைகள் என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம். ஆனால், அது பெருமளவு உண்மையில்லை. தமிழகப் பறவை சரணாலயங்களுக்கு வரும் பல பறவைகள் உள்நாட்டு பறவைகள்தான். நம்மூர் பறவைகளைப் பற்றிய அறியாமை காரணமாகவே, இந்தப் பிழை நேர்கிறது. இந்தப் பின்னணியில் மே 9-ம் தேதி (இன்று) நாடு முழுவதும் ஓரிடப் பறவைகள் நாளாக (Endemic Bird Day) கொண்டாடப்படுகிறது (கூடுதல் விவரங்களுக்கு: http://www.birdcount.in/).

பறவைகள்-உயிரினங்களில் ஓரிடவாழ்விகள் என்று குறிப்பிடப்படுபவை, உலகில் வேறெங்கும் இல்லாமல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே காணப்படுபவை. அதனாலேயே இவை சிறப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. நாம் நினைப்பதற்கு மாறாக நம்மூரில் மட்டுமே வாழும் பறவை வகைகள் மிக அதிகம்.

குளிர்காலத்தில் வெளிநாட்டிலிருந்து விருந்தாளிகளாக வலசை பறவைகள் நம் நாட்டுக்கு அதிகம் வருகின்றன. அந்த வலசை பறவைகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிவிட்ட இந்தக் காலத்தில், தவிட்டுக்குருவிகள் முதல் தவளைவாயன் வரையிலான நம்மூர் பறவைகள், ஓரிடவாழ்விகள் மீது கவனம் செலுத்தலாம்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் ஓரிடப் பறவைகள் அதிகம் இருக்கின்றன. அதற்காக மற்ற பகுதிகளில் நம்மூர் பறவைகள் இருக்காது என்று அர்த்தமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய பறவைகளும், நம்மூரில் மட்டுமே வாழ்பவைதான். அதனால், ஓரிடப் பறவைகள் நாளில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளை உற்றுநோக்க முயற்சிக்கலாம். அதற்கு இந்தத் தொகுப்பு உதவும்.

மலை மைனா இந்தக் காட்டு மைனாவின் நிறமும் உடல் அமைப்பும் நாம் வழக்கமாகப் பார்க்கும் மைனாவில் இருந்து சற்றே வேறுபட்டது. மரப்பொந்து, பாறை இடுக்குகளில் கூடு கட்டக்கூடிய இவை பூச்சி, பழங்கள், பூந்தேன் போன்றவற்றை உண்ணக்கூடியவை.



கவுதாரி தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் கவுதாரியின் உடல் தவிட்டு நிறத்திலும், வயிற்றுப் பகுதியில் அழகான கறுப்பு நிற வரிகளும் காணப்படும். சிறு கூட்டமாக மேய்ந்து கறையான், தானியத்தை மேயும். ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் பறப்பதற்குப் பதிலாகக் குடுகுடுவென ஓடித் தப்பித்துவிடும்.

வெண் கன்னக் குக்குறுவான் காலை வேளையில் சீரான இடைவெளியில் சம்மட்டி அடிப்பது போல அழகாகக் கூவும் செம்மார்புக் குக்குறுவானின் உறவுப் பறவை இது. சிறிய பறவை என்பதால் நேரில் பார்ப்பது சற்றே கடினம். மரத்தில் தானே பொந்தைக் குடைந்து முட்டையிடும்.

சின்ன தேன்சிட்டு பூக்களின் உட்பகுதியில் இருக்கும் தேனைக் குடிக்க வசதியாக ஊசி போன்று நீண்டு வளைந்த அலகைக் கொண்ட குட்டியூண்டு பறவை. பூவின் அடிப்பகுதிவரை அலகை நீட்டித் தேனைக் குடிக்கிறது. வண்ணத்துப்பூச்சியைப் போலவே, மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.


கருந்தலைச் சில்லை சிட்டுக்குருவிகளைவிட சற்றே சிறிய இந்தப் பறவையின் உடலும் அலகும் சிட்டுக்குருவியை ஒத்திருக்கும். அழகு கொஞ்சும் நிறங்களுடன் கூடிய உடலைக் கொண்டது. தானியக் கதிரின் மீது உட்கார்ந்து கதிர் ஆடுவதற்கு ஏற்ப இதுவும் ஆடிக்கொண்டே உண்ணும் அழகை ரசிக்க நேரம் போதாது. தானியங்கள், விதைகளின் மேலுறையை நீக்கிவிட்டு உண்ணக்கூடியது.


செந்தலைக் கிளி இந்தியாவில் காணப்படும் கிளிகள் எல்லாமே பச்சை நிறம் கொண்டவை. ஆனால், எல்லாமே பச்சைக்கிளிகள் அல்ல. கிளிகளின் துணைவகைகளில் ஒன்று இது. கொட்டை, பழம், விதைகளை உண்ணும் இவை, பொந்துகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை.


காட்டுக்கோழி - பார்ப்பதற்கு நமது வீட்டுக் கோழி போலிருந்தாலும், இவை காட்டில் இயற்கையாக வசிக்கும் கோழிகள். கழுத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் அழகும் கம்பீரமும் பொருந்தியதாகச் சேவல்கள் இருக்கும். இதற்கும் வீட்டுக் கோழிக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசம், காட்டுக் கோழியால் பறக்க முடியும் என்பதுதான்.


வெண்புருவ வாலாட்டி நீளமான வாலைக் கொண்ட இந்தப் பறவை நடக்கும்போது, ஓடும்போது எல்லாம் வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும். அதனால்தான், இந்தப் பெயர். நீர்நிலைகளின் விளிம்புகள், திறந்தவெளித் திடல் பகுதிகளில் புழு பூச்சிகளை வாலை ஆட்டிக்கொண்டே பிடித்து உண்ணும். இனிமையாகக் குரல் எழுப்பக்கூடியது.


சாம்பல் கதிர்க்குருவி அடர்ந்த மரத்துக்குள் இருந்து குரல் மட்டும் கேட்கும். ஆனால், அந்தப் பறவையைப் பார்ப்பது கஷ்டம். அப்படி வெளிப்படையான குரலும், மிகச் சிறிய உடலும் கொண்டவை கதிர்க்குருவிகள். கருஞ்சாம்பல் நிறம் கொண்ட இந்தக் கதிர்க்குருவியின் வால் நீளமானது. தையல்சிட்டைப் போலவே, இலைகள் அல்லது நார், புல், சிலந்தி வலையை இணைத்து நீளமான பை போன்ற கூட்டைக் கட்டுகிறது.


பொன் முதுகு மரங்கொத்தி உளி போன்ற உறுதியான அலகால் மரத்தில் 'டக் டக் டக்' என்று ஒரே தாள லயத்தில் வேகமாகத் தட்டுவதை வைத்து, ஓரிடத்தில் மரங்கொத்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். மரத்தில் செங்குத்தாக ஏறக்கூடிய ஒரே பறவையான இது, பட்டு போன மரங்களில் இருந்து பூச்சிகளைப் பிடித்து உண்ணும். மரங்கொத்தி குடைந்த பொந்துகளில்தான் கிளி, மைனா கூடமைக்கும்.