Sep 8, 2015

தஞ்சை ப்ரகாஷ் 5 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்


தஞ்சை ப்ரகாஷின் 35 சிறுகதைகளை இந்த இணைப்பின் மூலம் வாசிக்கலாம்

இதே ஜானுப் பாட்டியின் கண்ணீரை எதிரொலிக்கும் இன்னொரு உக்கிரமான கதை ‘பற்றி எரிந்த தென்னை மரம்.’ இந்தக் கதையிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டுமெனில் மொத்த கதையையே தட்டச்சு செய்ய வேண்டும். ஆகாது. நீங்களே படித்துப் பாருங்கள். இருந்தாலும் சுருக்கமாக. லோச்சனா ஒரு மகாராணியைப் போல் வாழ்ந்தவள். அவளைப் பார்த்து பெண்கள் பெருமூச்சு விட்டார்கள். அவளுக்கே புரியாது, ஏன் இப்படி எல்லோரும் தன் காலில் விழுந்து விழாத குறையாக வணங்குகிறார்கள் என்று. வெள்ளைத் தோலும் சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய்த் தெரியும் பட்டுப் புடவையின் சலசலப்பும் மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அசர அடித்து விடும்.
இப்பேர்ப்பட்ட பேரழகிக்குக் குழந்தை பிறந்ததும் குஷ்டம் வந்து விடுகிறது. வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அவளோ தன் சொந்த கிராமமான அஞ்சினிக்குப் போய் தானே தன் கையாலேயே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு வாழ்கிறாள். மீண்டும் கூறுகிறேன். பெண்கள் அத்தனை பேரும் படிக்க வேண்டிய பிரதிகளை உருவாக்கியிருக்கிறார் ப்ரகாஷ். அவருடைய அத்தனை கதைகளும் பெண்களைப் பற்றித்தான் பேசுகின்றன. அதுவும் வெளியிலிருந்து, ஒரு ஆணின் பார்வையிலிருந்து அல்ல; ஒவ்வொரு கதையின் உள்ளேயிருந்து கேட்பதெல்லாம் பெண்ணின் குரல்கள்தாம்.
‘பால் முத்தி மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப் புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கல்லில் மாரைப் பிழிந்து விடும்போதும், மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக் கட்டி பாலை முறித்தபோதும் அவளுக்கு உயிரே போயிற்று.’
‘தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் தமக்கை இல்லை. தங்கை இல்லை. மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி. ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும் மனிதர்களோடு அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்களாய்ச் சுட்டு அவளே வினோதமாய் கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே…’
‘வானம் இருண்டு வந்தது. மலைமலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும் போதெல்லாம் தொட மாட்டானா என்று மனம் தவிக்கும். எப்போதாவது ஒருமுறையாவது அவள் கைகளைப் பிடித்து வைத்து லோச்சனத்தின் சின்ன ஆனால் தடித்த உதடுகளைக் கவ்வ மாட்டானா என்று இருக்கும். ராணியா வாய் திறந்து கொடு என்று கேட்பாள்? ஆனால் ராகவன் நிச்சலனமாக கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.’
மிகவும் சர்ரியலிஸ்டிக்கான, அமானுஷ்யமான உணர்வுகளைத் தரக் கூடிய கதை ‘பற்றி எரிந்த தென்னை மரம்.’ இந்தக் கதையைப் போலவே ஒரு பெண்ணின் அடக்கப்பட்ட காம உணர்வுகளைச் சொல்லும் இன்னொரு கதை கடைசிக் கட்டி மாம்பழம். மன்னார்குடியில் மதுரம்பாள் வடிவேலு தம்பதிக்கு பத்து பெண் குழந்தைகள், ஒரு ஆண். வடிவேலு பட்டாளத்தான். பட்டாளத்திலேயே இறந்து விடுகிறான். பிரேதம் கூடக் கிடைக்கவில்லை. அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வரும் கலியராஜன் அந்தப் பதினோரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி வேலைக்கும் அனுப்பி வைக்கிறான். இருபது ஆண்டுகள். ஊரில் அந்தக் குடும்பத்தைப் பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். மதுரம்பாளுக்கும் அவன் அங்கே வருவது பிடிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அவனை விட்டால் வேறு நாதியும் இல்லை.
மதுரத்துக்கும் அவனுக்கும் 20 வயது வித்தியாசம். இருந்தாலும் ஒரு ஆணை இன்னும் திரும்பிப் பார்க்க அவளுக்கு இருந்த திமிரைப் பற்றி அவளே வருத்தப்பட்டு, எட்டு நாள் விரதம் இருந்து தண்ணீரோடு அம்பாளுக்கு வேண்டுதல் செய்து விரதத்தை முடித்திருக்கிறாள். இதற்கிடையில் மதுரத்தின் பத்து பெண்களுக்குமே கலியனைக் கட்டிக் கொள்ள விருப்பம்தான். ஆனால் அவனோ அவர்களோடு எவ்வளவுதான் பாசமாகப் பழகினாலும் திருமணம் என்ற பேச்செடுத்தால் ஒதுங்கிப் போய் விடுகிறான். அந்த இருபது ஆண்டுகளில் அவனோ மதுரமோ ஒரு வார்த்தை பேசிக் கொண்டது இல்லை. அவன் முன்னே அவள் அடுக்களைக்குள் ஒதுங்கி விடுவாள். அவளுடைய உலகமே அடுக்களைதான் என்று ஆகிப் போனது. அவளுக்கு எப்போதாவது உடம்புக்கு வந்தால் கூட ஏனென்று கேட்க மாட்டான் கலியன். அவன் வர வேண்டும் என்று அவள் நினைக்காவிட்டாலும் நெஞ்சு வலி ஏறிக் கொண்டே போகும். அவனோ எட்டிக் கூட பார்க்க மாட்டான். மதுராம்பாளுக்கு அவமானமும், கஷ்டமும், வேதனையும், வெட்கமும் நெஞ்சில் அறையும்.
பேய்த்தனமான ஆசையும், மிருகத்தனமான நேர்மையும், எந்திரம் போன்ற உழைப்பும், பத்துப் பெண்களின் தாய்மையும் ஒன்றாகச் சேர்ந்து நெஞ்சம் பாறையாய்க் கட்டிக் கொள்ளும். அன்னம் தண்ணி ஆகாரம் ஏதுமில்லாமல் கட்டிய சேலையுடன் அவள் ஏன் இருட்டில் கிடக்கிறாள் என்று பொண்டுவள் யாருக்கும் தெரியாது.
20 ஆண்டுகளில் ஆறு பெரிய பெண்களுக்கும் தன் முயற்சியிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறான் கலியராஜன். ஆனால் இவ்வளவு காலமும் அவன் மணம் முடித்துக் கொள்ளவில்லை. எல்லாம் முடிந்து ஒருநாள் மது அருந்தி விட்டு மதுரத்திடம் வந்து ஆவேசமாகத் தன் துயரத்தைக் கொட்டுகிறான். ‘ஏய்… யாருகிட்டடீ கதெ வுடுறே? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? இருவது வருஷ்ம்டீ இருவது வருஷம்… ஒரு நாளு நான் பாக்க நல்ல துணி கட்டியிருப்பியா? நாயே, ஒரு நாளு ஏம் மொகத்தெ நிமுந்து பாத்துருப்பியா? நான் இருந்தா முத்தத்துக்கே வர்றதில்லெ. அடேயப்பா, நளாயினி, சாவித்திரி கறுப்பு. நெஞ்சுல ஆசெயெ வச்சுக்கிட்டுத் தானடீ வூட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருந்தே? ராஸ்கோல்! ராஸ்கோல்! ஏய்… இனிமே நடிச்சே இதே எடத்துல கொன்னுபுடுவேன். உண்மையைச் சொல்லுடீ… என்னெ நீ மனசுக்குள்ள வச்சே ஏமாத்தலே? வேஷம் போடலே? என்னெ நினைக்கவே இல்லையா? நெஜமா சொல்லு?’
கொலைஞன் என்று ஒரு கதை. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். ஆனால் தஞ்சை ப்ரகாஷின் அருகில் கூட அவர்களால் வர முடியாது என்று தோன்றுகிறது. பீடிக் கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லி சகுந்தலாவைத் திருமணம் செய்து கொள்கிறான் ரெங்கராஜன். அவள் பார்த்த பல சினிமாக்களில் வரும் கதாநாயகர்களை எல்லாம் பிசைந்து உருட்டியது போல் உடம்பும் அரும்பு மீசையும் கருகருவென்ற சுருண்ட முடியும் உயர்ந்த தோள்களுமாய் மயக்குகின்ற உடல்வாகு கொண்டவன். ஆனால் கல்யாணம் ஆகி வந்த ஒரு வருடத்தில் பத்து வீடு மாறி விட்டான். ஒரு வீட்டில் இரண்டு வாரம் கூடத் தங்குவதில்லை. என்ன வேலை செய்கிறாய் என்றால் சரியாக பதில் இல்லை. ‘பயமா இருக்குங்க.’ ‘என்னடி பயம்? ராத்திரி நெரங்கழிச்சி வாரேன். குடிக்கிறேன். வேற ஏதாவது கெட்டப் பழக்கம் இருக்கா?’
எனக்குப் பணம் வேண்டாம் என்கிறாள் சகுந்தலா. அவன் என்ன செய்கிறான். தெரியாது. எப்போதாவது வருகிறான். வந்தவுடனே விருந்து சினிமா நாடகம். ராத்திரி பகலாக அவள் மடியில் வாசம். மற்றபடி அவனைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒருநாள் அவன் சட்டையைக் கழற்றிப் போட்டபோது அதில் ரத்தக் கறை. எனக்கு நீங்கள் வேண்டும் என்கிறாள் அவள். ‘நான் தான் இருக்கேனே?’ ‘எங்க இருக்கீங்க? எனக்குத் தெரியலீங்க. நீங்க யாரு? எனக்குப் புரியலீங்க’ என்கிறாள்.
அவளுக்குப் பதினாலு வயசு இருக்கும்போது ஊரில் ஒரு டெண்ட் கொட்டகை போட்டு சர்க்கஸ் வந்தது. அதில் ஒருவன் ஐநூறு கிலோ இரும்புத் தட்டுகளை அடுக்கி இருபுறமுமாக மாட்டி குறுக்குக் கம்பியின் மூலம் பளு தூக்கினான். எல்லோரும் அவன் உடம்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கரளை கரளையான சதை சொன்னபடி கேட்டது. பலகை பலகையாக மாரும், முதுகும் சதையாலேயே இரும்புச் சிலை போல் அமைந்திருந்தது. அந்த சர்க்கஸ்காரனைப் போல் இருந்தான் ரெங்கராஜன். அவன் சாப்பாடு என்ன தெரியுமா? எட்டு பத்து கோழி, இருபது முப்பது முட்டை, ஒரு படி பருத்திப் பால். ஆனால் அவளுக்குத் தெரிந்தது அவனுடைய உடம்பு மட்டும்தான். ரெங்கராஜன் என்றால் அந்த உடம்பு மட்டும்தானா?
இருவரும் ஒரு புதிய வீட்டுக்குப் போகிறார்கள். அன்றைய தினம் அவள் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் விடப் போவதில்லை என்கிறாள். சொல்கிறான். அவன் ஒரு அரசியல் ரௌடி. போலீஸில் பதினேழு கொலை கேஸில் அவன் பெயர் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறான். அவள் ஓடிப் போய் கிணற்றில் குதித்து விட்டாள். அவனா கொலை செய்கிறான்? அவனைக் கொலை செய்ய வைக்கிறார்கள். அவன் ஒரு பிணம். மரணத்தைச் சுமந்து கொண்டே நடமாடுபவன். இதெல்லாம் தப்பு என்று தெரிவதற்குள்ளேயே கொலை செய்ய ஆரம்பித்து விட்டவன். முதல் கொலை செய்தபோது அவன் வயது எட்டு. செத்தது ஒரு போலீஸ்காரன். தப்பு என்று ஒப்புக்கொண்டு நடுங்கினால் அவனால் கொலை செய்ய முடியாது. அவனைக் கொலை செய்தால்தான் அவனுக்கு இந்த ரத்த வாழ்விலிருந்து விடுதலை!
கேட்டு விட்டு சகுந்தலா அழுதாள். விடாமல் அழுது கொண்டேயிருந்தாள். அவளுக்கு அவன் ஆறுதல் சொல்ல முடியாது. தஞ்சாவூர் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஒருவரின் பிராமண சந்தானமாக அவன் பிறந்ததை அவளுக்குச் சொல்ல முடியாது. ரெண்டு பெண்டாட்டிக்காரனான பட்டருக்கு மூன்றாவது பெண்டாட்டியாக முத்தோஜியப்பா சந்தில் குடியிருந்த மராட்டிய டான்ஸ்காரி ராணுபாய் வீட்டுக்கு ஏன் போகிறார் என்று தெரியாமல் அப்பாவின் கையை ஆத்திரத்தில் கடித்து விட்ட காரணத்துக்காக கோவில் மடப்பள்ளியில் காய்ந்து கொண்டிருந்த வடைச்சட்டி எண்ணெயில் அவன் கைகளைப் பிடித்து முக்கி விட்ட தகப்பனார் ரங்காச்சாரியின் கொலை பற்றி அவளிடம் சொல்ல முடியாது. கொட்டு கொட்டென்று கொட்டிய மழையில் அம்மா சாகக் கிடந்தபோது ரெண்டாவது பெண்டாட்டியும், மூணாவது பெண்டாட்டியும் வீட்டில் இருந்த வெண்கலப் பானையிலிருந்து பலகை வரை சட்டிப் பானை வரை மழையில் நனைந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வீட்டில் உள்ள குழந்தைகள் அலற அவரவர் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு போனபோது அம்மா வாயைப் பிளந்து கொண்டு பரலோகம் போயிருந்தாள் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து அவனைக் கொன்ற கொலையாக சகுந்தலாவிடம் கூறிப் புரிய வைக்க முடியுமா?
ஒருநாள் பட்டினி இருநாள் பட்டினி என்றால் எல்லோருக்கும் விளங்கும். தஞ்சாவூரில் மழைக்காலம் என்றால் அந்தக் காலத்தில் இருபத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து அடைமழை பொழியும். ஊர் முழுவதும் வெள்ளக்காடாகும். வீட்டில் ஒரு மணி அரிசி இருக்காது. தொடர்ந்து பெய்த மழையில் ஈரம் பூத்த தரையில் வெறும் உயிரோடு குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்த ஐயங்கார் பெண்மணி – அதுதான் அவன் தாயார் லோகாம்பாள் – கொல்லையில் இருந்து மூங்கில் குருத்து ஒன்றை அறுத்து வேக வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் தின்று வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அம்மா கூப்பிட்டும் அவன் மூங்கில் குருத்து சாப்பிடப் போகவில்லை. சாப்பிட்டால் பசி தீயாய் வயிற்றுக்குள் கொடியோடி படரும் நெருப்பில் பொசுங்க வேண்டும். அதை விடப் பட்டினி கிடக்கலாம்.
வீடு முழுவதும் ஒழுகுகிறது. எங்கு பார்த்தாலும் ஜலம். பசி வேகம் காதைத் துளைக்கிறது. பசி வயிற்றில் எரிப்பதைத்தான் சகுந்தலா கேள்விப்பட்டிருப்பாள். பசி காதைக் குடைவது, பசி நெஞ்சில் அதிர்வது, கடைசியாக உயிரைக் குடிப்பது எதையும் சகுந்தலா கேட்டுக் கூட தெரிந்திருக்க மாட்டாள். இருபத்தி எட்டாவது நாள். மழை நிற்கவில்லை. தொண்ணூறு வயது தாத்தா திண்ணையில் மல்லாந்து விட்டார். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகள் கைகால்களை அசைக்க முடியாமல் செத்துக் கிடந்தனர். அப்போதும் தரை எல்லாம் மழை ஓடிக் கிடந்தது. அம்மா லோகாம்பாள் முற்றத்தில் மழையில் விறைத்துக் கிடந்தாள். உயிர் இரவே கூட்டை விட்டுக் கடந்திருந்தது. முதலில் பசி. பின்னர் வயிற்றில் தீ. அதன் பின் காடு எரிவது போல் உடம்பின் ஒன்பது வாசல்களிலும் தீச்சரங்கள் பறக்கும். உடல் வியர்வையில் குளிக்கும். பின்னர் பசித்தீ அடங்கி விடும். காதுகள் இரையும். விம்மென்று ஓங்கார ஓலம் கேட்கும். நெஞ்சுத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசைக்குள் அடங்கும்போது உடம்பின் சத்து முழுவதும் வெளியேறும். உடம்பு உயிரைப் பிரிய முடியாமல் வெட்டி வாங்கும். கொட்டும் மழையில் இந்தப் பட்டினி விடாயை அந்தக் குடும்பம் முழுவதும் இரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பஞ்ச பூதங்களில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்ததை தானும் செத்துக் கொண்டே அனுபவித்த கோரத்தை எப்படி யாரிடம் சொல்ல முடியும். விளங்க வைக்க முடியும். யாரும் ஒத்துக் கொள்ள வேண்டாம். சட்டம் சொல்கிறது. கொல்லாதே. சட்டம் சொல்கிறது. திருடாதே. ஆனால் அவன் வீட்டில் நடந்த கொலைகளை சட்டம் ஏற்றுக் கொள்ளாது. வீடு முழுவதும் எட்டு ஒன்பது பிணங்கள் நாறிக் கொண்டிருக்க அங்கிருந்து ஏனென்று தெரியாமல் படி இறங்கி மழையில் கொலையிலிருந்து தப்பி ஓடினான் ரெங்கராஜன்.  இதெல்லாம் சகுந்தலாவுக்குப் புரியுமா? 
கில்லர் ரெங்கராஜன் ஒரு மந்திரியின் அடியாள். மந்திரி ஒரு பதினாறு வயதுப் பெண்ணைக் காதலித்தார். அவள் கர்ப்பமானதும் விட்டு விட்டார். ஆனால் உயிரோடு விட்டால் அவள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை எதிர்க்கட்சிக் கொடியுடன் பிறந்து விட்டால் என்ன செய்வது என்று அவருக்குப் பயம். ஒருநாள் விடியற்காலை நான்கு மணிக்கு ஒரு நட்சத்திர ஓட்டலின் பின்சந்து சாக்கடையில் முராடிக் ஆசிட் எனும் கொடூரமான திராவக மணம் எழும்பியபோது குடித்துக் கொண்டிருந்த சாயாவை வைத்துவிட்டு ஓடிப் போய் பார்த்தபோது அந்தப் பதினாறு வயது உடல் அந்த அடர் ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தில் சதை சதையாகக் கரைந்து எலும்புகள் உருகி நீராகி சதையும் நிணமும் கொழுப்பும் அமிலத்தில் உள் ஆழ்ந்து போய் அவளது நீண்ட வார் கூந்தல் கூட இனம் காண முடியாமல் அமிலத்தால் தீயுண்டு அவள் வயிற்று சிசுவும் கரைந்து உருத் தெரியாமல் சாக்கடையின் பாசி பிடித்த சுவர்களும் பொசுங்கிப் புகைய ஆவி குமிழியிட்டு ஓடிய பயங்கரம் கில்லர் ரெங்கராஜனைத் திகில் கொள்ள வைத்தது.
இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களே வாசித்துப் பாருங்கள். உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை இப்படி அனாயாசமாக எழுதித் தள்ளியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ். 
ப்ரகாஷ் பற்றி எழுதி மாளாது போல் தோன்றுகிறது. அவருடைய பேய்க் கவிதை என்ற சிறுகதை புண்டரீகன், பெருந்திரு என்ற சகோதர சகோதரிக்கு இடையேயான பாலியல் உறவை ஒரு தொன்மக் கதையைப் போல் சொல்லும் ட்ரான்ஸ்கிரெஸிவ் சிறுகதை. அதேபோல் மேபல். 25 பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு காவியம். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவைச் சொல்கிறது. திரும்பவும் சமூக ஒழுங்கை மீறும் கதை. பேய்க் கவிதை போல் வெளிப்படையாக அல்லாமல் மிகவும் சூட்சுமமாக, கானல் நீர்த் தோற்றமாக அந்த உறவு எழுதப்பட்டிருக்கிறது.
பொதுவாக தமிழில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை எழுதும் படைப்பாளிகளிடம் ப்ரகாஷின் எழுத்தில் இருக்கும் தீவிரமும் வெறியும் உன்மத்தமும் இருப்பதில்லை. இதைத்தான் ரொலான் பார்த் (Roland Barthes) வாசிப்பு இன்பம் (Pleasure of the Text) என்று சொல்கிறார். ப்ரகாஷின் சிறுகதைகளைப் படிக்கும்போது எனக்கு அந்தோனின் ஆர்த்தோவின் (Antonin Artaud) Theatre of Cruelty என்ற கருத்தாக்கம் ஞாபகத்தில் வந்தது. ப்ரகாஷின் சிறுகதைகளோடு நாம் ஸோஃபாக்ளிஸ், யூரிப்பிடஸ் போன்ற கிரேக்க நாடகாசிரியர்களையும், கார்ஸியா லோர்க்காவின் The House of Barnarda Alba, ஜான் ஜெனேவின் Deathwatch, Maids ஆகிய நாடகங்களையும் இணைத்துப் படிக்கலாம். அத்தகைய வாசிப்பு எப்பேர்ப்பட்ட ஒரு மேதை நம்மோடு வாழ்ந்து நம் மொழியோடு உறவாடியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவும்.  ப்ரகாஷின் புனைவுலகில் பயணிக்கும்போது நான் அடைந்த பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு பேட்ஸ்மன் எப்படி மட்டையைப் பிடிக்கும் போதெல்லாம் இரட்டைச் சதம் அடிக்க முடியும் என்பது போன்றதே. ப்ரகாஷ் தான் எழுதிய எல்லாக் கதைகளிலும் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். ஒரு படைப்பாளி தன்னுடைய அத்தனை கதைகளையும் சிருஷ்டிகரத்தின் உச்சபட்சமாகப் படைக்க முடியும் என்பது மிக அபூர்வமாக நேரும் அதிசயம். ப்ரகாஷ் அப்படிப்பட்டதோர் அதிசயம்.
கட்டுரை மிகவும் நீண்டு போய் விட்டதால் ப்ரகாஷின் மீனின் சிறகுகள், கள்ளம் ஆகிய நாவல்கள் பற்றி எழுதவில்லை. இப்போது நாம் செய்ய வேண்டிய அவசரமான பணி என்னவென்றால், ப்ரகாஷின் நூல்களைத் தொகுத்து செம்பதிப்பாக வெளியிடுவதுதான். அதோடு அவரை வாசித்து விவாதிக்கவும் வேண்டும்.
நன்றி: ப்ரகாஷின் நூல்களைக் கொடுத்து உதவிய நண்பர்கள் டாக்டர் ஸ்ரீராம், கவிஞர் ஆரா, செல்வகுமார், கீரனூர் ஜாகிர்ராஜா. கயாமத் கதை பற்றி விளக்கம் அளித்த வெரோனிகா.  

No comments:

Post a Comment