Showing posts with label Rain. Show all posts
Showing posts with label Rain. Show all posts

Nov 30, 2015

கை கொடுக்கும் காப்பீடுகள்

மக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமும் பாதித்துவிட்டது சமீபத்தில் பெய்த பெருமழை. இதனால் தங்களது சொத்துகளையும், உடமைகளையும் இழந்தவர்கள் ஏராள மானவர்கள்.

வெள்ளப் பெருக்கு வீடுகளுக்குள் புகுந்ததால் விலை உயர்ந்த பல வீட்டு உபயோகப் பொருட்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த சொத்துகளை மக்கள் இழந்து நிற்பது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக உருமாறி உள்ளது.

இந்த நிலையில் மழைக்கு பிறகு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ அரசு பல திட்டங்கள் தீட்டி னாலும், மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வர பல நாட்களாகும் என்பது தான் உண்மை. இந்த நேரத்தில் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மீள என்ன வழி என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஆபத்தில் காக்கும் காப்பீடு

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போல இயற்கை பேரிடர் களால் உடமைகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும் காப்பீடுகள் உள்ளன. இதற்கு ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசி என்று பெயர். இந்த பாலிசி குறித்து பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. இயற்கை பேரிடர்களான மழை வெள்ளம், தீ விபத்து, பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை இதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள லாம். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதன் மூலம் ஏற்படும் இழப்புக்கும் காப்பீடு கிடைக்கிறது.

எவற்றுக்கு கிடைக்கும்

புயல், மழை வெள்ள பாதிப்பு, பூகம்பம் போன்றவற்றால் முழுமையா கவோ, பகுதி அளவிலோ சேதம் அடையும் வீடுகள், மழை மற்றும் வெள்ளம் காரணமாக வீட்டுச் சுவரின் பெயின்ட் பாதிப்பு, சுவர் விரிசலுக்குகூட இழப்பீடு பெறலாம். இந்த பாலிசியின் கீழ் 10 வகையான பிரிவுகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒருவகையான கவரேஜ் இருக்கிறது. தீ விபத்து, வீடு பாதிப்படைவது, அனைத்து வகையான இழப்புக்கும் கவரேஜ், மின்னணு சாதனங்கள் போன்றவற்றுக்கான கவரேஜ், லேப்டாப், கம்ப்யூட்டர், தங்க நகைகள் மற்றும் ரொக்க கையிருப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பிரிவுகள் உள்ளன. இதில் அடிப் படையாக உள்ள தீ பாதுகாப்பு பிரிவு, வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போவது அல்லது சேதமடைவது போன்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது கட்டாயமானது.

யாருக்கு எந்த பாலிசி

சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் இந்த பாலிசி எடுத்துக் கொள்ளலாம். சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யலாம். அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தால் தங்களது பொதுப் பயன்பாட்டுக்கான இடத்தைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக கார் பார்க்கிங் தனியாக இருந்தால், அதைக் குறிப்பிட வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பொருட்களுக்கு மட்டும் காப்பீடு எடுக்கலாம். பொதுவாக வீட்டின் தன்மைக்கு ஏற்ப பாலிசி பிரீமியம் இருக்கும். அதாவது ஓட்டு வீடு, கூரை வீடுகளுக்கும் இந்த காப்பீடு எடுக்கலாம்.

பிரீமியம் எவ்வளவு

இந்த பாலிசிக்கான பிரீமியம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆனால் பொருட்களின் மதிப்பு அல்லது வீட்டின் மதிப்பின் அடிப்படையில் 2 அல்லது 3 சதவீதம் வரை இருக்கும். பொருட்களின் உண்மையான மதிப்பை விட குறைவான தொகைக்கும் பாலிசி கவரேஜ் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. பாலிசி கிளைம் செய்யும் சூழ்நிலையில் இந்த மதிப்புக்கும் மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும். மதிப்பை குறைத்து கவரேஜ் எடுத்தாலும் அந்த மதிப்பில் 2 அல்லது 3 சதவீத மதிப்புக்கு பிரீமிய தொகை மதிப்பிடப்படும்.

இழப்பீடு பெறுவது

பொருட்களுக்கோ உடமை களுக்கோ நிகழ்ந்துள்ள சேதாரம் தனிமனிதர்களால் ஏற்பட்டிருக்கக் கூடாது. இயற்கையாக ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது பொருள் களவு போயிருக்க வேண்டும். உதார ணமாக வீட்டுக்குள் குழந்தைகள் விளையாடுகிறபோது டிவி உடைந்து சேதமானால் அதற்கு இழப்பீடு கோர முடியாது. பாதிப்பு இயற்கையாகவோ அல்லது திருடப்பட்டதால் ஏற்பட்ட தாகவோ இருந்தால்தான் இழப்பீடு கோர கிடைக்கும்.

இந்த பாலிசி எடுத்துள்ளவர்கள் மழை, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக காப்பீடு நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இயற்கை பேரிடரால்தான் பாதிப்பு நிகழ்ந்தது என்பதை உறுதிப் படுத்த ஆதாரங்களை காப்பீடு நிறுவ னத்துக்கு தர வேண்டும்.

குறிப்பாக சம்பந்தபட்ட புகைப் படங்கள், பத்திரிகை செய்திகளை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.

திருடு போன பொருட்களுக்கு கிளைம் செய்வது என்றால், அதற்கு காவல் நிலையத்தில் வாங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணைக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் ஏதேனும் நடக்கும்பட்சத்தில் இது தேவையிருக்காது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், அதற்குக் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். இந்த ஆதாரங்களை இழப்பீடு விண்ணப்பத் தில் இணைக்க வேண்டும். இது தவிர மின் கோளாறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்யவும் இந்த காப்பீடு வழி வகை செய்யும்.

அதே சமயத்தில் காப்பீடு நிறுவனத் தினர், நீங்கள் கொடுத்த தகவல்கள் உண்மை தானா என்பதை ஆராய்ந்து, சோதனை செய்த பிறகே இழப்பீடு வழங்க முடிவு செய்வார்கள்.

எவ்வளவு கிடைக்கும்

வீட்டில் என்னென்ன பொருட்கள் வைத்திருக்கிறோம். அதன் மதிப்பு என்ன, தங்க நகை எவ்வளவு உள்ளது, ரொக்க கையிருப்பு எவ்வளவு என்பது போன்ற வற்றை காப்பீடு எடுக்கும்போதே குறிப்பிட வேண்டும். வெள்ளத் தினால் பழுதடைந்த, அல்லது வீணான பொருட்களுக்கு அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படும். காப்பீடு எடுக்கும்போது பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் கவரேஜ் தொகை இருக்கும். தவிர காப்பீடு எடுத்த பிறகு மீண்டும் புதிதாக சாதனங்கள் வாங்குகிறோம் என்றாலும் அதையும் ஏற்கெனவே எடுத்துள்ள காப்பீடோடு இணைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நமது பொருளாதார இழப்புகளின்போது அதிலிருந்து நம்மை மீட்க எங்கிருந்தாவது உதவி வராதா என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக இருக்கும்.

இது போன்ற சந்தர்ப்பங்களின் எவரையும் சார்ந்து நிற்காமல் நமக்கு பக்கபலமாக இருப்பவை இது போன்ற காப்பீடுகள்தான். வர்த்தக நிறுவனங்களுக்கு பாதுகாப்பளிக்கும் பாலிசிகள் போல இது தனிநபர் உடமை களுக்கு பாதுகாப்பளிப்பவை.

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீடு போல ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசியும் அத்தியாவசியம் என்பதை உணர வேண்டிய கால கட்டத்தில் இருக் கிறோம். ஏனென்றால் சூழலியல் மாற்றங்கள் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக கண்டுகொண்டிருக்கிறோம்.

maheswaran.p@thehindutamil.co.in

Nov 18, 2015

வெள்ளத்தை எதிர்கொள்வோம் முன்னேற்பாட்டுடன்!

சென்னை தாம்பரம் வரதராஜபுரம் ராயப்பா நகரில் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். | படம்: ஜி.கிருஷ்ணசுவாமி
சென்னை தாம்பரம் வரதராஜபுரம் ராயப்பா நகரில் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். | படம்: ஜி.கிருஷ்ணசுவாமி
தமிழகத்தில் பருவமழை களை கட்டிவிட்டது. மகிழ்ச்சி. அதே சமயம் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. தாழ்வான பகுதியில் வீடுகளை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் சூழும் நிலை இருக்கிறது. சென்னை மிதக்கிறது. வெள்ளத்தை எதிர்கொள்ள நாம் என்னென்ன விஷயங்களில் தயாராக இருக்க வேண்டும்? என்னென்ன பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்? வழிகாட்டுகிறார்கள் மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன், திண்டுக்கல் மருத்துவர் ஹர்சவர்த்தினி, இல்லத்தரசி கயல்விழி ஆகியோர்.

உணவு

குறைந்தபட்சம் அரிசி, உப்பு, தண்ணீர் வேண்டும். கேஸ் முன்கூட்டியே வாங்கி வைப்பது நல்லது. பால்பவுடர், காய்கறி, பிரட், பிஸ்கட் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரைக் கட்டாயம் கொதிக்க வைத்துப் பயன்படுத்துங்கள். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைச் சேர்த்துக்கொள்வது, ஜீரணத்துக்கு உதவும்.

மருந்துகள்

காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்குக்கான பாரசிட்டமால், செட்ரிசின், காஃப் சிரப், லோப்ரமைட், எலக்ட்ரால் பவுடர், டெரோலாக் பவுடர் போன்றவற்றைக் கட்டாயம் இருப்பு வையுங்கள். நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இதயநோயாளிகளுக்கு முதலுதவி மாத்திரைகள் அவசியம்.

பாதுகாப்பு

மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் காலை வாரலாம் என்பதால், மெழுகுவத்திகளும், தீப்பெட்டிகளும் தேவை. செல்போன்களை எப்போதும் புல் சார்ஜில் வைத்திருங்கள். ஸ்மார்ட் போன்கள் என்றால் பேட்டரி சேவிங் மோடில் போடுவது அவசியம். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகத்தின் பேரிடர் மீட்பு அலகின் எண்ணை செல்போனில் சேமித்து வைப்பது நல்லது. வீட்டில் கீறல் விழுந்த சுவர் இருந்தால், தள்ளி இருங்கள். மின்கம்பத்தையோ, அதையொட்டியுள்ள மரங்களையோ தொடுவது ஆபத்து. மின்கம்பி கீழே அறுந்து கிடந்தால், மின்வாரியத்துக் தகவல் தர வேண்டுமே தவிர, அதனைச் சுயமாக அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. மின்சாதனங்களை இயக்குவதிலும் கவனம் தேவை.

அவசர உதவி எண்கள்

மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் : 1070
மாவட்டக் கட்டுப்பாட்டு மையம் : 1077
மின்சாரம் : 1912
தீயணைப்புத் துறை : 101
மருத்துவ உதவி : 108

எச்சரிக்கை.. எச்சரிக்கை..

தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், ரேடியோ வைத்திருப்பது நல்லது. மின்தடை நேரத்திலும் அரசின் அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள அது உதவும். கயிறு, நீண்ட குச்சிகள், கார் டியூப் போன்றவை உயிர்காக்கும். வெள்ள முன்னறிவிப்புகளை உதாசீனப்படுத்தக் கூடாது. வெள்ளம் செல்கிறபோது குறுக்கே கடக்க முயற்சிப்பது தவறு. அரையடி உயர நீரோட்டம்கூட மனிதர்களைக் கீழே தள்ளி உருட்டிச் சென்றுவிடும். வெள்ளத்தின் ஆழத்தையோ, திசையையோ சரியாகக் கணிக்க முடியாது என்பதால், கயிறு கட்டாமல் அதைக் கடக்க முயற்சிக்கக் கூடாது.

கொல்வது மழை அல்ல!

சமஸ்
அதிகாலை 3 மணி. சாலைகளை ஆறுகளாக மாற்றியிருக்கிறது மழை. எங்கும் கும்மிருட்டு. செல்பேசி அழைக்கிறது. மறுமுனையில் அழைப்பவன் நண்பன். பதற்றமும் அழுகையும் கூடிய குரல்.

“குழந்தைக்கு உடம்பு கொதிக்குது, தலை வேற கடுமையா வலிக்குதுங்குறான். விடாம அழறான். நாசமாப்போன இந்த மழையில ஆட்டோ, டாக்ஸி யாரும் வர மாட்டேங்குறாங்க. எங்கெ போறது, என்ன பண்றது. ஒண்ணுமே தெரியலைடா…”

“பாரசிட்டமால் மாத்திரை இருக்கா?”

ஒரு ரூபாய் மாத்திரை. அரை மாத்திரை கொடுத்தால், காலை வரைக்கும் பிரச்சினையை எதிர்கொண்டுவிடலாம். நண்பன் வீட்டில் பாரசிட்டமால் இல்லை. அந்த இரவு எத்தனை கொடுமையான இரவாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. காரணம், குழந்தையா, மழையா, நண்பனின் முன்னெச்சரிக்கையின்மையும் அலட்சியமுமா?

இயற்கையைக் குற்றஞ்சாட்ட முடியாது. ஓரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது. ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள், அதிகார வர்க்கம் என்ன செய்கிறது?

சென்னையில் வழக்கமாக நாங்கள் அலுவலகம் வரும் பாதையிலுள்ள அரங்கநாதன் கீழ்ப்பாலத்தை இன்று காலை கடக்க முடியவில்லை. கண்களால் நம்ப முடியவில்லை. ஒரு பஸ் அப்படியே முழுமையாகப் பாலத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. இத்தனைக்கும் அது ஆற்றுப் பாலம் இல்லை; சாலையைக் குறுக்கிடும் ரயில் பாதையைக் கடக்க உதவுவதற்காகக் கட்டப்பட்ட கீழ்ப்பாலம். வேளச்சேரியிலிருந்து அலுவலகம் வந்த நண்பர்கள் காலையில் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு வர படகு சவாரி செய்திருக்கிறார்கள். தலைநகரத்திலேயே நிலைமை இப்படியிருக்கும்போது, கடலூர் துயரங்களை விவரிக்க வேண்டியதில்லை.

ஓர் இந்திய உதாரணம்

இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு அபாயமான புவிச்சூழலைக் கொண்டது ஜப்பான். பேரிடர்களை எதிர்கொள்ளும் கல்விக்கு மிகச் சிறந்த வழி. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை என்றால், ஒடிஷாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். தமிழகத்தைவிடப் பின்தங்கிய மாநிலம். கோடையில் கடும் வறட்சியாலும் மழைக்காலத்தில் கடும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் மாநிலம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாய்லின் புயலை அது எதிர்கொண்ட விதம் ஐ.நா.சபை உட்பட ஏராளமானோரின் பாராட்டுகளை ஒடிஷாவுக்குப் பெற்றுத் தந்தது.

இன்றைக்கும் ஆச்சரியமூட்டும் பணி அது. மிகக் கடுமையான புயலை ஒடிஷா எதிர்கொள்ளலாம் என்றது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இந்த முன்னெச்சரிக்கை வந்தவுடனேயே முதல்வர் நவீன் பட்நாயக் களத்தில் இறங்கிவிட்டார். வெள்ள அபாயப் பகுதிகளில் நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, வடிகால்களைச் சீரமைத்து, மேம்படுத்தும் பணி ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டது. மறுபுறம் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றார். முப்படைகளின் உதவியும் உறுதிசெய்யப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கலந்து பேசி நெருக்கடிச் சூழலில் தகவல் தொடர்பைக் கையாளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளூர் தண்டோரா வரை புயலின் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளையும் அரசு துணை சேர்த்துக்கொண்டது. எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது. கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர் வீடுகளைக் காலிசெய்து, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூடவே அவர்கள் வீடுகளில் வளர்த்த கால்நடைகளும்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் வெளியேற்றங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்பு மையங்களில் எல்லா மருந்துகளும் முன்கூட்டி இருப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்டன.

புயலுக்கு முந்தைய கடும் மழையிலேயே மோசமான பாதிப்புகள் தொடங்கிவிட்டன. மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் வீசிய பாய்லின் புயல் இன்னும் கொடூரமான பாதிப்புகளை உருவாக்கியது. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 2.4 லட்சம் வீடுகள் நாசமாயின; ரூ. 3,000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் ஆயின. முன்னதாக, இதே போன்ற பெரும்புயலை 1999-ல் ஒடிஷா எதிர்கொண்டபோது 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 2 கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பாய்லின் புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 (அடுத்தடுத்த நாட்களில் இறந்தவர்களையும் சேர்த்தாலும் 50-க்குள்தான்).

ஒடிஷாவின் இந்தச் சாதனைக்கு எது அடிப்படை? பூஜ்ய உயிரிழப்பு இலக்கோடு இந்தப் பணியை மேற்கொண்டார் முதல்வர் நவீன் பட்நாயக். 1999 புயல் பாதிப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடம். அதற்குப் பின் தொடர்ந்தும் பெருமழை, வறட்சி, வெள்ளம், புயல் என எல்லாப் பேரிடர்களையும் தொடர்ந்து எதிர்கொள்கிறது ஒடிஷா. ஆனால், மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்குப் பேரிடர் மேலாண்மைக்கான முன்னுதாரணம் ஆகியிருக்கிறது ஒடிஷா பேரிடர் மேலாண்மை மையம்.

தமிழக நிலை

தமிழகம் இம்முறை இன்னும் புயல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அதற்குள் கடலூரில் மட்டும் 43 பிணங்கள் விழுந்திருக்கின்றன. 2004 சுனாமியின்போது தமிழகம் 7,996 பேரைப் பறிகொடுத்தபோதும், கடுமையாக விலை கொடுத்தது கடலூர். 2011 தானே புயலின்போதும் பெரும் விலை கொடுத்தது. இப்போதும் சீரழிகிறது. சரியாக, ஒரு மாதத்துக்கு முன் அக்.16 அன்றே இப்போதைய மழை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டது வானிலை ஆராய்ச்சி மையம். நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை முன்பே இதைச் சுட்டிக்காட்டியது: “இன்னொரு பேரிடர் நேர்ந்தால், அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தமிழகம் இல்லை.” பேரிடர்களை எதிர்கொள்வதற்கான அவசரக்கால நடவடிக்கை மையங்களில் 2012-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை அம்பலப்படுத்தியது. “சுனாமியின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகையில் ஒரு மையம்கூட இந்த ஆய்வின்போது செயல்படும் நிலையில் இல்லை; கடலூரில் 14 மையங்கள் செயல்படும் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது நிலைமையின் விபரீதத்தை விவரிக்கக் கூடியது.

கத்ரினாவின் விளைவுகள்

கடலூரில் மழையில் மடியில் பிணத்தைப் போட்டுக்கொண்டு கதறுபவர்களைக் காணச் சகிக்கவில்லை. பாரிஸில் 129 பேர் உயிரிழந்தால், சர்வதேசத்தின் வெளியுறவுக் கொள்கையே மாறுகிறது; ஆனால், இந்திய மரணங்கள் ஏன் யாரையும் உலுக்குவதில்லை? பலரும் கேட்கிறார்கள். காரணம் எளிமையானது. அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் மாகாணம் 2005-ல் கத்ரினா புயல் பாதிப்புக்குள்ளானது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் புஷ்ஷுக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள். அதன் பின், நியு ஆர்லியன்ஸ் மாகாண காவல் கண்காணிப்பாளர் எட்டி காம்பஸ் பதவி நீக்கப்பட்டார், மேயர் ரே நாகீன் ஊழல் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அமெரிக்கப் பேரிடர் மேலாண்மை முகமை பல மடங்கு மேம்படுத்தப்பட்டது. மக்கள் அங்கு உயிரிழப்புகளை அரசியலாகப் பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் இங்கு உயிரிழப்புகளை இழப்பீடுகளாகப் பார்க்கிறார்கள்!

Oct 7, 2015

மீண்டும் தாக்கும் டெங்கு!

கு. கணேசன்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை 


கொசுக்களை ஒழிப்பது மட்டுமே டெங்குவைக் கட்டுப்படுத்த ஒரே வழி

முன்பெல்லாம் அக்டோபர், நவம்பர் மாதங்களைப் ‘பருவமழைக் காலம்’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். இப்போது சில ஆண்டுகளாக இது ‘டெங்கு காய்ச்சல் காலம்’ என்று பயந்து அலறும்படியாக நிலைமை மாறியிருக்கிறது. நிகழாண்டில் தலைநகர் புதுடெல்லியில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்ச கத்தின் புள்ளிவிவரப்படியே செப்டம்பர் 20 வரை புதுடெல்லியில் மட்டும் 27,668 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 60 பேர் இறந்தி ருக்கிறார்கள். இப்போது புதுடெல்லியைத் தவிர்த்து, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்மாநிலங்களில்தான் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் இதுவரை 10,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

'டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் டெங்கு காய்ச்சல் வருகிறது. இந்தக் கிருமிகளைச் சுமந்து திரியும் ‘ஏடஸ் எஜிப்தி' (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவுகின்றன. இந்தக் கொசுக்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக்கூடியவை. பகலில்தான் கடிக்கும்; அதுவும் பெண்கொசுதான் கடிக்கும். கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும்.

அறிகுறிகள் என்ன?

கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரித்தான அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயை இனங்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும். சிவப்புப் புள்ளிகள் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

ஆபத்து எப்போது?

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந் ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறை வதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரை யீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகிய வற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கான சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்த அழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறி வது மிக முக்கியம். இதன்மூலம் இந்த ஆபத்தான பின்விளைவுகளை வரவிடாமல் தவிர்க்க முடியும். டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM), என்.எஸ்.1 ஆன்டிஜென், எலிசா (Elisa), பிசி.ஆர். (PCR) ஆகிய நவீன பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உடனே தெரிய வரும். இந்தப் பரிசோதனை வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தால், ஏழை எளியவர்கள் இந்தக் காய்ச்சலால் உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்.

உதவும் நவீனத் தொழில்நுட்பங்கள்

டெங்குவைப் பொறுத்த அளவில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி. நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் டெங்கு பரவுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பருவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும். கொசுக்களை ஒழிக்க ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற மருந்துகளை முறைப்படி முன்கூட்டியே பயன்படுத்துவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு உலக அளவில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தேவை.

உதாரணத்துக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் 'கம்பூசியா அஃபினிஸ்' ( Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக் களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக் கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். கொசுக்களை வேரோடு அழிக்கும் தொழில்நுட்பம் இது. சமீபத்தில், பிரேசில் நாட்டில் கொசுக்களை மலடாக் கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குறிப்பிட்ட பருவத்துக்குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும் வகையில் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து, வெளியில் விடுகின்றனர். இந்தக் கொசுக் களோடு மற்ற கொசுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்து பிறக்கிற கொசுக்கள் தொடர்ந்து வளர வேண்டுமானால், அவற்றுக்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காதபோது அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. இறந்து விடும். இந்த வகையில் கொசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி கொசுக்களை ஒழிக்க முன்வந்துள்ளனர். இந்தியாவிலும் இம்மாதிரியான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு நம் அரசுகள் புதிய திட்டங் களைக் கொண்டுவர வேண்டும்.

மக்கள் கடமை

டெங்கு நோயை ஒழிப்பதில் மக்களுக்கும் அதிக கடமை உண்டு. வீட்டைச்சுற்றி சாக்கடை மட்டு மல்ல, சாதாரண தண்ணீர்கூடத் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சாக்கடைகளைச் சுத்தப் படுத்துவது போன்றவற்றில் சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொசுக்களை ஒழிக்கும் புகை அடிக்கும் பணிகளை உள்ளாட்சிகள் தீவிரப்படுத்த வேண்டும். பூந்தொட்டிகள், அழகு ஜாடிகள், சிறு பாத்திரங்கள், தகர டப்பாக்கள், பயன்படாத டயர்கள், ஆட்டு உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டடம் கட்டுமானப்பணிகள் நிகழும் இடங்களில் சுத்தம் காக்கப்பட வேண்டும்.

தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கும் வழக்கம் எல்லா ஊர்களிலும் உள்ளது. அப்போது அந்தத் தொட்டிகளைச் சரியாக மூடிவைக்க வேண்டும். டெங்கு நோயை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுமானால், கொசுக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எப்படி பெரியம்மை, மலேரியா, போலியோ போன்ற நோய்களை ஒழிப்பதற்குத் தனித் திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி பெற்றோமோ அதுபோல டெங்குவுக்கும் தேசிய அளவில் தனித்ததொரு தடுப்புத் திட்டத்தை வரையறுத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும்.