Showing posts with label TamilHindu. Show all posts
Showing posts with label TamilHindu. Show all posts

Aug 24, 2016

மியூச்சுவல் ஃபண்ட் - எளிய மனிதர்களுக்கான எளிய திட்டம்

ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் (நிச்சயமற்ற தன்மையின் விளைவுகளை எதிர்கொள்வது) இருக்கிறது. அதில் முதலீடு செய்யப்படும் அனைவருக்கும் ஒரே ரிஸ்க் தான். உதாரணத்துக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். அதே போல எதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். இதே போலத்தான், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையான முதலீடுகள் இருந்தாலும் அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமமாகதான் இருக்கும். ஆனால் உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.

ரிஸ்கே எடுக்க வேண்டாம், குறைந்த வருமானம் போதும் என்று நீங்கள் நினைத்தாலும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, உங்களின் ரிஸ்க் அளவிற்கு ஏற்றதுபோல இங்கு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் சொத்துகள்/பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தாண்டியும் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.

முதலீட்டு முறை:

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய மாதம் 500 ரூபாய் கூட போதும். (சில ஃபண்ட்களில் மாதம் 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்). உங்கள் வசதிக்கு ஏற்ற தேதியில் இ.சி.எஸ். கொடுத்துவிட்டால் போதும், தானாக முதலீடு செய்யப்பட்டுவிடும். இதற்கு ’’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்”(எஸ்.ஐ.பி.) என்று சொல்லுவார்கள். அதேபோல சில வருடங்களுக்கு முதலீடு செய்தபிறகு, முதலீடு செய்த தொகையை ஒவ்வொரு மாதமும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்.

குறைந்த ரிஸ்க் அதிக வருமானம்!

வங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது 9 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும். ஆனால் பங்குச்சந்தை அதிக லாபம் வர வாய்ப்பு இருக்கிற அதே சமயத்தில் அதிக நஷ்டமும் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அந்த பணத்தை ஒரு பங்குகளிலோ அல்லது இரண்டு பங்குகளிலோதான் முதலீடு செய்ய முடியும். இது ரிஸ்க்கான விளையாட்டு. இதில் ஒரு பங்கு சரிவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் இந்த ரிஸ்க் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகையை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒரு சில பங்களில் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளைப் பார்க்கும் போது சில ஃபண்ட்கள் அபரிமிதமான வருமானத்தை கொடுத்திருந்தாலும், 12 சதவிகித வருமானத்துக்கு மேலே கொடுத்திருக்கும் ஃபண்ட்கள் சந்தையில் நிறையவே இருக்கின்றன. (அதற்கான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான உத்தரவாத வருமானமும் கிடையாது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்)

வரிச்சலுகை

மாதச் சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று வரி கட்டுவது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர்களின்பாடு திண்டாட்டம்தான். வரி சேமிப்புக்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80சி பிரிவின் கீழ் ஒரு நிதிஆண்டுக்கு அதிகபட்சம் 1லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். (புதிய நேரடி வரிவிதிப்பு முறை வரும் போது இந்த திட்டம் இருக்காது என்று சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அந்த சட்டம் அமல்படுத்தபடவில்லை)இந்த முதலீட்டினை மூன்று வருடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். சந்தையில் இருக்கும் மற்ற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்த காலம் மிக குறைவு.

விரைவில் பணம்!

இதில் முதலீடு செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். (சில திட்டங்களுக்கு ’’லாக் இன்” காலம் இருக்கிறது, அது முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும்) இதற்கான விண்ணப்பத்தை கொடுத்த இரண்டு வேலை நாட்களில் பணம் கிடைத்துவிடும்.
சேமிப்பை பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே!

Aug 15, 2016

புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்

ஆயிஷா இரா.நடராஜன்

நம் கல்வி... நம் உரிமை!


ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.

1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

ராஜீவின் புதிய கல்விக் கொள்கை

1986-ல் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது ராஜீவ் அரசு. பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. தொழில் கல்வியே அதன் பிரதானம். முன்பு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கணக்காளர்களை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்தப் புதிய கொள்கை செயல்பட்டது. மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பாடக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆங்கிலமே வேலைவாய்ப்பைத் தர முடியும் என்பதால், பட்டிதொட்டிகளில் எல்லாம் நர்சரிப் பள்ளிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.

யஷ்பால் கல்விக் குழு

உலகம் முழுதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வதைபடுவதைக் கடுமையாக விமர்சித்த யுனிசெஃப், யுனெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள், கற்றலைச் சுமையற்றதாக்கவும் இனிமையாக் கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடுகளை அழைத்தன.

சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இன்றி, ஒரே மாதிரிக் கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (சி.சி.இ.) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது. இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.

மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை

இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்காலே - ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை, அடுத்த 20 ஆண்டுகளில் கல்வி என்னவாகும் எனும் பெருங்கவலையையும் ஏற்படுத்துகிறது. வேதகாலக் கல்வியே புனிதமானது என்றெல்லாம் சொல்வதைவிடவும், இதற்கு முன்பு யஷ்பால் குழு என்று ஒன்று இருந்ததையோ அது சுமையற்ற கற்றல் முதல், குழந்தைகள் உரிமைகளை, ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதையோ கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி. எந்த ஒரு கல்விக் கொள்கையும் தனக்கு முன் நடந்தவற்றை, பட்டியலாகவாவது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பதே மரபு.

இதன் முக்கிய அம்சங்கள்

1. பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.

2. திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

3. இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

4. ஆசிரியர்களின் தரம் - தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.

5. மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.

6. ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.
கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.

மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே. கடந்த பல பத்தாண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்கிடையில் உரு வான ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண் டாடிய குருதியில்தான் இக்கல்விக் கொள்கை எழுதப் பட்டுள்ளது.

ஆயிஷா இரா.நடராஜன், கல்வியாளர்
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

நீங்கள் தேசியவாதியா, தேசப்பற்றாளரா?

குர்சரண் தாஸ்

இன்று இந்தியா சுதந்திரம் பெற்ற தினம். இந்த நாளில் இந்தியன் என்று பெருமை கொள்வதன் அர்த்தத்தை ஆழமாக அலசிப் பார்ப்பது அவசியமாகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் தேசியவாதத்தின் எழுச்சியால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்தன. புதிதாய், புதிராய் பிறந்த தேசியவாதத்தால் ஏராளமான இழப்புகள் நேரிட்டன.

பொதுவாகவே நமது அன்றாட பேச்சு வழக்கில் தேசியவாதம், தேசப்பற்று ஆகிய இரண்டையும் குழப்பத்துடன் புரிந்தும் புரியாமல் பயன்படுத்தி வருகிறோம். இரண்டும் நேர் எதிரிகள் என்பது நமக்கு எளிதில் புரிவது இல்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய இந்தியனுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகிறது.

தேசப்பற்றாளர் தனது நாட்டை நேசிக்கிறார். மக்களின் வாழ்க்கை முறை, நாட்டின் சாதனைகள், வரலாற்றில் பெருமிதம் கொள்கிறார். அதேநேரம் அவர் தனது கருத்துகளை அடுத்தவர் மீது திணிக்க முற்படுவது இல்லை.

தேசப்பற்றாளரை போலவே தேசியவாதியும் தனது நாட்டை நேசிக்கிறார். ஆனால் அவரை அதிகார மமதையும் கர்வமும் ஆட்டிப் படைக்கிறது. தனது நாடு மற்ற நாடுகளைவிட மேலானது, பலம் வாய்ந்தது என்று தம்பட்டம் அடிக்கிறார். தனது கருத்துகளை அடுத்தவர் மீது திணிக்க முற்படுகிறார்.

இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அந்த காலகட்டத்தில் ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகிய சர்வாதிகாரிகளின் தேசியவாத கொள்கைகள் உலகம் முழுவதும் நிழலாடிக் கொண்டிருந்தன. அதேநேரம் மகாத்மா காந்தி போன்ற அஹிம்சைவாதிகள் இந்தியாவில் உண்மையான தேசப்பற்றை விதைத்தனர். நாம் இந்துக்கள், முஸ்லிம்கள் என வாழக்கூடாது, இந்தியர் களாக வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்.

ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் தேசியவாதத்தால் ஜெர்மனி, ரஷ்யா, சீனாவில் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவிலோ காந்தியின் தேசப்பற்று கொள்கையால் ஒரு லிட்டர் ரத்தம்கூட சிந்தாமல் நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்.

கடந்த ஓராண்டாகவே தேசியவாதத்தால் உலகம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. பிரிட்டனில் தேசப்பற்று என்ற பெயரில் தேசியவாதிகள் நடத்திய பிரச்சாரத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அந்த நாடு வெளியேறி உள்ளது. அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினரை, அகதிகளை அடித்து விரட்டுவேன் என்று மிரட்டுகிறார். சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நிறுத்துவேன், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை அந்நியர் தட்டிப் பறிப்பதை தடுப்பேன் என்று சபதம் செய்கிறார். பிரிட்டனின் தேசியவாதிகள், அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் தங்கள் நாடுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் விவகாரத்தில் தேசியவாதமும் தேசப்பற்றும் இந்தியர்களைக் குழப்பத்தின் உச்சிக்கு கொண்டு சென்றன. தேசத் துரோகம் குறித்த விவாதங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கண்ணையா குமார் தன்னை தேசப்பற்றாளர் என்று அறிவித்தார். ஆனால் தேசியவாதிகள் அவர் தேசத்துரோகி என்று முத்திரை குத்தினர்.

தேசப்பற்றாளர்களும் தேசியவாதிகளும் நமது நாடு வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தேசப்பற்றாளரை பொறுத்தவரை சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகத்தினரும் ஒருசேர முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். தேசியவாதிகளைப் பொறுத்தவரை சமூகநீதியில் அவர்களுக்கு அக்கறை இல்லை. நாட்டின் வலிமையை பறைசாற்ற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.

ஒரு தேசியவாதி எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டை தூக்கிப் பிடிக்கிறார். தனது நாடு தவறே செய்யாது என்று வாதிடுகிறார். தேசப்பற்றாளரோ தனது நாட்டை நேசிக்கும் அதே நேரத்தில் அதன் நிறை, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார். சமூகநீதி, சமஉரிமைக்கு பங்கம் ஏற்படும்போது மனம்திறந்து விமர்சனம் செய்கிறார். ஆனால் தேசியவாதியால் தனது நாடு குறித்து யாரும் விமர்சனம் செய்வதைக்கூட சகித்துக் கொள்ள முடியாது.

தேசியவாதம் மூலமே நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உலக வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தேசியவாதத்தால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்கூடாக பார்க்கலாம். 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வியாபித்து பரவிய தேசியவாதத்தால்தான் ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களின் நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டன. இந்தியா பிரிட்டனின் காலனி நாடாக மாறியது. 20-ம் நூற்றாண்டில் எழுந்த தேசியவாதத்தால் 2 உலகப் போர்கள் உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டின.

தேசியவாதத்தின் மிக மோசமான உதாரணம் ஹிட்லர். 2-ம் உலகப் போருக்கு வித்திட்ட அவர், ஆரியர்களே உலகில் உயர்ந்த இனம் என்று வாதிட்டார். பல நாடுகளை ஆக்கிரமித்தார். 80 லட்சத் துக்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி மாநிலங்களவையில் சரக்கு, சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேறியது. அப்போது தேசப்பற்றாளர்களும் தேசியவாதிகளும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்தியாவை வல்லரசாக, அசைக்க முடியாத சக்தியாக மாற்ற ஜிஎஸ்டி வழிவகுக்கும் என்று தேசியவாதிகள் ஆனந்த தாண்டவமாடினர். அதேநேரம் ஜி.எஸ்.டி. மசோதாவால் கடைக்கோடி ஏழைக்கும் பயன் கிடைக்கும் என்று தேசப்பற்றாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பிரிட்டனின் தேசியவாதிகளும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்பும் தற்போது இனவாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். தங்கள் நாடுகளின் கடந்த காலப் பெருமைகளைக் கதை, கதையாக பேசுகின்றனர். இதேபாணியில் இந்து தேசியவாதிகளும் கடந்த கால ஆரிய நாகரிகத்தின் பெருமைகளைப் பேசுகின்றனர். இந்தியா இந்துக்களின் பூர்விக பூமி என்று பிரகடனம் செய்கின்றனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்று கோஷமிடுகின்றனர். அதன்மூலம் பூர்வகால உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.இப்போது நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள். நான் ஒரு தேசப்பற்றாளன், தேசியவாதி அல்ல என்பதை. ஒரு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் தேசியவாதிகளும் தேசப்பற்றாளர்களும் இதுவரை அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்றதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை எனது நாட்டின் இயற்கை அழகில் மூழ்கித் திளைக்கிறேன். இந்தியர்களின் எண்ணற்ற சாதனைகளை எண்ணி மகிழ்கிறேன். நாட்டின் வரலாற்றில் பெருமிதம் கொள்கிறேன். எனது நாட்டை நேசிக்கிறேன். அந்த நேசத்தால் அடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது அன்பும் நேசமும் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்கிறது. அதற்கு காரணம் முதலில் நான் மனிதன், அதன் பிறகுதான் இந்தியக் குடிமகன்.

தமிழில் சு.கோயில்பிச்சை

சுதந்திர உணர்வும் அடிமை உணவும்

கு.சிவராமன்

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.
கிட்டத்தட்ட 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு மிளகு ஓரிரு டாலர் விலை உயர்ந்ததால்தான், 400 ஆண்டுகால அடிமை வாழ்வு இந்தியாவுக்கு ஏற்பட்டது என்கிறார்கள் வரலாற்றாளர்கள். அப்போது வரி செலுத்தக்கூடிய நாணயமாக மிளகு கருதப்பட்டது. அரபு வணிர்கள் மட்டுமே மிளகை இந்திய நிலத்திலிந்து எடுத்துச் சென்று ஐரோப்பாவில் வணிகம் செய்துவந்தனர். அந்தச் சூழலில், இந்த விலை உயர்வு ஐரோப்பிய அரசுகளுக்கு நெருக்கடி தந்தது. நாமே ஏன் மிளகு வணிகத்தைத் கையிலெடுக்கக் கூடாது, மிளகு விளையும் நிலத்தைக் கைப்பற்றக் கூடாது என்று ஐரோப்பியர்களுக்குள் ஏற்பட்ட சிந்தனைதான், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைய வழிவகுத்தது. இது வரலாறு அறிந்த சேதி. 

அதன் பின்னர், 400 ஆண்டுகள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு, எத்தனையோ பேர் ரத்தம் சிந்தித்தான் சுதந்திரம் பெற்றோம். இந்த சுதந்திர தின விழாவில் ஒவ்வொருவரும் மகிழ்வோடு பரிமாறிக்கொள்ளும் வாழ்த்து ‘சுதந்திர தின வாழ்த்துகள்’. அப்படி உச்சரிக்கும் நமது ஒவ்வொருவரது வாயுமே உண்மையில் இன்னும் ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டு இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

அந்நியக் கை

அன்று அந்நிய நாட்டிலிருந்து வந்த உடைகளை உதறியெறிந்து, கதராடை உடுத்தி, ‘அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்’எனும் முழக்கத்துடன் சுதந்திர வேள்வித் தீ காந்தியடிகளால் மூட்டப்பட்டது. இன்று காலை முதல் இரவு வரை நம் பசிக்காகவும், வாய் ருசிக்காகவும், ஆற்றல் பெறவும், நோய்த் தடுப்பு பெறவும் சாப்பிடும் சராசரி உணவாகட்டும் அல்லது ஊக்க உணவாகட்டும் அதில் பெரும்பான்மைப் பகுதி நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்நிய நாட்டுப் பிடியில்தான் இருக்கிறது. நாம் எதைச் சாப்பிட வேண்டும், நமக்கான தேர்வு எது, உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தரம் எது என அத்தனையுமே மறைமுகமாக வணிகச் சிந்தனையோடு பன்னாட்டு நிறுவனங்களால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.

1992 டங்கல் அறிக்கைக்குப் பின்னர் மெல்ல மெல்ல உலகெங்கும் ஆதிக்க நாடுகளின் வசதிக்காக, வணிக வாய்ப்புகளுக்காக, சில 100 நிறுவனங்களின் பங்குக் கணக்குகளை எப்போதும் பத்திரமாக வைத்திருக்க, உணவுக் கொள்கைகள் தொடர்ந்து வகுக்கப்படுகின்றன. நம் தட்டில் பரிமாறப்படும் உணவு வேறொருவரால் தீர்மானிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உணவுக் கொள்கையும் சரி, விவசாயக் கொள்கைகளும் சரி, சுதந்திரத்தின் அடிநாதமாக இருந்த சுதேசிச் சிந்தனையை முற்றிலும் சீரழித்துவிட்டன. நாமெல்லாம் முன்பு எப்போதோ ருசித்துவந்த காஷ்மீர் ஆப்பிள், சிம்லா ஐஸ்க்ரீம் ஆப்பிள் இன்று அநேகமாகக் கிடையாது. மாறாக 50% இறக்குமதி வரி கட்டிப் பெறப்படும், வாஷிங்டன் ஆப்பிளும் சீன ஆப்பிளும் பாகிஸ்தான் ஆப்பிளும் நம் பழக்கடைகளை அலங்கரித்துக் கொண்டிருக் கின்றன.

குதிரைகளுக்கான உணவு கொஞ்சம் மிதமிஞ்சி விளைவதால், “அதுதான் உன் உடலைக் குறைக்கும். உனக்கேற்ற உணவு” என அறிவியல் தரவுகளோடு புது அடையாளம் பூசப்பட்டு, ஒவ்வொரு வீட்டு காலைச் சிற்றுண்டிகளையும் களவாடிவிட்டது ஓட்ஸ் தானியம்.

வணிகப் பிரச்சாரங்கள்

ஐரோப்பாவில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் தயாரிக்கப்படும் உணவுக்கு உலகில் பெரும் மதிப்பு உண்டு. அதற்கு முதல் காரணம், அங்கு கிடைக்கும் ஆலிவ் பழத்தின் எண்ணெய். ‘இந்த எண்ணெய் மட்டுமே உன் மாரடைப்பத் தவிர்க்கும்’ என வணிகப் பிரச்சாரம் செய்து, அந்த ஆலிவ் எண்ணெய் நம் வீட்டு அடுப்பங்கரைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. முன்பு சூரியகாந்தி எண்ணெய்க்காக நம் நாட்டுத் தேங்காய் எண்ணெயைப் பறிகொடுத்ததுபோல இன்று நல்லெண்ணெயையும் கடுகு எண்ணெயையும் பறிகொடுக்கிறோம். உலகில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக நகர்ந்துகொண்டிருந்த வேளையில், கடந்த 10,15 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சறுக்கல்கள். நம் வீட்டு சாம்பாரிலும் பருப்புப் பொடியிலும் நம் குழந்தைக்கு ஊட்டும் பருப்பு சாதத்திலும் கிட்டத்தட்ட 60%-க்கு மேலான பருப்பு தான்சானியா முதலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை அறிவோமா?

இந்தியத் தேவையில், இன்றைக்கும் 40% பருப்பு, பயறு உற்பத்தியில் இன்னமும் பின்னடைவில்தான் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் சுதந்திரத்துக்கு வித்திட்ட காந்தியின் ஆலோசகராகவும் சுதந்திர இந்தியாவின் முதல் திட்டக் குழுவின் தலைவராகவும் இருந்த, நம்மில் அநேகம் பேர் மறந்துவிட்ட ஜே.சி.குமரப்பா எனும் தமிழனின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அவர், 1940-களிலேயே, ஒரு கோடி மக்களுக்கு உணவுக்கும் உடைக்கும் என்ன உற்பத்தி இந்தியாவில் ஏற்பட வேண்டும்; அது கிராம ஊரக வளர்ச்சியோடு எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் எனத் தன்னுடைய நிலைபேற்றுப் பொருளாதாரத்தில் (economy of permanence) மிகத் தெளிவுபடக் கூறியிருந்தார்.

ஏன் மறந்தோம்?

இந்தியாவுக்குப் பெரிய அணைக்கட்டுகள், மிகப் பெரும் செயற்கை நீர்த்தேக்கங்கள் அவசியம் இல்லை. வெளிநாட்டு விவசாயக் கட்டமைப்பு வேறு, விரிவுபட்ட பரந்த இந்தியாவின் உயர் தட்பவெப்ப மண்டலம் வேறு என்று இந்த நாட்டுக்கான உற்பத்தியை இந்த நாட்டுக்கான விவசாயக் கட்டமைப்போடு கனவு கண்டவர் குமரப்பா. துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் இந்த நிலைபேற்றுப் பொருளாதாரக் கருத்துகள் ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கப்பட்டதில் உணவு விஷயத்தில் மெல்ல மெல்ல வெளிநாட்டுக்கு அடிமைப்படவும், கையேந்தவும் நாகரிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் என்பது நம்மை நாமே ஆள்வது மட்டுமல்ல. எந்த விதத்திலும் ஒரு பன்னாட்டுப் பிடிக்குள் மறைமுகமாகச் சிக்கியிருப்பதும் ஒருவகையில் அடிமைத்தனமே. மரபணு மாற்றப்பட்ட பருத்திதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைக் காப்பாற்றும் என 2002-ல் நுழைந்தது பி.டி.பருத்தி. கிட்டத்தட்ட 12, 13 ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்தியப் பருத்தியும் (96%) பி.டி.பருத்தியாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இன்று சுதந்திரதின விழாவில் பெருமையுடன் பறக்கும் இந்திய தேசியக் கொடிகூட பி.டி.பருத்தியால் ஆனதுதான் என்பது எவ்வளவு வெட்கம்?

விதர்பாவில் நடந்த விவசாயத் தற்கொலைகளுக்கும் இன்னும் இந்தியாவில் ஆங்காங்கே நடைபெறக்கூடிய விவசாயத் தற்கொலைகளுக்கும், விவசாய உற்பத்தியில் கூடிவரும் கட்டுக்கடங்காத கடன் தொல்லையும் அந்தக் கடன் தொல்லைக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய 20 மடங்குக்கு மேல் விலையேற்றம் உள்ள இதுபோன்ற மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளும் முக்கியக் காரணங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. சுதந்திர தினம் அன்று பத்தாவது முறையாக காந்தி படம் பார்ப்பது, அன்றைக்கு மட்டும் கதராடை அணிவது, விடுதலைப் போராட்ட வசனம் பேசுவது என இராமல், எதற்குப் பெற்றோம் இந்தச் சுதந்திரத்தை? பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறோமா? என கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நெல்லி தரும் விட்டமின் சி-யை விடச் சிறப்பாக நியூசிலாந்து கிவி பழம் எதையும் கொடுத்துவிடப்போவ தில்லை. உடலுக்குத் தேவையான ஊக்க ஆற்றலை கொய்யா கொடுப்பதைவிட அதிகமாக ஆஸ்திரியா ஆப்பிள் தந்துவிடப்போவதில்லை. தினை, ராகி முதலான சிறுதானியங்கள் தரும் உணவுச் சத்துக்களைவிட அதிகமாக ஆஸ்திரேலிய ஓட்ஸ் கொடுத்து விடப்போவதில்லை. காந்திய - குமரப்ப பொருளாதாரமும், சூழலைத் துளியும் மாசுபடுத்தாமல் தரும் இந்த ஊட்டமும் உணர்வும்தான் சுதந்திர இந்தியாவுக்கான உண்மையான தேவை!

- கு.சிவராமன், மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Jul 19, 2016

தொன்மையான பொருட்களின் வயதை அறிவது எப்படி?

மதுரையைப் பழமையான நகரம் என்பார்கள். அதைக்காட்டிலும் பலமடங்கு பழமையான நகரம் ஒன்றை மதுரைக்கு அருகே, சிவகங்கை மாவட்டத் துக்கு உட்பட்ட ‘கீழடி’யில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்திருக் கிறார்கள். இங்கு ஹரப்பா நாகரிகத்தையொத்த 2,300 ஆண்டுகள் தொன்மையான நாகரிகத்தின் சுவடுகள் கிடைத்திருப்பது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

1920-களில் நடந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகள், இந்திய நாகரிகமானது சீன, எகிப்திய நாகரிகங்களுக்கு இணையான தொன்மை வாய்ந்தது என்று உணர்த்தின. தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கீழடி அகழ்வாராய்ச்சியும் சிந்துச் சமவெளி நாகரிகத்துக்கு ஒப்பானதாக இருக்குமோ என்று வியப்போடு பார்க்கிறார்கள் தொல்லியலாளர்கள்.

ஒரு அகழ்வாய்வில் கிடைத்த தடயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்ற முடிவுக்கு எப்படி வருகிறார்கள்? தொல் பொருட்களின் வயதைக் கணக்கிட, உயிரிபாறை அடுக்கியல் (Biostratigraphy), தொல்காந்தவியல், எரிமலைச் சாம்பல் கொண்டு காலக்கணக்கிடுதல் (Tephrochronology), ரேடியோகார்பன் கால அளவை எனப் பல அளவை முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் நவீன முறைகளில் ஒன்றுதான் வெப்பவொளிவிடல் (Thermoluminescence).

குவார்ட்ஸ் என்னும் பளிங்குக் கல் அல்லது சவக்காரம் போன்ற சிலிகேட் வகைப் பாறைகள் சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களிலிருந்து வரும் எலெக்ட்ரான்களை உறிஞ்சித் தன்னுள் சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளும் தன்மைகொண்டவை. இந்தக் கற்களைத் தீயிலிட்டால், அதிலுள்ள எலெக்ட்ரான்கள் வெளியேறிவிடும். பழங்காலத்தில் கற்களால் கருவிகளைச் செய்து முடித்த பின், அவற்றைத் தீயில் இட்டு வாட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆக, அதில் ஏற்கெனவே சிறைபட்டிருந்த எலெக்ட்ரான்கள் வெளியேறி, கருவி படைக்கப்பட்ட பின் புதிதாக சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களிலிருந்து வரும் எலெக்ட்ரான்களை உறிஞ்சத்தொடங்கும். இவ்வாறு அகழ்வாராய்ச்சியில் நாம் அந்தப் பொருளைக் கண்டெடுக்கும் வரையில் தொடர்ந்து எலெக்ட்ரான்களை உறிஞ்சி, சிறைப்படுத்தியிருக்கும்.

இவ்வாறு தொன்மையான கல்லில் மிகமிக அதிகமான எலெக்ட்ரான்கள் சிறைப்பட்டிருக்கும் என்பதால், அந்தக் கல் கருவியில் சிறைபட்ட எலெக்ட்ரான் களின் அளவு அதன் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதாகத் திகழும்.

வீட்டின் மேற்கூரையில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் குறிப்பிட்ட வேகத்தில் தண்ணீர் விழுந்துகொண்டிருப்பதாக எடுத்துக்கொள்வோமே. தொட்டியில் எவ்வளவு தண்ணீர் நிரம்பியுள்ளது என்பதை வைத்து எவ்வளவு நேரம் மின்மோட்டார் ஓடியுள்ளது என்பதை அனுமானிக்க முடியுமல்லவா? அதுபோலவே அந்தக் கல், கருவியானது தொடங்கி இன்று வரையில் சிறைபட்ட எலெக்ட்ரான்களின் அளவை வைத்து, சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களில் வெளிப்படும் எலெக்ட்ரான் செறிவுடன் ஒப்பிட்டு, எவ்வளவு காலத்துக்கு முன்பு அந்த கல் கருவி உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். கல் கருவி மட்டுமல்ல, தீயில் சுட்ட செங்கல், மட்கலம், பீங்கான் ஆகியவற்றின் வயதையும் இதே தொழில்நுட்பத்தைக்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

சில வகை குவார்ட்ஸ் கற்கள் வேறுபட்டவை. சூரியஒளி பட்டதும், அதில் அதுவரை சிறைபட்ட எலெக்ட்ரான்கள் வெளியேறிவிடும். எனவே, ஒரு நாகரிகம் மண்ணுக்கடியில் புதைந்த பின், அதற்குச் சாட்சியமான தொல்பொருள் சூரியஒளிபடாமல் தடுக்கப்பட்டுவிடும் என்பதால், அதிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற முடியாது. அதேநேரத்தில், மண்ணில் இயற்கையாகவே இருக்கின்ற யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கப் பொருட்கள் எலெக்ட்ரான்களை உமிழ்ந்துகொண்டிருக்கும். அதே மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் தொல்பொருளானது, இந்த எலெக்ட்ரான்களை உறிஞ்சி சிறைப்படுத்திக் கொள்ளும்.

அகழ்வாராய்ச்சியில் அகப்படுகிற இந்தத் தொல்பொருளைச் சூரிய ஒளிபடாமல் சோதனைச் சாலைக்கு எடுத்துவந்து, குறிப்பிட்ட அலைநீள ஒளியைப் பாய்ச்சினால், அந்தப் பொருள் இடைப்பட்ட காலத்தில் உறிஞ்சி சிறைப்படுத்தியுள்ள எலெக்ட்ரான்களின் அளவு தெரியவரும். அவை புதைபட்டிருந்த மண்ணில் எவ்வளவு கதிரியக்க யுரேனியம், தோரியம் போன்றவை புதையுண்டிருந்தது என்பதைக் கணித்து, எலெக்ட்ரான் உமிழ்வு விகிதத்தைக் கணக்கிட்டால், எவ்வளவு காலம் இவை சூரிய ஒளியைப் பார்க்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடந்தன என்று அறியலாம். இது ‘ஒளிக் கிளர்ச்சி வெப்பவொளி முறை’ (Optically stimulated luminescence) எனப்படுகிறது. உயிரற்ற கல் மட்டுமல்ல, பல், பவளப் பாறை போன்ற சில உயிரிப் பொருட்களின் தொன்மையையும் இதே முறையைப் பயன்படுத்திக் கணிக்க முடியும்.

த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. - தொடர்புக்கு: tvv123@gmail.com

பட்ஜெட்டும் சட்டமும்!

மாநில அரசுக்கு வரி வருவாய்தான் பிரதான வருவாய் இனம்
பட்ஜெட் என்பது அரசின் ‘ஆண்டு நிதி அறிக்கை’ என்பதையும், பட்ஜெட் அறிக்கையை விவாதித்து அதுகுறித்த சட்டங்களை சட்டப்பேரவை ஏற்படுத்தி, ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே அது நடைமுறைக்கு வரும் என்றும் பார்த்தோம்.

பட்ஜெட் என்பது ஒருவித சட்ட ஆவணம்தான். அரசுக்கென்று ‘தொகு நிதி’ ஒன்று உள்ளது. மத்திய அரசுக்கு உரியதை இந்தியாவின் தொகு நிதி (Consolidated Fund of India) என்றும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரியதை ‘மாநில தொகு நிதி’ (Consolidated Fund of State) என்றும் அழைக்கிறோம். இந்தத் தொகு நிதியின் உரிமையாளர், இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர். ஒரு மாநில அரசு பெறும் அனைத்து வருவாய்களும் ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவு வைக்கப்படும். மாநில அரசு செய்ய வேண்டிய செலவுக்கான பணமும் ‘மாநிலத் தொகு நிதி’யில் இருந்தே எடுக்கப்படும். வருவாயை ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவுவைக்கவும், செலவுகளுக்குப் பணம் எடுக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் அல்லவா? அதற்குச் சட்டமன்றம் பல சட்டங்களை இயற்றி, ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பும். அச்சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியவுடன், மாநில அரசு அச்சட்டங்கள் கூறியபடி வருவாய் சேகரித்தும், செலவுகள் செய்தும் தங்கள் நடவடிக்கைகளைச் செய்யலாம். இதுதான் பட்ஜெட்டை உருவாக்கி நடைமுறைப்படுத்துகிற விதம்.

எதிர்பாரா செலவு நிதி

‘தொகு நிதி’ மட்டுமல்லாமல், ‘எதிர்பாரா செலவு நிதி’ (Contingency Fund) என்ற ஒன்றும் உள்ளது. ஆளுநரின் ஒப்புதலோடு ‘எதிர்பாரா செலவு நிதி’யில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வரவாக வைக்கப்படும் (ரூ. 500 கோடி என்று வைத்துக்கொள்வோம்). மாநிலத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளுக்கு (உதாரணமாக இயற்கைச் சீற்றங்களில் பாதிப்படைந்த மக்களைக் காப்பாற்ற ) சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் ‘எதிர்பாரா செலவு நிதி’யிலிருந்து மாநில அரசு செலவு செய்யலாம். ஆனால், அடுத்து கூடும் சட்டமன்றத்தில், அந்தச் செலவுகளுக்குச் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்று, ‘எதிர்பாரா செலவு நிதி’யில் அத்தொகையை மீண்டும் வரவு வைக்க வேண்டும்.
மூன்றாவதாக ‘பொதுக் கணக்கு’( Public Account ) என்று ஒன்று உள்ளது. சிறுசேமிப்புப் பத்திரங்கள், பொது வைப்பு நிதி (Public Provident Fund ) போன்ற திட்டங்க ளுக்காக மக்கள் தாமாகவே தங்கள் பணத்தை அரசிடம் கொடுத்துவைக்கிற தொகையை இந்தப் ‘பொதுக் கணக்’ கில் வரவு வைத்து, அவர்கள் கேட்கும்போது வட்டியுடன் திரும்பக் கொடுக்க வேண்டும். இதில், பொது மக்களின் பணத்தை வரவு வைக்கவும், திரும்பக் கொடுக்கவும் ஆளுநரின் அனுமதி தேவை இல்லை.

கடனுக்கென ஒரு சட்டம்

மாநில அரசு வரி, வரி அல்லாத வருவாய், கடன் என்ற மூன்று வழிகளில் வருவாய் பெற்று மாநிலத் தொகு நிதியில் வரவு வைக்கும். இதில் வரி வருவாய்தான் பிரதான வருவாய் இனமாகும். இந்திய அரசியல் சட்டம், பிரிவு 256ன்படி, உரிய அதிகாரம் பெறாமல் மாநில அரசு மக்கள் மீது வரி விதிக்கவோ, வசூலிக்கவோ முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வரி வருவாயைப் பெறுவதற்கென சட்டமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றி, அதற்கு ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு வரி வருவாய் ஈட்ட ‘நிதிச் சட்டவரைவு’ (finance bill ) ஒன்று நிதி அமைச்சரால் ஆளுநர் அனுமதியுடன் சட்டமன்றத் தில் சமர்ப்பிக்கப்படும். இதனைச் சட்டமாக நிறைவேற்றி, மீண்டும் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே வரி வருவாய் ஈட்டும் அதிகாரத்தை அரசு பெற முடியும். சட்டமன்றத்தில் உரிய சட்டம் இயற்றாமலும், இயற்றிய சட்டங்களுக்கு ஆளுநரின் இசைவு பெறாமலும் மாநில அரசால் வரி வருவாய் ஈட்ட முடியாது. இவ்வாறு பெறப்பட்ட வரி வருவாய் ‘மாநில தொகு நிதி’யில் வரவு வைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 266 கூறுகிறது.

வரி அல்லாத வருவாய் இனங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு அரசுத் துறையும் தாங்கள் செய்கின்ற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கலாம் (கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தேர்வுத் துறை, வேலைவாய்ப்புத் துறை என்று எல்லா அரசுத் துறைகளிலும் பல வகைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன). சட்டத்தை மீறுவோர் மீது அபராதம் விதிக்கலாம். அரசுத் துறை வியாபார நிறுவனங்கள் லாபத்தை ஈட்டி அதனை ஈவுத் தொகையாக அரசுக்குக் கொடுக்கலாம். இவை அனைத்தும் வரி அல்லாத வருவாய்களாக ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவு வைக்கப்படும். வரி அல்லாத வருவாய் இனங்கள் மூலம் பெறப்படுவது மிகச் சொற்பத் தொகையாகவே இருக்கிறது. இதற்கு ‘நிதிச் சட்டம்’ இயற்ற வேண்டியதில்லை.

மாநில அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்றும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘நிதி பொறுப்புச் சட்டம்’ என்று ஒன்று உள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 3% மிகாமல் கடன் வாங்கலாம். இதற்காக மாநில அரசு கடன் பத்திரங்களை அளிக்க வேண்டும்.

பணம் ஒதுக்குச் சட்டம்

அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ‘மாநிலத் தொகு நிதி’யிலிருந்து பணம் எடுக்கும் அதிகாரம் வேண்டும் அல்லவா? அதற்காக ஒவ்வொரு அரசுத் துறையும் தங்களுக்கு ‘மாநிலத் தொகு நிதி’யிலிருந்து பணம் ஒதுக்க வேண்டும் என்பதைப் ‘பணம் ஒதுக்குச் சட்ட’மாக (Appropriation Act) சட்டமன்றத்தில் இயற்றி, அதற்கு ஆளுநரிடம் இசைவு பெற வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 114 கூறுகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு துறையும் ‘மானிய கோரிக்கை’கள் என்ற ஆவணத்தைச் சட்டமன்றத்தில் வைக்கின்றன. இதில் அத்துறையின் எல்லா திட்டங்களுக்கும் தெளிவான, மிக நுணுக்கமான வகையில் செலவுகளைப் பட்டியலிடுவர். இதனைத் தொடர்ந்து ‘பணம் ஒதுக்கு சட்ட’ மசோதா தாக்கல் செய்யப்படும்.

நிதிச் சட்டம், பணம் ஒதுக்குச் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு, பட்ஜெட் செயல்பாட்டுக்கு வரும். அதே நேரத்தில், இந்தச் சட்டங்களின் ஒரு பிரதி, இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரிக்கு (Comptroller and Auditor General of India) அனுப்பப்படும். அவர் மாநில அரசு, ‘நிதிச் சட்டத்’தில் உள்ளது போல வரி வசூலிக்கிறதா, ‘பணம் ஒதுக்குச் சட்டத்’தின்படி செலவு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்வார். மாநில அரசின் வரவு - செலவுக் கணக்குகளைத் தணிக்கைசெய்து அதன் மீது ஓர் அறிக்கையை ஆளுநரிடம் வழங்குவார். அதனை ஆளுநர் சட்டமன்ற விவாதத்துக்கு வைப்பார். இந்த அறிக்கையை ஆய்வுசெய்ய சட்டமன்றத்தில் ‘பொதுக் கணக்குக் குழு’ ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்தக் குழுவில் இடம் அளிக்கப்படும். ஆகவே, எதிர்க் கட்சியினரும் இக்குழுவில் இடம்பெறுவர். துறை சார்ந்த உயர் அதிகாரி இக்குழுவின் முன் அறிக்கை மீதான விளக்கங்களைத் தருவார்.

இவ்வாறு, பட்ஜெட் தாக்கல் முதல், கணக்கு முடித்து தணிக்கை செய்து அதன் மீது ஆய்வுசெய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் படி சட்டங்கள் இயற்றப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணி கட்டுக்கோப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை நம் அரசியல் சட்டம் தெளிவாகச் செய்து வைத்திருக்கிறது.

- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
தொடர்புக்கு: seenu242@gmail.com

பட்ஜெட் ஏன்? எதற்கு? எப்படி?

இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதெல்லாம் திடீரென எல்லோருக்கும் பொருளாதாரம் பற்றிய ஆவல் அதிகரித்துவிடுகிறது. வருமானவரி செலுத்துவோர் தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைத்திருக்கிறார்களா என்றும், ஏனையோர் எந்தெந்தப் பொருட்களுக்கு வரி குறைந்திருக்கிறது என்றும் கூர்ந்து கவனிப்பது வழக்கமாகிவிட்டது. அதையொட்டியே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளும் அமைகின்றன. ஆனால், பட்ஜெட் என்பது வெறுமனே இவை மட்டுமே அல்ல; வேறு பல பொருளாதாரக் கூறுகளையும் கொண்டுள்ளது.

நமது அரசியல் சாசனத்தில் உள்ள பொருளாதாரச் சட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை பட்ஜெட் தொடர்பான சட்டங்கள்தான். அரசின் வருவாய் எப்படி ஈட்டப்பட வேண்டும்? அவற்றை எப்படிச் செலவுசெய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் எவ்வாறு விவாதித்துச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் சட்டப் பிரிவுகள்தான் விவரிக்கின்றன. ஆக, பட்ஜெட் என்பதே ஒரு நீண்ட ஜனநாயக விவாதத்துக்குப் பிறகு வெளிவர வேண்டிய பொருளாதார அறிக்கை. இந்த விவாதத்தில் நம் சமூகமும் ஊடகங்கள் மூலமாகப் பங்குபெறுவதே அடிப்படை ஜனநாயகமாகும்.

பட்ஜெட் என்றால் என்ன?

ஒரு ஆச்சரியமான தகவல், இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது. அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே உள்ளது. இதற்கு அரசின் ஆண்டு வரவு - செலவுக் கணக்கு என்று அர்த்தம். அதனால்தான் பொதுவாக, இதனை பட்ஜெட் என்று அழைக்கிறோம். அரசியல் சட்டப் பிரிவு 112ன்படி, அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு நிதி அறிக்கையை நாடாளுமன்றம் (அ) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய குடியரசுத்தலைவர்/ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இங்கே அட்டவணையில் கொடுக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு (2015 -16) தமிழக அரசு தாக்கல் செய்த வரவு - செலவுக்குக் கணக்கின் சுருக்கம். இதனை சட்டமன்றத்தில் தாக்கல்செய்து, அதன்மீது நிதியமைச்சர் ஓர் உரை நிகழ்த்துவார். இந்த உரையில் அரசின் முக்கிய வருவாய் சேர்க்கும் வழிகள், செலவுகள் போன்ற அம்சங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பார். அதேநேரத்தில், வருவாய் பெறும் வழிகள், செலவுக்கான விரிவான கணக்குகள் எல்லாம் தனித் தனி அறிக்கைகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த அறிக்கைகளை எல்லாம் விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டதாக சட்டமன்றம் குரல் வாக்குமூலம் அறிவிக்கும். இப்படிச் செய்வதாலேயே பட்ஜெட் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகாது. வரி வருவாய் வழிகளையும், செலவு செய்யும் வகைகளையும் தனித்தனியாக விவாதித்து, அதற்கான சட்டங்களைச் சட்டமன்றம் ஏற்படுத்தும். அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆளுநர் இசைவு வழங்கிய பின்னரே, பட்ஜெட் நடைமுறைக்கு வரும்.

வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு

ஆண்டு நிதி அறிக்கையில் நடப்பாண்டு, கடந்தாண்டு கணக்குகள் உட்பட நான்கு கணக்குகளைத் தாக்கல் செய்வது வழக்கம். அவை...

வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு:

எந்த ஆண்டுக்காக நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதோ, அந்த ஆண்டுக்கான வருவாய் - செலவுகளின் மதிப்பீடு.

நடப்பு நிதி ஆண்டின் திட்ட மதிப்பீடு:

இதில் நடப்பு நிதி ஆண்டின் திட்ட மதிப்பீடு விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும்.

நடப்பு நிதி ஆண்டின் திருத்திய மதிப்பீடு:

ஓர் ஆண் டின் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த ஆண் டின் இறுதிக்குள் வரவு - செலவுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் வராமல் போயிருக்கலாம், அதற்குத் தக்கவாறு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்திருக்கலாம். அல்லது சில புதிய செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். இதனை எல்லாம் அடுத்து வருகின்றன சட்டமன்றக் கூட்டங்களில் திருத்திய மதிப்பீடுகளாக ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்படும் கணக்கு.

கடந்த ஆண்டு வரவு - செலவுக் கணக்கு:

கடந்த ஆண்டின் நிதிநிலைக் கணக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்து, முழுமையாக இறுதி செய்யப்பட்ட வருவாய்களையும் செலவுகளையும் பட்டியலிடுவது.

இப்படி நான்கு கணக்குகளையும் ஒன்றாக இணைத்து வெளியிடுவதற்குக் காரணம், இவற்றை ஒப்பிட்டு ஆராய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதே. நடப்பு ஆண்டின் திட்ட மதிப்புக்கும் திருத்திய மதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளுக்கான காரணங்களை ஆராய்வது, கடந்த ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட கணக்குக்கும் தற்போதுள்ள திட்ட மதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்வது என்று பல விதங்களில் நிதிநிலை கணக்கு ஆராயப்படும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனி

ஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1 துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31-ல் முடியும். எனவேதான், நிதிநிலை அறிக்கையில் 2016 -17 என்று இரண்டு ஆண்டுகளைத் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்துக்குள் அரசின் விரிவான வருவாய் - செலவுகள் விவாதிக்கப்பட்டு சட்டங்களாக நிறைவேற்றப்படும். அதன் பிறகு, அந்த நிதி ஆண்டின் புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். சட்டமன்றத் தேர்தல் நடந்த ஆண்டுகளில் மட்டும் கொஞ்சம் தாமதமாக அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

விவரமான நிதிநிலை அறிக்கையில் அரசின் எல்லாத் துறைகளின் வரவு - செலவுகளும் தனித்தனியே கொடுக்கப்படும். ஆனால், இவற்றில் அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் நிதிநிலை மட்டும் இருக்காது. ஒரு நிறுவனத்தில் அரசு முதலீடு செய்தாலோ, அல்லது அதன் செலவுக்கு மானியம் அளித்தாலோ அவை அத்துறையின் செலவுகளாக இருக்கும். அதேபோல் ஓர் அரசு நிறுவனம் லாபம் ஈட்டினால், அதன் ஈவுத் தொகை (லாபத்தில் பங்கு) அரசின் வருவாயாகக் காட்டப்படும்.

இது மட்டுமல்லாமல், பொதுத் துறை நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குகள் தனியாகத் தாக்கல் செய்யப்படும். அதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கலாம். ஒரேயொரு வித்தியாசம், பொதுத் துறை நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குக்குச் சட்டமன்ற ஒப்புதல் தேவை இல்லை.

நிதி அமைச்சரின் உரையுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசின் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஓர் உத்தேசக் கணக்கும் இருக்கும். இது அரசின் கடன், வரி வருவாய், தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவை அடுத்த மூன்று ஆண்டுகளில் எவ்வாறு அதிகரிக்கும் என்பதைக் குறிப்பிடும் ஓர் உத்தேசக் கணக்கு.

நிதி அமைச்சரின் உரையில் இருக்கும் விவரங்களை யும், இங்குள்ள அட்டவணை விவரங்களையும் வைத்துக் கொண்டு, அரசின் நிதிநிலை பற்றி நுட்பமான கருத்து களைக் கூற முடியாது. அரசின் நிதிநிலையின் பொதுவான போக்கு எப்படி உள்ளது என்பதையே அறிய முடியும்.

- இராம.சீனுவாசன், பேராசிரியர்
தொடர்புக்கு: seenu242@gmail.co

எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி சாதித்த இளைஞர்

எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி திட்டமிட்டு செயலாற்றி ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சாதித்துக் காட்டியுள்ளார்.

கோவை கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ கண்காட்சி நேற்று தொடங்கியது. வேளாண் தொழில், ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் எஸ்.அருண்குமார் அமைத்துள்ள ஆடு வளர்ப்பு குறித்த அரங்கு கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதே இடத்தில் திடகாத்திரமாக நிற்கும் ஆட்டில் இருந்து பாலை கறந்து தேநீர் தயாரித்து ரூ.20-க்கு ஒரு கோப்பையில் வழங்குகிறார். அரங்கில் அவர் நிறுத்தி வைத்துள்ள தலச்சேரி இனத்தைச் சேர்ந்த ஆடுகளும், குட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றி வருபவர்கள், அவரது தொழில்முறை குறித்து விசாரித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கூடவே, சூடாக தேநீர் அருந்திச் செல்கின்றனர்.

வளர்ப்பதற்கு ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்கிறார். ஒரு கிலோ ரூ.350 என விலை நிர்ணயித்து ஆடுகள் விற்கப்படுகின்றன.

அருண்குமார் வசம் தற்போது 200 தலச்சேரி ஆடுகள் இருக்கின்றன. தனது சொந்த ஊரிலேயே ஆட்டுப் பால் விற்பனையிலும், ஆடு விற்பனையிலும் நல்ல வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கும் அவர், எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு களத்தில் இறங்கியது என்பது கூடுதல் தகவல்.

தொழில்முறை குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை கே.சுப்ரமணியம், கூலித்தொழிலாளி. தாயார் சிவகாமி. கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு முடித்தேன். படிப்பை முடித்ததும் அடுத்தவரிடம் சென்று வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. வேளாண்துறையில் தொழில் நடத்த வேண்டும் என்பது லட்சியம். தொடர்ந்து, பல்வேறுகட்ட யோசனைக்கு பின்னர் ஆடு வளர்ப்பில் இறங்கினேன். தொடக்கத்தில் கடன் வாங்கி ரூ.3 லட்சத்தில் கேரளம் சென்று 40 ஆடுகளை வாங்கி வந்தேன்.

ஆடு வளர்ப்பு குறித்து கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருந்தாலும் ஆடுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தன. அவற்றை நேர்த்தியாக பராமரித்து வருமானம் ஈட்டுவது என்பது, தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தும் முடியவில்லை. 2012-ம் ஆண்டு வரை இடர்பாடுகளை சந்தித்து வந்தேன்.

தற்போது, நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஆட்டு பால் வயிற்றுப்புண், தைராய்டு நோய், உடல்சோர்வு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளைப் போக்கும் என்பதால் பால் விற்பனை நன்றாக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம்.

தலச்சேரி ஆடுகள் மாமிச வகைக்கு உகந்தது. இரண்டு ஆண்டு கடந்த ஆட்டின் எடை மட்டும் 80 கிலோவை தாண்டி இருக்கும். இதில், நேர்த்தியுடன் இயங்குவதால் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தற்போது, 5 பணியாட்களை வைத்து தொழில் நடத்தி வருகிறேன்.

எனது தாயாரும் உறுதுணையாக இருக்கிறார். இதைத்தவிர காங்கேயம் வகை நாட்டு மாடுகள் பராமரிப்பும் செய்து வருகிறேன். அதிலும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்றார்.

ஆடு வளர்ப்பில் சாதித்துள்ள அருண்குமார், ஆடு வளர்ப்பு ஓர் அனுபவக் கையேடு என்ற புத்தகத்தை ரூ.30-க்கு விற்பனை செய்து வருகிறார். அரங்குக்கு வரும் பெரும்பாலான பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை தவறாமல் வாங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

Jul 14, 2016

காற்றினிலே வரும் கீதம்

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் தொண்டையிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். ஒன்றன் பின் ஒன்றாக வேறு பல பறவைகளும் அவற்றுடன் சேர்ந்துகொள்ளும்.

பறவைகளின் வைகறை இசையைப் போல மனதுக்குச் சுறுசுறுப்பூட்டுவது வேறெதுவுமில்லை. அதில் எண்ணற்ற சொற்கட்டுகளும், சங்கதிகளும், ராகங்களும், சுரங்களும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும். அது ஒரு மொழி. அதில் சொற்கள் இல்லாதிருந்தாலும் பொருள் செறிந் திருக்கும். அந்தப் பொருள் நமக்கு விளங்காமல் போனாலும் அந்த இசை வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவதால், நமது மனதிலும் மகிழ்ச்சியுண்டாகும். உயிர் தரித்திருப்பதைக் கொண்டாடும் மனமிருந்தால் அது சாத்தியம்.

ஏன் பாடுகின்றன?

பறவைகள் ஏன் பாடுகின்றன என்று கேட்டால், அதற்குக் காரணம் அவை அதற்காகவே படைக்கப்பட்டவை என்றுதான் சொல்ல முடியும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குரல்வளை அமைப்பிலிருந்து பறவைகளின் குரல்வளை வேறுபட்டது. அது மென்மையான தசை நார்களால் ஆனது. குருவி போன்ற சிறிய உடலுள்ள பறவைகளுக்கு அது சிறியதாக இருப்பதால், உயர் அதிர்வெண் சுருதிகளுள்ள ஒலிகளை மட்டுமே அதனால் வெளிப்படுத்த முடியும். பெரிய பறவைகளின் குரல் கர்ண கடூரமாயிருப்பதற்கு அவற்றின் குரல்வளை பெரியதாயிருப்பதே காரணம். தான் கூடு கட்டியிருக்கிற இடம், தனக்குரிய சமஸ்தானம் என்று மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவே ஒரு பறவை பாடுகிறது எனச் சில ஆய்வர்கள் கூறுகிறார்கள். உண்மையில், மனிதனின் குரல்வளை இசையொலிகளை எழுப்பும் உறுப்பாகப் பரிணமிக்கவில்லை என்றே சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பறவைகளைப் போல இசையொலி மூலம் தமது இணைகளைக் கவர்ந்திழுக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கும் (விலங்குகளுக்கும்) இல்லை என்பதே அதற்குக் காரணம்.

குளிர் மிகுந்த பகுதிகளிலிருந்து புறப்பட்டு, மிதவெப்பப் பகுதிகளுக்கு இனப் பெருக்கத்துக்காக வரும் பறவைகளில் ஆண்களே தமது கூடுகளைக் கட்டத் தொடங்குகின்றன. கூடுகளைக் கட்டி முடித்ததும் அவை உரத்த குரலில் பாடி, ‘வீடு தயார்’ என்று இணைகளுக்கு அறிவிக்கின்றன. வேறு ஆண் பறவை ஏதாவது அக்கம்பக்கத்தில் இருந்தால், அவற்றை எச்சரித்து வேறு இடத்துக்குப் போகும்படி கோபமாக மிரட்டவும் ஆண் பறவை குரலை உயர்த்திப் பாடும்.

ஓர் இணை கிடைத்து, அது கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும்போதும் ஆண் பறவை பாடுகிறது. அது பெண் பறவையை மகிழ்விப்பதற்காக இருக்கலாம். அதை விடவும், அந்த நேரத்தில் அதன் உடலும் மனமும் உச்சகட்ட ஆற்றலுடன் இருப்பதே அதன் தொண்டையிலிருந்து இசை பீறிட்டெழுவதற்குக் காரணம். கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பறவைகள், அருகே இணை ஏதும் இல்லாத நிலையிலும் வசந்தத்தின் இனப் பெருக்கக் காலத்தில் உரத்த குரலில் பாடுகின்றன. அது ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டலாகவே தோன்றுகிறது.

முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டதும் பாட்டுப் பாடுவது குறைகிறது. ஆணுக்கு, வெளியே சுற்றித் திரிந்து இரை தேடி எடுத்து வர வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கிறது. சில பறவை இனங்களில் ஒரு ஈடு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே பெண் பறவை இன்னொரு ஈடு முட்டைகளை இட்டுவிடுவது உண்டு. அப்போது வசந்த காலமாக இல்லாவிட்டாலும் ஆண் பறவை அலகை மூடியவாறே வாய்க்குள்ளாகப் பாட்டுப் பாடும்.

காலையில்தான் பாட்டு

பாட்டுப் பாடுவதற்கு நேரம், காலம், பருவம் எல்லாம் பொருந்திவர வேண்டும். பெரும்பாலான பறவைகள் கிழக்கு வெளுக்கத் தொடங்கும்போது பாடத் தொடங்குகின்றன. அப்போதும் ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு குறிப்பிட்ட கணத்தில்தான் பாட்டை ஆரம்பிக்கின்றன. மாலையில் அவை கூடுகளுக்குத் திரும்பும் நேரத்தில், மீண்டும் கச்சேரி உச்ச ஸ்தாயியில் தொடங்கும். ஆனால், காலை வேளையில் நடப்பதைவிடச் சற்று மென்மையான சுரங்களுடன் இருக்கும். அதில் இசையொலியைவிட, சளசளப்புக் கூச்சலே அதிகம். ஆற்றங்கரை அரச மரங்களில் மாலை நேரங்களில் பலவிதமான பறவைகள் தத்தம் கூடுகளில் அமர்ந்துகொண்டு சத்தம் போடும். அதை இசையென்று வகைப்படுத்த மிகவும் தாராளமான மனநிலை தேவை.

சில பறவைகள் விடியற்காலையில் மட்டும் பாடும். ஆந்தைகளும் கோட்டான்களும் இரவின் இருட்டில் மட்டுமே குரல் கொடுக்கும். அதை இசையாக யாரும் குறிப்பிடுவதில்லை. அலறல் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், பெண் ஆந்தைகளுக்கு அது கந்தர்வ கானமாயிருக்கும்.

இருள் பிரிவதற்கு முன்பே கண் விழித்துவிடும் ஸ்விஃப்ட் (உழவாரன்) பறவைகள், வானத்தில் பெரும் உயரத்துக்கு எழும்பிச் சூரியனின் முதல் செங்கதிர்கள் பூமியின் தரையில் படுவதற்கு முன்பாகவே எதிர்கொண்டு வரவேற்றுப் பாடத் தொடங்கும். வானம்பாடிகள் காலையிலும் பாடும், மாலையிலும் பாடும். நைட்டிங்கேல் பறவையும் இரு வேளையும் பாடும் பழக்கமுள்ளது.

எல்லாப் பறவைகளுமே தமக்குரிய குரல் வளத்துடன் பாடுகின்றன. மனிதர்கள்தான் அவற்றை இசை, சளசளப்பு, கூச்சல் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றனர். பறவைகள் அடைகாக்கும்போது மென்மையான குரலில் முணுமுணுக்கின்றன. முட்டைக்குள் வளரும் குஞ்சுகள் அதிலிருந்து வெளிப்படுகிறபோது தம் பெற்றோரை அடையாளம் காண அது உதவுகிறது. அவை முதலில் அதே போன்ற ஒலிகளை எழுப்பினாலும், வளர வளரத் தத்தம் இனத்தாரிடமிருந்து பல்வேறு இசையொலிகளை எழுப்பக் கற்றுக்கொள்வதாகப் பறவையியலாளர்கள் கருதுகின்றனர்.

பயிற்சி மூலமே பாட்டு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வர் குழு ஒரு ஃபிஞ்ச் குருவிக் குஞ்சை, முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் தனிமைப்படுத்திப் பராமரித்தது. அது ஓரளவுக்குச் சுமாரான சில இசையொலிகளை எழுப்பினாலும் சுயேச்சையாக வாழும் குருவிகளின் அளவுக்குப் பல்வேறு இசையொலிகளை எழுப்பவில்லை. இதன் மூலம் ஃபிஞ்ச் குருவிகள் பிற குருவிகளிடமிருந்தே முழுமையான இசைப் பயிற்சியைப் பெறுகின்றன என்பது கண்டறியப்பட்டது. மற்றெல்லா இனப் பறவைகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து, அந்தக் குருவிக் குஞ்சுக்குத் துணையாக இன்னொரு குருவியைக் கூண்டில் வைத்தபோது, பெரிய குருவி எழுப்பிய இசையொலிகளைக் கேட்டுக் கேட்டுக் குருவிக் குஞ்சும் அவற்றைக் காப்பியடித்துப் பாடத் தொடங்கிவிட்டது. பறவையிசை என்பது பிறவிக் குணமல்ல என்பதும் பயிற்றுவிக்கப்படுவதே என்பதும் இதன் மூலம் அறியப்பட்டது.

இன்னொரு சோதனையில், பல ஃபிஞ்ச் குருவிக் குஞ்சுகளை ஒரே அறையில் வசிக்க வைத்தபோது எல்லாக் குஞ்சுகளும் ஒரே மாதிரியான குரலில், ஒரே சுரத்தைப் பாடின. சுயேச்சையாகத் திரியும் ஃபிஞ்ச் குருவிக் கூட்டத்தில் ஒலிக்கிற பல்வேறு சுருதிகளை இந்தப் பரிசோதனைக் கூட்டத்தில் கேட்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தின் இசையே சுயேச்சையான கூட்டத்தின் இசையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

தாய்ப் பறவை அடைகாக்கும்போதும், குஞ்சுகளுக்கு இரையூட்டுகிறபோதும், இளம் பருவத்திலும் கற்றுத்தருகிற பாட்டைத்தான் குஞ்சுகள் தம் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த ஃபிஞ்ச் பறவைகள் எல்லாம் ஒரே சுரத்தை ஒரே மாதிரியாகப் பாடின. ஆனால், வேறு மாகாணத்தில் வேறு ஒரு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவை வேறு சுரத்தில் பாடின. லயம்கூட வேறுபட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் ஆய்வர்கள் தமது வட்டாரத்தில் வசித்த குருவிகளின் இசைக்கு ஏற்பச் சொற்களைப் போட்டுப் பாடலை இயற்றினார்கள். ஆனால், வேறு மாகாணங்களில் வசித்த ஃபிஞ்ச் குருவிகளின் இசைக்கு அந்தச் சொற்கள் பொருந்தவில்லை.

ஜே, மாக்கிங்பர்ட் போன்ற பறவைகள் தம்முடன் கூடி வாழும் வேறு இனப் பறவைகளின் பாட்டுகளைக் காப்பியடிப்பதும் காணப்பட்டிருக்கிறது. வீடுகளில் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்படும் நீல ஜே பறவைகள் தமது காதில் விழும் சலவை இயந்திர ஒலி, நாய்களின் குரைப்பு போன்றவற்றைப் போலவே ஒலியெழுப்பும். ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட மாக்கிங் பர்ட் தன் எஜமானரின் இருமல் ஒலியைத் தத்ரூபமாக எழுப்பியது. அதைக் கேட்டுச் சிரித்த எஜமானியின் சிரிப்பையும் அப்படியே எதிரொலித்தது.

பறவைகளின் இசையில் ஓர் அடிப்படையான மர்மம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை இசை மூலம் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் ரகசியங்களை விண்டுணர மனிதர்களால் இயலவில்லை. ஆனாலும் கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்குத் தணியாமலிருக்கிறது. குக்கூ என்று அது எழுப்பும் ஒலியே அதன் ஆங்கிலப் பெயராகிவிட்டது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.