Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Jul 9, 2016

வலிகளுக்கு விடை தரும் ‘ஒற்றட முறைகள்’

உடல் வலி லேசாகத் தோன்றியதுமே, வலி நிவாரணி மருந்துகளைத் தேடிப் பெரும்பாலோரின் மனம் அல்லாடத் தொடங்கிவிடுகிறது” என்கிறது ஓர் ஆய்வு. இதுவரை தடை செய்யப்பட்ட எத்தனை வலிநிவாரணி மாத்திரைகள், நம் உடலுக்குள் நீச்சலடித்துப் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? சாதாரண உடல் வலிக்கும் சிறிய வீக்கங்களுக்கும் வலிநிவாரணி (Analgesic), வீக்கமுறுக்கி (Anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொண்டு சுய மருத்துவர்களாக மாறிவிட்ட `மாடர்ன்’ மக்கள், முன்னோர் பின்பற்றிய ‘ஒற்றடம்’ எனும் சிறந்த சிகிச்சையை மறந்ததன் விளைவாக, பல்வேறு பக்கவிளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது நிதர்சனம்.

ஒற்றட முறைகளைப் பற்றி சித்தர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். சித்தர்களின் ஒற்றட முறைகளும், வழக்கத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றட முறைகளும் எண்ணிலடங்காதவை.

வாத நோய்கள் தீர

கடுமையான உடல் உழைப்பு, சிறிதும் உடல் உழைப்பின்மை (Sedentary Lifestyle) போன்ற காரணிகளால் உண்டாகும் உடல் வலி மற்றும் இடுப்பு பொருத்து வலி, கழுத்து வலி ஆகியவற்றுக்கு ஒற்றட முறைகள் நல்ல பலன் கொடுக்கும். மருத்துவ எண்ணெய்களான வாத நாராயணன் தைலம், குந்திரிக தைலம், பிண்டத் தைலம் ஆகியவற்றை வலியுள்ள இடங்களில் பூசி, அதன் மேல் ஆமணக்கு, நொச்சி, தழுதாழை போன்ற இலைகளைக்கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம்.
ஓமம், முடக்கறுத்தான் இலையைக்கொண்டு செய்யப்படும் ஒற்றடம் வாத நோயாளிகளுக்கு உகந்தது. பிரம்மி இலை ஒற்றடம் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் என்கிறது சித்த மருத்துவம். ஒற்றடம் கொடுப்பதால் உண்டாகும் வெப்பத்தால், குருதிக்குழல் விரிவாக்கம் (Vasodilation) நடைபெற்று, தடைபட்ட ரத்த ஓட்டம் அதிகரித்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்கிய நச்சுப்பொருட்களும் விரைவாக வெளியேற்றப்படுகின்றன.

கட்டிகளுக்கும் வீக்கங்களுக்கும்

மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சைத் துண்டு ஆகியவற்றை ஒரு துணியில் முடிந்துகொண்டு, சூடேறிய நல்லெண்ணெயில் மூழ்கவிட்டு, சூடு குறைந்த பின் அடிபட்ட வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்க, வலியின் தாக்கம் படிப்படியாகக் குறையும். இன்றும் மலைக்கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் உடல் வேதனையைக் குறைக்க, வண்ண வண்ண மாத்திரைகளைத் தேடாமல், உப்பைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கும் மருத்துவ முறையை மேற்கொள்கின்றனர். நோயின்றி வாழ, உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொண்டு, ஒற்றடம் கொடுப்பதற்கு மட்டும் உப்பின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

பழங்காலத்தில் போர்களின்போது, வீரர்களுக்குக் காயங்களால் ஏற்பட்ட வீக்கங்கள் மற்றும் வேதனையைக் குணமாக்க, ஒற்றட முறைகள் அதிக அளவில் முதலுதவி சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெந்நீர் ஒற்றடம்

கம்பளித்துணி அல்லது காடாத்துணியை கொதிக்கும் வெந்நீரில் நனைத்து, பின் நீரைப் பிழிந்துவிட்டு, வலியுள்ள இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கவும் இம்முறையைப் பயன்படுத்தலாம். பொதுவாக வெந்நீர் ஒற்றடம் கட்டிகளுக்கும் வீக்கங்களுக்கும் சிறந்தது. அதற்காக, எலும்பு முறிவால் உண்டான வீக்கத்தை ஒற்றட முறைகளால் சரி செய்துவிடலாம் என்பது அறியாமை. பொதுவாக ஒரு வீக்கமோ, கட்டியோ நீண்ட நாட்கள் தொடரும்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் முக்கியம்.

கபநோய்கள் மறைய

மார்புச் சளி, இருமல் போன்ற கபநோய்கள் நீங்க, நெஞ்சுப் பகுதியில் கற்பூராதி தைலத்தைத் தடவி, செங்கற்பொடி அல்லது சுண்ணாம்பு காரைத்தூள் (அ) கோதுமைத் தவிடு ஆகியவற்றால் ஒற்றடம் கொடுக்க நோய் குணமாகும். பயன் இல்லாத நிலையில், தேவைப்படும்போது மட்டும் `ஆண்டிபயாடிக்’ மருந்துகளை நாடி சென்றால், மருந்துகளின் பக்கவிளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். நெஞ்சில் கட்டிய கோழையை வெளியேற்ற, அரிசித் தவிடு ஒற்றடமும் கற்பூரவல்லி இலை ஒற்றடமும் உதவும்.

முள் தைத்த காயத்துக்கு

முட்கள் அல்லது கூரிய கற்கள் பாதங்களில் குத்துவதால் உண்டாகும் காயத்துக்கு, குத்திய பொருளை நீக்கிய பின், காயம்பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவி, எருமை சாணத்தைச் சூடேற்றித் துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்க விரைவில் காயம் காணாமல் போகும் என்கிறார்கள் கிராம மக்கள். `உப்பு நல்லெண்ணெய்’ ஒற்றடமும் இதற்குப் பயன் அளிக்கும்.

சில நோய்களுக்கு

வயிற்று வலி குறைய, ஆமணக்கு விதையால் ஒற்றடம் கொடுப்பது நல்லது. சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுவலியைப் போக்க ஆமணக்கு இலை, வெற்றிலையை வதக்கி வயிற்றுப் பகுதியில் ஒற்றடம் கொடுக்கலாம். உடலைத் தேற்றுவதற்காக முட்டையைச் சாப்பிட்ட பின், அதன் ஓட்டை தூக்கி எறியாமல், ஓட்டை கருக்கிய சாம்பலைக்கொண்டு ஒற்றடம் கொடுக்க வாத, கப நோய்கள், சில வகையான காய்ச்சல்களும் நீங்கும். புளி, பூண்டு, உப்பு சேர்ந்த ஒற்றடக் கலவை மூட்டு வலிகளுக்குச் சிறந்தது. மணலை லேசாக வறுத்து, துணியில் முடிந்து இசிவுகளுக்கும் வலிகளுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். புளியங்கொட்டையில் சிறிது நீர் விட்டு அரைத்துப் பசைபோலச் செய்து, துணியில் முடித்து ஒற்றடம் கொடுக்க ரத்தக் கட்டுகள் மறையும்.

பயன்படும் பொருட்கள்

வாத நாராயணன் இலை, வேப்பிலை, எருக்க இலை, துளசி இலை, துத்தி இலை, புளிய இலை போன்ற மூலிகைகளையும் பயன்படுத்தலாம். ஒற்றடத்துக்குத் தேவையான சூட்டை நீண்ட நேரம் நிலைக்கச் செய்யும் பொருட்களான அரிசி தவிடு, உப்பு, கொள்ளு மாவு, ஓமம், நெல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இலைகளை வதக்க ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஒற்றட ‘பேக்

மேலேகுறிப்பிட்ட மூலிகைகளை உலரவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் வதக்கி, துணியில் முடிந்து பயன்படுத்தும் வகையில் ரெடிமேடாக, சில ஒற்றட `பேக்’குகளைத் தயார் செய்துகொள்ளலாம் (Dry packs). அல்லது இலைகளைப் பச்சையாக, அவ்வப்போதுத் தாவரங்களிலிருந்து எடுத்து, துண்டு துண்டாக நறுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி, பின் துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்கப் பயன்படுத்தலாம்.
உடலில் ஏற்படும் வலியானது, செயற்கையான ‘சிந்தடிக் ’ மருந்துகளால் குறையாமல் போகலாம். ஆனால், அன்பு உறவுகள் அளிக்கும் இதமான இயற்கை ஒற்றடத்தால் நிச்சயம் குறையும் என்பது உளவியல் உண்மை.

ஒற்றடம்: கவனிக்க வேண்டியவை

# லேசான தலைவலிகளுக்கு, நம் உள்ளங்கையைக் கொண்டு (உள்ளங்கை ஒற்றடம்) நெற்றி மற்றும் தலைப் பகுதியில் தடவும்போது உண்டாகும் இதமான வெப்பமும் நிச்சயம் நிவாரணம் அளிக்கும்.
# ரத்தக்கட்டுகள் குறையவும், வலியின் தீவிரம் குறையவும், மூட்டுகளின் இயக்கங்கள் சிறப்படையவும் ஒற்றட முறைகளைப் பின்பற்றலாம்.
# நாட்பட்ட புண்கள், உணர்ச்சியற்ற தோல் பகுதி, புற்று கட்டி ஆகியவற்றில் ஒற்றடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
# அதிகமான சூட்டில் ஒற்றடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒற்றடச் சூட்டின் காரணமாகத் தோலில் ஏதேனும் பாதிப்பு உண்டானால், அவ்விடத்தில் தடவத் தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வு.
# சித்த மருத்துவத்தில் உள்ள குங்கிலிய வெண்ணெய் எனும் களிம்பையும் பயன்படுத்தலாம்.
# ஒற்றட முறைகள் மற்றும் ஒற்றடத்துக்குப் பயன்படும் மூலிகைகள் பற்றி அறிந்துகொள்ள அருகிலுள்ள அரசு அல்லது பதிவு பெற்ற சித்த, ஆயுர்வேத மருத்துவர்களை அணுகலாம்.

மரபு மருத்துவம்: மருந்தாகும் நாட்டுக் கோழி... நோய் தரும் பிராய்லர் கோழி

கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர வழியின்றி, பல்வேறு நோய்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறது பிராய்லர் கோழி.

மரபைத் தொலைத்த பிராய்லர்

ஹார்மோன் மருந்துகளால் எலும்பு சார்ந்த நோய்கள், வாழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளால் கண் நோய்கள், அதிக உணவால் உடல் பருமன் என நோய்களின் கூடாரமாக உள்ளன பிராய்லர் கோழிகள். மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்திரிக்காய் எப்படி நம் உடலுக்கு எதிரானதோ, அதேபோலத்தான் மரபைத் தொலைத்த பிராய்லர் கோழிகளும்.

நோய்கள் தயார்

பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப்போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்தான். குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடலின் இயக்கங்களைப் புரட்டிப்போடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவருகின்றன பிராய்லர் கோழி ரகங்கள்.

அளவை மிஞ்சும் ஆன்டிபயாடிக்

எல்லாச் சூழ்நிலைகளிலும், நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும், உடல் எடையை அதிகரிக்கவும் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் `ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் விளைவால், ரெசிஸ்டண்ட் பாக்டீரியாக்கள் (அந்த மருந்துகளை எளிதில் சமாளிக்கும் பாக்டீரியாக்கள்) அதிகரித்து, கோழிகளிடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது. இந்த நோய்களின் தாக்கம், அதைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல நீள்கிறது.

மருந்தாகும் நாட்டுக் கோழி

உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம். நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.

தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. காமத்தைத் தூண்டும் உணவுப் பட்டியலில் நாட்டுக் கோழிக்கு நிச்சயம் இடமுண்டு. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

வெப்பம் தரும்

கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு. பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டும். வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில், வெப்பத்தின் பிரதிநிதியான கோழிக் கறியை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணத் தொந்தரவுகள் வரக்கூடும்.

தெரியாத கருங்கோழி

வெள்ளை வெளேரென பிராய்லர் கோழி ரகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இன்றைய இளம் தலைமுறைக்குக் கருங்கோழி என்ற ஒன்று நம்மிடையே வாழ்வது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாத நோய் முதலியவை கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.

முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் மருத்துவக் குணத்திலும் மேலோங்கி நிற்பது கருங்கோழியின் தனிச்சிறப்பு. கருங்கோழி, ‘கடக்நாத்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஓமம், பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.

எங்கும் எதிலும் பிராய்லர்

ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது. சிக்கன் 65, சிக்கன் டிக்கா, லாலி-பாப் சிக்கன், கிரில் சிக்கன், சபர்மா என நோய் உண்டாக்கும் பிராய்லர் கோழிகளைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுக்கு மயங்காமல், நாட்டுக் கோழி ரகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது.

சில இடங்களில், பல நாட்களாகக் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி (Frozen chicken) மூலம் தயாரிக்கப்படும் உணவு, பல உடல் உபாதைகளை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. சுவைக்காகவும் அலங்காரத்துக்காகவும் இறைச்சி உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளும் வேதிப்பொருட்களும் நம் உடலுக்குள் களேபரத்தை உண்டாக்கி, நிச்சயம் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும். அதிலும் இன்றைய உணவு வணிகம், இளைஞர்களைத் தினமும் அசைவ உணவைச் சாப்பிட வைத்து வருவாயைப் பெருக்க மறைமுக அரசியல் செய்துவருவதால் கவனம் அத்தியாவசியம்.

மரபின் சின்னம் கோழிகள்

“கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டி” - எனச் சேவல் சண்டைகளின் நயத்தை விளக்குகிறார் கம்பர். சோழ நாட்டின் தலைநகரமே கோழியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. வீரம் மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்கிய கோழியினங்கள், இப்போது உடல் குறையோடு முழுக்க முழுக்க வியாபாரத்துக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி உணவுப் பிரியர்கள் பிராய்லர் கோழிகளைத் தவிர்த்து, காலம் மற்றும் உடல்நிலை சார்ந்து நாட்டுக் கோழி இனங்களை உட்கொள்வது நல்வாழ்வுக்குப் பெரிதும் உதவும்.

ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது.

நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

“எனக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும்! இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே!” என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, ‘அது போன மாசம், இது இந்த மாசம்' எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.

உணவே அடிப்படை

ஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு ‘ஹச்-ஹச்’ எனத் தும்மாமலும், `லொக்-லொக்’ என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா?

ஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை? இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி.

எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது எப்படி?

நோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும். ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Menta# Stress) ஏற்படும்போது, ‘Cortisol’ ஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

`நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது’ என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

கருப்பட்டி

சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.

`சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது.

சுக்குக் காபி, இஞ்சி டீ

“குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல `சுக்கு, இஞ்சினு’ தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்” எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல்! இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்!

மஞ்சள் மகிமை

மஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cel# membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது.

வண்ண வண்ணப் பழங்கள்

பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற `சிட்ரஸ்’ வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.

தீனிகளுக்கு விடை கொடுப்போம்

மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

பரிசோதனை ரகசியங்கள் 33: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?

உடல் உறுப்புகளின் அமைப்பையும் பாதிப்பையும் கண்டறிய எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப் பலதரப்பட்ட பரிசோதனைகள் வரிசைகட்டி நின்றாலும், அந்த உறுப்புகளுக்கு ரத்தத்தைக்கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் வெளி அமைப்பு, உள் அமைப்பு, ரத்த ஓட்டத்தின் நிலைமை போன்றவற்றைத் தெளிவாகவும் துல்லியமாகவும் கண்டறிய ஒரு சிறப்புப் பரிசோதனை உள்ளது. அது ‘ஆஞ்சியோகிராபி’ (Angiography). இந்தப் பரிசோதனைப் படங்களுக்கு ‘ஆஞ்சியோகிராம்’ (Angiogram) என்று பெயர்.

சி.டி. ஸ்கேனைப்போலவே இதுவும் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைதான் என்றாலும், ஒரு வித்தியாசம் உண்டு. ரத்தக்குழாய்களின் மீது எக்ஸ் கதிர்களை நேரடியாகச் செலுத்தினால், படம் எடுக்க முடியாது. அயோடின் கலந்த ஒரு சாயத்தை ரத்தக்குழாய்க்குள் செலுத்திய பிறகு, அதன் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்தினால், படம் எடுக்க முடியும். அதில் ரத்தக்குழாயின் எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஆஞ்சியோகிராம் வகைகள்

ஆஞ்சியோகிராம் எடுக்கப் படும் விதத்தைப் பொறுத்து இதில் பல வகை உண்டு. முக்கியமானவை இவை:
1. டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராபி (Digital Subtraction Angiography - DSA).
2. கம்ப்யூடட் டோமோகிராபி ஆஞ்சியோகிராபி (Computed Tomography Angiography - CTA).
3. மேக்னடிக் ரெசனன்ஸ் ஆஞ்சியோகிராபி (Magnetic Resonance Angiography - MRA).
4. கரோனரி ஆஞ்சியோகிராபி (Coronary Angiography - CA).

1. டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராபி

ஆஞ்சியோகிராபி பரிசோதனைகளில் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான். உடலுக்குள் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி ரத்தக்குழாய்களின் (Arteries) நிலைமையைத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. ஒரு கணினியின் உதவியுடன், இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எந்தத் தமனியைப் பரிசோதிக்க வேண்டுமோ, அதை முதலில் ஒரு எக்ஸ்ரே படம் எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்தத் தமனிக்குள் ஒரு சாயத்தைச் செலுத்தி, மறுபடியும் ஒரு எக்ஸ்ரே எடுக்கிறார்கள். இக்கருவியில் உள்ள கணினி இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, அருகில் உள்ள உறுப்புகளின் பிம்பங்களை மறைத்து, டிஜிட்டலில் ஒரு படத்தை வடிவமைத்துத் தருகிறது. அந்தத் தமனிக் குழாய் இயல்பாக உள்ளதா, சுருங்கியுள்ளதா, அதனுள் அடைப்பு உண்டாகியுள்ளதா என்பது போன்ற விவரங்களை, அந்தப் படத்தில் அறியலாம்.

பயன்கள் என்ன?

# கழுத்து, மூளை, சிறுநீரகம், கால்கள் ஆகியவற்றின் தமனிக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்கிறது.
# முக்கியமாக, ஒருவருக்குப் பக்கவாதம் வர வாய்ப்புள்ளதா என்பதையும் ரத்தக்குழாய்களில் வீக்கம் உள்ளதா என்பதையும் இதில் தெரிந்துகொள்ள முடியும்.
# நுரையீரலில் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism) ஏற்பட்டுள்ளதை அறியலாம்.
# காலில் ‘அழுகல் நோய்’ (Gangrene) இருக்கிறதா என அறியலாம்.
# சிறுநீரகத்தில் ரத்தக்குழாய் சுருங்கி உள்ளதா (Rena#artery stenosis) என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
# பிறவியிலேயே ரத்தக்குழாய் அமைப்பில் மாறுபாடு உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

2. கம்ப்யூடட் டோமோகிராபி ஆஞ்சியோகிராபி

ஏறக்குறைய முதலில் சொல்லப்பட்டது போல்தான் இந்தப் பரிசோதனையும் செய்யப்படுகிறது, சில வித்தியாசங்களுடன். இதில் உடலுக்குள் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரை ரத்தக்குழாய்க்குள் (Vein) சாயம் செலுத்தப்படுகிறது. வழக்கத்தில் தொடை அல்லது கையில் உள்ள சிரை ரத்தக்குழாய் வழியாகவே சாயம் செலுத்தப்படும். அடுத்து, சி.டி.ஸ்கேன் கருவியைக்கொண்டு இது செய்யப்படுகிறது. மிகக் குறைந்த நேரத்தில், உடலில் சாயம் பயணிக்கும் ரத்தச் சுற்றோட்டப் பாதை முழுவதையும் ஸ்கேன் செய்ய முடியும். அதன் பலனால், உடலின் எல்லா ரத்தக்குழாய்களின் நிலைமையை அறிய முடியும்.

பயன்கள் என்ன?

# டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராபியில் சொல்லப்பட்ட அத்தனை பயன்களும் இதிலும் உண்டு.
# அத்துடன் இதயத் தமனி ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளையும் (Coronary Artery Disease CAD ) இதில் காணலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
# பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, அவற்றைத் தடுத்துக்கொள்ள முடியும்
# இப்பரிசோதனையில் ரத்தக் குழாய்கள் முப்பரிமாணப் படங்களாகத் தெரிவதால், நோயை மிகச் சரியாகக் கணிக்கமுடியும்.

3. மேக்னடிக் ரெசனன்ஸ் ஆஞ்சியோகிராபி

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதுபோலத் தான் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. தொடை அல்லது கையில் உள்ள சிரை ரத்தக்குழாய் வழியாகச் சாயம் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்களைப் படமெடுக்கிறார்கள். மிக வேகமாகவும், மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் முப்பரிமாணப் படங்கள் கணினித் திரையில் தெரியும். ரத்தக்குழாய் நோய்களைக் கண்டுபிடிப்பதில் இந்தப் பரிசோதனை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

பயன் என்ன?

# கழுத்து, மூளை, மார்பு, வயிறு, சிறுநீரகம் மற்றும் கால்களில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், சுருக்கம், அடைப்பு, பிறவி அமைப்புக் கோளாறு ஆகிய பாதிப்புகளைக் கண்டறிய இது உதவுகிறது.
# இதய ரத்தக்குழாய் பாதிப்புகளை அவ்வளவாக இதில் அறிய முடியாது என்பது ஒரு குறை.

4. கரோனரி ஆஞ்சியோகிராபி

இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோனரி தமனிக் குழாய்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான பரிசோதனை இது. இந்த ரத்தக்குழாய்கள் சுருங்கிவிட்டாலோ, கொழுப்பு அடைத்துக்கொண்டாலோ இதயம் துடிப்பதற்குச் சிரமப்படும். இதைத்தான் ‘மாரடைப்பு’என்கிறோம்.

இது, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் பரிசோதனை என்பதால், இதை ‘உயிர் காக்கும் பரிசோதனை’ என்கிறோம். இந்தப் பரிசோதனையை ‘கேத் லேப்’(Cath Lab) வசதி உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

மேல் தொடையில் அல்லது மணிக்கட்டுக்கு அருகில் சிறிய துளை போட்டு வளைகுழாயும் (Catheter), வளைகம்பியும் (Guiding Wire) இணைந்த ஓர் அமைப்பை அங்குள்ள தமனி ரத்தக்குழாய்க்குள் நுழைத்து, `ஃபுளூரோஸ்கோப்’ எனும் சிறப்பு எக்ஸ்ரே கருவியில் கண்காணித்துக்கொண்டே கரோனரி தமனி குழாய்க்குக்கொண்டு செல்கிறார்கள். பிறகு, அதே வளைகுழாய் வழியாக இதயத் தசைக்கு ஒரு சாயத்தை அனுப்புகிறார்கள். சாயம் கரோனரி ரத்தக்குழாய்களை அடைந்ததும், அதைப் படமெடுக்கிறார்கள். அந்தப் படங்களில் கரோனரி ரத்தக்குழாய்களின் நிலைமை துல்லியமாகத் தெரியும்.

என்ன பயன்?

# ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் துல்லிய மாகத் தெரிந்துகொள்ள முடியும்.
# கரோனரி ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்துள்ளதா, ரத்தம் உறைந்துள்ளதா, எந்த இடத்தில் அடைப்பு உள்ளது, எத்தனை ரத்தக்குழாயில் எத்தனை சதவீதம் அடைப்பு உள்ளது, அடைப்பின் தீவிரம் ஆகிய பல விவரங்களோடு மாரடைப்பின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
# மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை செய்வது என்று தீர்மானிக்க முடியும்.
# பொதுவாக, இரண்டு ரத்தக் குழாய்கள் அடைத்துக்கொண்டிருந்தால் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
# மூன்று ரத்தக்குழாய்களிலும் அடைப்பு இருக்கிறது என்றால், பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
# சிலருக்கு மூன்று ரத்தக்குழாய்களிலும் அடைப்பு இருந்து, பைபாஸ் சிகிச்சையை மேற்கொள்வதற்கு உடல்நிலை ஏற்றதாக இல்லை என்ற நிலைமையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்படுவதுண்டு.

தயாராவது எப்படி?

# இப்பரிசோதனைகளை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
# ஏற்கெனவே சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகளுக்குச் சொல்லப்பட்ட முன்னேற்பாடு விதிகள் இதற்கும் பொருந்தும்.

யாருக்கு விலக்கு?

# கர்ப்பிணிகள், கர்ப்பமடைய வாய்ப்புள்ளவர்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்பு

# தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் களுக்குச் சாயத்தைக் கொடுத்துப் பரிசோதனை செய்ய நேர்ந்தால், அடுத்து எத்தனை மணி நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மருந்துப்போலி விளைவு: ஒரு விளக்கம்

‘ராசியான மருந்து, ராசியான டாக்டர் - நிஜமா?’ என்ற டாக்டர் எம்.எஸ். தம்பிராஜாவின் கட்டுரை ஜூன் 25-ம் தேதி ‘நலம் வாழ’ இணைப்பில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பாக, “Placebo பற்றி சொல்ல வந்து வேறு எதையோ சொல்லியிருக்கிறீர்கள். Knee replacement surgery என்பதே பிளாசீபோதான் என்று எந்த ஆய்விதழில் படித்தீர்கள் என்று குறிப்பிடவும். இது போன்ற எழுத்து, கெட்ட தோற்றங்களை உருவாக்கிவிடும்” என்று arivuortho@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து கடிதம் வந்திருக்கிறது.

மருத்துவ ஆய்விதழ் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மருந்துப்போலி (பிளாசீபோ) விளைவு தொடர்பான கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆதாரங்களும் டாக்டர் எம்.எஸ். தம்பிராஜாவின் பதிலும் கீழே:

மேற்கண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போலப் பிளாசீபோ கட்டுரையில் Knee replacement surgery-யைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை . Osteoarthritis of the knee-க்கு செய்யப்படும் ஆர்திரோஸ்கோபியைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். அது தொடர்பாக அறியக் கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்: http://www.bmj.com/content/350/bmj.h2747
Arthroplasty for OA of the knee-யிலும், முதுகுவலிக்காகச் செய்யப்படும் ஒருவகையான spina#surgery-யிலும் காணப்படும் நன்மைகள் பிளாசீபோ விளைவினால்தான் ஏற்படுகின்றன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன.

உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்

நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை.

தேடி வரும் உலகம்

உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் காலைச் சிற்றுண்டியான இட்லி மாறிவருவது, நம் உணவை உலகம் ஏற்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி, தோசை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இட்லி மீது நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்டு, நோயில்லாமல் வாழ மிகச் சிறந்த உணவு என்ற பரிந்துரையை அறிவியலார்கள் தெரிவித்துள்ளதுதான். எந்தத் தட்பவெப்ப நிலை, மக்களின் நல்வாழ்வுக்கும் ஏற்றது இட்லி.

சமநிலை உணவு

உணவு அறிவியல் (Food Science) முறைப்படி இட்லி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இட்லி செய்யத் தேவையான உணவுப் பொருட்கள்: புழுங்கல் அரிசி, உளுந்து. இந்த இரண்டையும் உட்கொள்ள வேண்டியதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.

பயறு வகையான உளுந்தும், தானிய வகையான அரிசியும் இணைக்கப்பட்டதால் புரதச் சமநிலையும் தரமான புரதமும் கிடைக்கின்றன. பயறு வகைப் புரதத்தில் லைசின் எனும் அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகைப் புரதத்தில் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலம் அதிகமாகவும் உள்ளன.

அரிசியும், பாசிப் பருப்பும் இணைந்த வெண்பொங்கல் (சோறு) + சாம்பார் (பருப்பு சேர்த்தது) உடன் இணைந்து புரதச் சமநிலையைத் தருவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பழங்கால உணவில் பொதிந்துள்ள சிந்தனையை அறிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உறுதுணையாக உள்ளன. இட்லியில் சேர்க்கப்படும் பொருட்களைப் பற்றி பார்ப்போம்:

புழுங்கல் அரிசி மகத்துவம்

தண்ணீரில் ஊற வைத்த நெல்லை அவித்துத் தவிடு, உமி நீக்கிப் புழுங்கல் அரிசி தயாரிக்கப்படுகிறது. அவிக்கப்படுவதற்கான காரணம் என்ன? நெல்லை நீருடன் சேர்த்து அவிக்கும்போது உயிர்ச்சத்து (வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் தயமின்) போன்றவை அரிசியின் மேல் பகுதியிலிருந்து உட்பகுதிக்குச் சென்றுவிடுவதால் அரிசியைத் தீட்டும்போது வைட்டமின் இழப்பு ஏற்படுவதில்லை.

நெல் மணியில் உள்ளவை ஸ்டார்ச்சான அமைலோஸ், அமைலோபெக்டின் (Amylose, Amlopectin) குளுகோஸ் பொருட்கள். இவை அதிகம் உள்ள அரிசி ரகங்கள் சமைத்த உடன் குழையாமலும் பிசுபிசுப்பு இல்லாமலும் இருப்பதால் தோசைக்கு ஏற்றவை.

பழுப்பு நிறம் ஏன்?

அரிசியில் உள்ள சர்க்கரைச் சத்தும் அமினோ அமிலமும் வேக வைக்கும்போது ஒன்றோடு ஒன்று இணைந்து பழுப்பு நிற வேதிமம் உண்டாகிறது. இதனால் புழுங்கல் அரிசி பழுப்பு நிறமாக உள்ளது. இவ்வினையை மைலார்டு வினை (Mylord Reaction) என்பார்கள். சமைத்ததும் பழுப்பு நிற வேதிமம் சூடான நீரில் ஆவியாகிப் போய்விடுவதால், இது வெண்மை நிறத்தை அடைகிறது.

ஊற வைக்கும் அறிவியல்

உளுத்தம் பருப்பில் 60 சதவீதம் மாவுச்சத்து உள்ளது. இந்த மாவுச்சத்தில் ஒலிகோ சாக்கரைடுகள் உள்ளன. இந்த ஒலிகோ சாக்கரைடுகளை நமது குடலால் உறிஞ்ச முடிவதில்லை. இந்தச் சத்துப் பொருளை ஜீரணிக்கும் காலக்டோஸ் என்ற நொதியில்லாத காரணத்தால், சிறு குடலில் ஜீரணிக்காமல் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர்கள் ஒலிகோ சாக்கரைடுகளைச் சிதைத்து அதிக அளவு கரியமில வாயு, ஹைட்ரஜன் வாயு, சிறிதளவு மீத்தேன் வாயுவாக மாற்றி, வாயுத் தொல்லையை உண்டாக்குகிறது. உளுந்தை நீரில் ஊற வைக்கும்போது, தீமை பயக்கும் இந்த ஒலிகோ சாக்கரைடு நீராற் பகுத்தல் வினை மூலம் நீக்கப்பட்டு விடுவதைக் கவனிக்க வேண்டும்.

மாவு ஆக்கும் முறை

அரிசியையும் உளுந்தையும் அரைத்து மாவாக்குவதன் மூலம் உணவுப் பொருட்கள் நுண்மையாக்கப்படுகின்றன. இட்லி மாவில் சிறிதளவு உப்பு சேர்க்கப்படுகிறது. உணவுப் பண்டத்தின் அமில-காரத்தன்மையை (PH value Normal) இயல்பாக வைக்கவே இது சேர்க்கப்படுகிறது. கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இட்லியில் உளுந்தின் அளவைக் குறைத்து, வியாபார நோக்கத்துடன் சமையல் சோடா உப்பைச் சேர்க்கின்றனர். இதனால் இட்லி காரத்தன்மையை அடைந்து, அதில் உள்ள தயமின் என்ற வைட்டமின் அழிந்துவிடுவதால், உடலுக்குச் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது.

சத்து இழப்பு தவிர்ப்பு

நீராவியில் வேக வைப்பதால் இட்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. தயமின் போன்றவை வெப்பத்தால் ஆவியாகக் கூடியவை. அதேநேரம் உணவு நீராவியால் வெப்பப்படுத்தும்போது, பாதிக்கப்படுவதில்லை.

உளுந்தில் உள்ள டிரிப்சின் நொதி தடுப்பான்கள், புரதத்தைச் செரிமானம் செய்து நமது குடல் உட்கிரகிப்பதைத் தடை செய்யக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. நீராவியில் வேக வைக்கும்போது, இவை செயல் இழந்துவிடுகின்றன.
உளுந்தை நீராவியில் வேக வைப்பதன் மூலம், உளுந்தில் உள்ள சத்தைச் சேதப்படுத்தும் காரணிகள் (Anti nutritive factors) அழிக்கப்படுவதால் கனிமச் சத்துகள் உடலுக்குக் கிடைப்பது அதிகரிக்கிறது.

விழித்துக் கொள்வோமா?

உளுந்தில் உள்ள ‘அரோபினோ காலக்டோன்’ என்ற சர்க்கரைப் பொருள் நொதிக்கப்பட்டிருப்பதே, இட்லி மிருதுவாக இருக்கக் காரணமாகிறது. இட்லியில் உயிரியல் மற்றும் புரத மதிப்பு (Biological value & Protein efficiency ratio) அதிக அளவிலும், அதேநேரம் புரதச் சமநிலையுடனும் உள்ளதாகப் பூர்வாங்க ஆய்வுகள் தெளிவாக விளக்குகின்றன.

நம்மவர்கள் நம் உணவை விட்டு விலகி வரும் இந்தக் காலத்தில், அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உலகம் நம் உணவைத் தேடிவர ஆரம்பித்திருக்கிறது, இதற்கு மேல் விழித்துக்கொள்வது அவரவர் பொறுப்பு.

தோல் உளுந்து அதிக ஊட்டம் முதல் உணவு

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது தோலுடன் உள்ள கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. திருநெல்வேலி மாவட்டத்தில் முழு உளுந்து தோசை வீடுதோறும் நடைமுறையில் உண்டு. உளுந்து தோலில்தான் leuconostec mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.

இந்தப் பாக்டீரியாதான் இட்லி மாவு புளிப்பதற்குக் காரணம். அத்துடன் உளுந்துத் தோலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சம விகிதத்தில் உள்ளன. தோல் நீக்கம் செய்யப்பட்ட உளுந்தைப் பயன்படுத்தும்போது, மாவைப் புளிக்க வைக்க வெந்தயம் சேர்க்கிறார்கள். இருந்தபோதும், வெள்ளை நிறத்துக்கு மயங்கிப் போகாமல் தோல் உளுந்துடன் இட்லி, தோசையைச் சாப்பிடுவது உடலுக்குக் கூடுதல் வலுவூட்டும்

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com

புரதச் சுரங்கம் 2: உடலுக்கு உரம் தரும் முதன்மைப் பருப்பு

சாம்பார் இல்லாத இட்லியையோ, சோற்றையோ நினைத்துப் பார்க்க முடியுமா? சாம்பாரின் வரலாறு நீண்டது இல்லை என்றாலும்கூட, இன்றைக்கு நம் உணவில் சாம்பார் முக்கிய இடம் பிடித்துவிட்டது. தஞ்சை சரபோஜி வம்சத்தின் கொடையான சாம்பாருக்கு அடிப்படை பருப்பு, அதாவது துவரம் பருப்பு.

பொதுவாகவே பருப்பு என்று சொன்னால், அது மஞ்சள் நிறம் கொண்ட துவரம் பருப்புதான். துவரம் பருப்பை வேக வைத்து, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து மசிப்பது தென்னிந்தியாவில் பொதுவாகப் பருப்பு என்றோ, பருப்பு மசியல் என்றோ அழைக்கப்படுகிறது. நாடு முழுவதுமே இந்தப் பருப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தீபகற்ப இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தோன்றியதாகக் கருதப்படும் இத்தாவரம், ஆப்பிரிக்காவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்பதால் வறண்ட, புரதச் சத்து பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்ற பருப்பு வகை. துவரை மானாவாரியாகவே அதிகம் பயிரிடப்படுவதால், தண்ணீர் விரயமாவதில்லை. அத்துடன் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி, மண்ணை வளப்படுத்தவும் துவரை உதவுகிறது.

பயன்பாடு

இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் பருப்பு வகை இது. சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன. மசிக்கப்பட்ட பருப்பாகத் தனியாகவும், சாலடில் சேர்க்கப்படும் பொருளாகவும் இருக்கிறது. ரசத்திலும் சில நேரம் சேர்க்கப்படுவது உண்டு. வடஇந்தியாவில், குறிப்பாகக் குஜராத்தில் சப்பாத்தியுடன் தரப்படும் தால் எனப்படும் பருப்பு மசியல், துவரம் பருப்பு மசியலே.

ஊட்டச்சத்து

இதில் புரதச் சத்து அதிகம் என்பதால், உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதற்குப் பயன்படுகிறது. புரதச் சத்தைப்போலவே வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் சத்து (மாவுச் சத்து), ரத்தச் சர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது, உடலுக்குத் தேவையான சக்தியையும் தருகிறது. விஷயம் என்னவென்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம்கூட இல்லை.

தெரியுமா?

துவரம்பருப்பு 3,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. இப்போது உலகம் முழுவதும் சராசரியாக ஓர் ஆண்டில் 20 லட்சம் கிலோ பயிரிடப்படுகிறது. இதில் 82 சதவீதம் இந்தியாவில்தான் பயிராகிறது.
உணவுப் பயிர் என்பதைத் தாண்டி, பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. விவசாயிகளுக்கு மூடாக்கு பயிராகவும், கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாகவும் பயன்படுகிறது.

இந்தப் பருப்பு காய வைக்கப்பட்டு, பழுப்புப் பச்சை தோல் நீக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் அரை உருளை வடிவத்தில் இருக்கும் இந்தப் பருப்பை எளிதாக வேக வைப்பதற்கு, கொஞ்சம் நேரம் ஊற வைத்தாக வேண்டும். வெந்நீரில் ஊற வைப்பது நல்லது. பருப்பு சுவை தூக்கலாக இருக்கும்.

எளிய செரிமானத்துக்கு...

துவரம் பருப்பு வாயுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடும். அதைத் தவிர்க்கவே துவரம்பருப்பின் மேல் செம்மண்ணைப் பூசிக் காய வைத்து, பின் கழுவி எடுத்துப் பயன்படுத்துவது பாரம்பரிய வழக்கம். இப்படிச் செய்வதால் வாயுத் தொல்லை நீங்கும். இந்தப் பாரம்பரியப் பதப்படுத்தும் முறைக்குப் பின்னர்க் கிடைக்கும் துவரம்பருப்பின் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். ஊட்டச்சத்தும் இழக்கப்படாமல் இருக்கும்.

அதேபோலப் பருப்பை வேக வைக்கும்போது கொஞ்சம் விளக்கெண்ணெயைச் சேர்த்து வேக வைத்தால், துவரம் பருப்பு வேகும்போது நுரைக்காமல், பாத்திரத்தை விட்டு வெளியே வராமல் வெந்திருக்கும். நன்றாகச் செரிமானமும் அடையும். இது சேலம் மாவட்ட வழக்கு.

நவதானியங்களில் ஒன்று

பழைய பெயர்கள்: தோரை, யவை, காச்சி, ஆடகி, ஆடகம்
தாவரவியல் பெயர்: Cajanus cajan
ஆங்கிலப் பெயர்: Toor Dal / Tuvar dal / Pigeon Pea

உடலுக்கு வலுவைக் கொடுக்கவும் உடல் எடையை அதிகரிக்கவும் கொடுக்கப்படும் ‘பஞ்சமுட்டிக் கஞ்சி’யில் துவரை முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகிறது. நோய்நிலை காரண மாக மெலிந்தவர்களுக்கும் சோர்வுற்றவர்களுக்கும் உடலை உரமாக்கும் துவரை, முதன்மையான ஊட்டச்சத்து உணவு என்பதில் சந்தேகமில்லை.

துவரம் பருப்பு ரசம்:

துவரம் பருப்பு ரசத்தை ஒரு மருந்தாகச் சித்த மருத்துவ நூலான ’தேரையர் குணவாகடம்’ குறிப்பிட்டுள்ளது. மிளகு, பூண்டு சேர்த்துத் தயாரிக்கப்படும் துவரம்பருப்பு ரசம், செரிமானம் சார்ந்த கோளாறுகளை நீக்கப் பயன்படுகிறது.

பத்திய உணவு:

பத்திய உணவாகத் துவரம் பருப்பு பயன்படுகிறது. பண்டைக் காலத்தில் உண்ணா நோன்பின் முடிவில் சாப்பிடும் உணவாக, துவரம் பருப்பை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

(அடுத்த வாரம்: கொழுப்பைக் குறைத்து இதயம் காக்கும் பருப்பு)

Jul 8, 2016

எது ஆரோக்கியமான காலை உணவு?

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பால் மட்டும் குடித்துவிட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.

இப்படி மழலைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது காலை உணவு. எந்த அளவுக்கு காலை உணவு முக்கியம், அதைத் தவிர்ப்பதால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், காலை உணவுக்குச் சிறந்தது எது, உணவைக் கொண்டு செல்லும் கலன்களின் முக்கியத்துவம் என்ன… இப்படி ஆரோக்கிய உணவு குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்:

தவிர்ப்பும் தவிப்பும்

ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான். அதனால்தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம். பாரம்பரியமாக நமது வீடுகளில் செய்யப்படும் உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவுக்கு ஈடு இணையே இல்லை. இதன் தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. இட்லியில் உளுந்தின் மூலம் மாவுச் சத்து, சட்னி, சாம்பாரோடு சேர்த்துச் சாப்பிடும்போது குறைந்த அளவில் கொழுப்பு, அதிக அளவில் புரதச் சத்து போன்றவை கிடைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் தயாரிக்கப்படும் இத்தகைய ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல.

பிணியோடு பணி செய்ய முடியுமா?

காலையில் 5 மணிக்கு எழுந்ததுமே ஒரு டம்ளர் காபி/டீ. அதன்பிறகு குளித்து, பூஜை முடித்ததும் ஒரு காபி/டீ. சமையல் முடித்துக் குழந்தைகளும், கணவரும் புறப்பட்டதும் ஒரு காபி/டீ. அப்புறம் துணிகளைச் சலவை செய்து முடித்தவுடன் நேரடியாகச் சாப்பாடுதான்… என்று பெருமையோடு பேசும் குடும்பத் தலைவிகள் பலர் இருக்கின்றனர். உணவுக்கு மாற்று காபி/டீ என்பது இவர்களுடைய நினைப்பு. ஆனால், இது உண்மை அல்ல.

பசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு. காபி/டீ, உணவுக்கு எந்த வகையிலும் மாற்று இல்லை எனும் நிலையில், பசிப் பிணி அப்படியேதான் இருக்கும். இதே நிலைமை தொடர்ந்தால் அவர்களால் பசியோடு வேலை செய்ய முடியாது. அசிடிட்டி போன்ற உபாதைகள் அவர்களுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

குடும்பத் தலைவிகளின் நிலை இப்படி என்றால், வேலைக்குச் செல்பவர்களின் நிலை வேறு மாதிரி. உணவை ஒரு டப்பாவில் அடைத்துக்கொண்டு ஓடுவார்கள். வேலைக்குப் போனவுடன் டிபன் பாக்ஸைத் திறக்கக்கூட முடியாமல் வேலையில் மூழ்கிவிடுவார்கள். மதியம்தான் அவர்களால் டிபன் பாக்ஸைத் திறக்க முடியும். நாளடைவில் அவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும். `அனீமிக்’ என்னும் ரத்தசோகை நிலைக்குப் போவார்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறையும்.

உடல் எடையைக் குறைப்பதற்காகக் காலை உணவைத் தவிர்ப்பதாகக் கூறும் சில குடும்பத் தலைவர்கள், அதற்குப் பதிலாகக் கேக், சமோசா, பப்ஸ், சிப்ஸ் என விதவிதமாகச் சாப்பிட்டு, வீட்டில் சிற்றுண்டியில் கிடைக்கும் கலோரியைவிட அதிக அளவுக்குத் தின்றுவிடுவார்கள். ஆக, காலை உணவைக் குறைத்தால், அதைவிட அதிகமாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை மேலும் அதிகரிக்கவே செய்யும், நிச்சயம் குறையாது.

கைகொடுக்கும் சாலட்

வெகு தூரத்தில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். காலையில் 6 மணிக்கே அவர்களை அழைத்துச் செல்லும் பேருந்து வந்துவிடுகிறது. அதற்கும் முன்னதாக எழுந்து சமைப்பது இயலாத நிலையில், காலை உணவுக்கும், மதியச் சாப்பாட்டுக்கும் கல்லூரி கேன்டீன்களையே இவர்கள் பெரும்பாலோர் எதிர்பார்த்து இருக்கின்றனர். கல்லூரி கேன்டீன்களில் அவர்களுக்கு மாவுச் சத்தே அதிக அளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இப்படிப்பட்டவர்கள் காலையில் வெள்ளரி, தக்காளி, கேரட் போன்ற காய்கறி சேர்ந்த சாலட்டை சாப்பிடலாம். முதல் நாள் இரவு சுட்ட சப்பாத்தியைச் சிறிது சூடுபடுத்தி காலையில் சாப்பிட்டுக்கொள்ளலாம். கொய்யா, சப்போட்டா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிடலாம். மாலையில் கல்லூரி முடிந்தவுடன் பேருந்தில் வரும்போதுகூட உலர் பழங்கள், பாதாம் பருப்பு, உப்புக் கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது சிறந்த மாலைச் சிற்றுண்டியாக அமையும்.

அப்படியே வீட்டுக்கு வந்து, ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். அதன்பின் இரவு 8.30 மணிக்குள் இரவு உணவை முடித்து, ஒரு மணி நேரம் கழித்துப் படுக்கைக்குச் செல்லலாம். இப்படிச் செய்வதன் மூலம் இளைய தலைமுறைக்குச் சரிவிகித உணவும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்யவும் நேரம் கிடைக்கும். கொஞ்சம் மெனக்கெட்டால், நீண்ட நேரம் வேலை செய்யவும், ஆரோக்கியமாக வாழவும் வாய்ப்பு உண்டு.

மூன்று வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம், எந்தக் கலனில் வைத்துச் சாப்பிடுகிறோம் என்பதும்தான் என்று எச்சரிக்கிறார் தாரிணி கிருஷ்ணன்:

பிளாஸ்டிக்கை சாப்பிடாதீர்கள்!

‘ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்’ என்று விற்கப்படும் டப்பாக்கள்கூடப் புளிப்பு சார்ந்த உணவை அடைத்து வைப்பதற்கு உகந்தவை அல்ல. முந்தைய தலைமுறையில் கண்ணாடி பாட்டில், மண் ஜாடியில்தான் ஊறுகாய் போட்டு வைப்பார்கள். ஆனால், இப்போதோ ஊறுகாயைப் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்தே விற்கிறார்கள்.

அதேபோல இட்லிக்கான மாவை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளுங்கள். அதுதான் நூறு சதவீதம் சுகாதார மானது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே உணவை எவர்சில்வர் டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்லுங்கள். அதுதான் ஆரோக்கியமானது.

இட்லி மாவு என்றில்லை, புளிக்கக்கூடிய எந்தப் பொருளையுமே பிளாஸ்டிக் உறையில் அடைக்கக் கூடாது. குளிர்ச்சியான பழரசங்கள் தொடங்கிச் சுடச்சுடக் காபி, டீ, சாம்பார் என அனைத்தையுமே பிளாஸ்டிக் பாக்கெட்டில் ஊற்றித்தான் ஹோட்டல்களில் கொடுக்கிறார்கள். நாமும் கண்ணுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளாஸ்டிக்கைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு எதிரான இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்தியாக வேண்டும்.

குறுந்தொடர்- 1 : புரதச் சுரங்கம்

நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள்.

குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி).

அதேபோலத் தமிழகத்தில் சாம்பார், கேரளத்தில் புட்டு மற்றும் ஆப்பத்துடன் வரும் கடலைக்கறி, வடஇந்தியாவில் சப்பாத்தியுடன் வரும் தால் எனப்படும் பருப்பு மசியல் எனப் பருப்பு இல்லாமல் இந்திய உணவைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. பருப்பு வகைத் தாவரங்கள் நம் தினசரி உணவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

எளிமையின் உச்சம்

மாவுச் சத்து, புரதச் சத்து, (நல்ல) கொழுப்புச் சத்து, வைட்டமின், கனிமச்சத்து போன்றவை கலந்த சதவிகித உணவு ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படைத் தேவை. இதில் விலங்குப் புரதத்தைச் சாப்பிடாதவர்கள், தாவரப் புரதத்துக்குப் பருப்பு வகைகளையே நம்பியிருக் கிறார்கள். தமிழகத்திலும் இந்தியாவிலும் புரதச் சத்துத் தேவையைப் பெருமளவு நிறைவு செய்வது பருப்பு வகைகள்தான்.

பருப்பு வகைகளின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், முக்கியமான சிறப்புகள்: இவற்றைச் சமைப்பது எளிது, அதேநேரம் உடலுக்குப் பெரிய தீங்கு செய்வதில்லை. வயலில் இவற்றை விளைவிப்பதும் மிகக் கஷ்டமானதோ அதிகப்படி தண்ணீரை உறிஞ்சுவதோ இல்லை.

எப்படி வருகிறது?

ஆங்கிலத்திலோ, லத்தீனிலோ லெக்யூம் (legume) என்று சொல்வது பருப்பு வகைத் தாவரங்களைக் குறிக்கிறது. Fabaceae அல்லது Leguminosae என்பது அவரை வகை தாவரக் குடும்பத்தின் தாவரவியல் பெயர். பருப்பு வகைத் தாவரங்கள் பல்வேறு வகைப்பட்டவை. பொதுவாக அவரை, துவரை, பயறு, மொச்சை, பட்டாணி வகைத் தாவரங்களின் விதை காய வைக்கப்பட்டு, மேல்தோல் நீக்கப்பட்ட பிறகு பருப்பு எனப்படுகிறது.

இந்தத் தாவரங்கள்தான் நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் நிரம்பியிருக்கும் நைட்ரஜனை (78 %) சேகரித்து, மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அவரை இனத் தாவரங்களின் வேர்க்கணுக்களில் ரைசோபியா பாக்டீரியா இருக்கிறது.
இது, அந்தத் தாவரங்களுடன் ஒன்றி வாழ்ந்தபடி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. இதனால் மண் வளம்மிக்கதாக மாறுகிறது. இதன் காரணமாகப் பயிற்சி சுழற்சி முறையில் வயலின் வளத்தை மேம்படுத்துவதற்குக் காலங்காலமாக இந்தப் பயிர்களைப் பயிரிடுவதை உழவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் இந்தச் செயல்பாட்டால் இந்தத் தாவரங்களின் விதைகள் புரதச் சத்து நிரம்பியவையாக உள்ளன.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

பருப்பு வகைத் தாவரங்களின் இலைகள் கூட்டிலைகள், சின்னச்சின்ன இரட்டை இலைகளாக, வரிசையாக இருக்கும். நீண்ட பச்சை நெற்று அல்லது உறையில் விதைகள் நிரம்பியதாக இவற்றின் காய் அமைந்திருக்கும். இந்தத் தாவரங்களின் விதைகள் காய வைக்கப்பட்டு மட்டுமல்லாமல், பச்சைக் காயாகவும் பயன்பாட்டில் உள்ளன. தாவர வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில், வகைகளில் அவரைக் குடும்பத் தாவரங்கள் சாப்பிடப்பட்டு வருகின்றன.

# அவரை, பீன்ஸ், தட்டைப்பயற்றங்காய் (காராமணி) வகைத் தாவரங்கள் பச்சை காயாகவே சாப்பிடப்படுகின்றன. அவற்றின் விதைகள் மட்டுமில்லாமல், முற்றாத மேலுறையும் உண்ணப்படுகிறது.

# அதேபோலக் காராமணி, பட்டாணி, மொச்சை போன்ற விதைகள் முதிர்ந்தவுடன் காய வைக்கப்படாமல் உண்ணப்படுகின்றன. இவற்றைச் சமைப்பது எளிது. அந்த நிலையில் வெளிப்புற உறை கடினப்பட்டிருப்பதால் சாப்பிடப்படுவதில்லை.

# அதற்குப் பிறகு நன்கு முதிர்ந்த காய்கள் வெளிப்புற உறையுடன் காய வைக்கப்படுகின்றன. பிறகு வெளிப்புற உறை அகற்றப்பட்டு, காய்ந்த முழு விதைகள் உண்ணப்படுகின்றன. இவற்றை நீண்ட நேரம் வேக வேண்டும்.

# காய வைக்கப்பட்ட முழு விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து முளைக்க விடப்படுகிறது. இப்படி முளைவிட்ட விதைகள் சத்து மிகுந்தவை. பொதுவாக ஓர் இரவு முழுக்க ஊற வைக்கப்பட்டு, தண்ணீரை வடித்துத் துணியில் கட்டியோ அல்லது பாத்திரத்திலோ வைக்கலாம். முளைகட்டிய பச்சைப் பயற்றை அப்படியே சாப்பிடலாம். முடியாதவற்றை எளிதாக வேக வைத்துவிடலாம்.

# காய வைக்கப்பட்ட பயற்றை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இப்படிக் கிடைக்கும் கடலை மாவு பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சில மாவுகள் சூப்பில் சேர்க்கப்படுகின்றன.

இப்படிப் பச்சைக்காய், பச்சையான பயறு, முழு விதை, முளைகட்டிய பயறு, பருப்பு, மாவு எனப் பல வகைகளிலும் பருப்பு வகைத் தாவரங்கள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகள் காய வைக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டால் பருப்பு. இந்தப் பருப்பு வகைகள் நன்கு செரிமானம் ஆவதற்கும், வேக வைப்பதற்கும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சீரகம், மிளகு போன்ற தாளிப்புப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.

உலகம் கொண்டாடுகிறது

பருப்புப் பயன்பாட்டைச் சார்ந்து நமக்கு வலுவான பின்னணி இருக்கும் அதேநேரம், 2016-ம் ஆண்டை ‘சர்வதேசப் பருப்பு ஆண்’டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை, பட்டாணி வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். அடுத்து வரும் வாரங்களில் நாம் அதிகம் உண்ணும் ஒவ்வொரு பருப்பு வகையிலும் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்து, நம் உடலுக்கு அது தரும் ஆரோக்கியப் பலன்கள், பயன்பாடுகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மருந்தாகும் பருப்பு

பண்டைய சித்த மருத்துவக் குறிப்புகளிலும், பருப்புகளைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. 'பயற்றங்காயை கறியாக உண்ணில் நன்மை உண்டாகும்' எனத் தேரையர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் பாடல்களிலும் பருப்பு வகைகளைப் பற்றி குறிப்புகள் உள்ளன. பருப்புகள் தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள்:

மசித்த பருப்புடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவது, மெலிந்த உடலைத் தேற்றுவதற்கான சிறந்த உணவு.
கர்ப்பக் காலத்தில் பனிக்குட நீர் அதிகரிப் பதற்குப் பருப்பில் உள்ள புரதம் அவசியம்.

பெரும்பாலான பயறு வகைகள் இனிப்புச் சுவையைக் கொண்டுள்ளன. இனிப்பு சுவை உடலுக்கு உடனடி ஆற்றலும் தசைகளுக்கு ஊட்டமும் தரக்கூடியது. குளிர்ச்சியுண்டாக்கும் செய்கையும் பயறு வகைகளுக்கு உண்டு. அதனால் குழந்தைகளுக்குப் பாலை மறக்கச் செய்வதற்கான நல்ல உணவாகப் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

புரதக்குறைவால் உண்டாகும் கால் வீக்கம் (pedal odema) வராமல் தடுக்க, பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தீப்புண்களுக்கு மருந்தாக சில பருப்பு வகைகள் பயன்படுகின்றன.