Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Jul 14, 2016

உலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா வேகமாக வளர்ந்தது!

மான்டேக் சிங் அலுவாலியா பேட்டி

மன்மோகன் சிங் அணியின் முக்கியமான தளகர்த்தர் மான்டேக் சிங் அலுவாலியா. பிரதமர் பதவியில் மன்மோகன் அமர்ந்திருந்த 10 ஆண்டுகள் அவருக்கு உறுதுணையாகவும் ஆலோசகராகவும் மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர். உலகமயமாக்கல் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

1991 பொருளாதார நெருக்கடி மீட்புக் குழுவில் நீங்கள் முக்கிய உறுப்பினர்; அதற்குப் பிறகு நம்பிக்கை பல மடங்கு பெருகியது. அதே போன்ற நெருக்கடி பிறகு ஏற்படவில்லை; பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அதே போன்ற துணிச்சலும் நெஞ்சுரமும் அதற்குப் பிறகும் இருந்ததாகக் கூற முடியுமா?

1991 நெருக்கடி மிகவும் தீவிரமானது. உடனடியான, துணிச்சலான பதில் நடவடிக்கை தேவைப்பட்டது. நிதியமைச்சர் மன்மோகன் சிங், பிரதமர் நரசிம்ம ராவின் முழு ஆதரவோடு விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டார். நெருக்கடியைச் சமாளிக்க மட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நெருக்கடியையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமைப்பு முறையையே மாற்றியமைக்கும் அளவுக்குக் கட்டமைப்புகளில் மாறுதல்களைக் கொண்டுவந்தார். 1950-களிலும் 1960-களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிர்வாக முறைமை அதற்குப் பிந்தைய காலத்துக்குப் பொருந்தாமல் போய்விட்டது. அதைப் பற்றிப் பலமுறை பேசிவிட்டனர். தொழில், வர்த்தகக் கொள்கையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர். தனியார் துறைக்கும் சந்தைகளுக்கும் முழு வாய்ப்பைத் தர வேண்டும் என்றனர். அரசியல் நிலையில் அவற்றுக்கு ஆதரவில்லை. அதிலும் குறிப்பாக இடதுசாரிகள் ஏற்கவேயில்லை. அதற்குப் பிறகு அத்தகைய துணிச்சலை நான் பார்க்கவேயில்லை. அதே சமயம், அதே போன்ற நெருக்கடியும் ஏற்படவில்லை. மகிழ்ச்சி தரும் அம்சம் என்னவென்றால், நரசிம்ம ராவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துப் பிரதமர்களுமே சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதுதான். திட்டங்களுக்கு இப்போது புதிய பெயர் சூட்டப்பட்டாலும் அவை பழைய திட்டங்களே. 1955 முதல் 1990 வரையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 4% தான் இருந்தது. இதேபோல், தனிநபர் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 2% என்ற அளவில்தான் வளர்ந்தது. சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், சராசரியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக அதிகரித்தது. மக்கள்தொகை பெருகும் வேகம் மட்டுப்பட்டது. நபர்வாரி உற்பத்தி வளர்ச்சி 5.5% ஆனது. அதுதான் வித்தியாசம். வருவாய் வேகமாக உயர்ந்தது, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், தொழில் தொடங்கலாம் என்ற அளவுக்குப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட வறுமை வேகமாகக் குறைந்தது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் மாறிவிட்டன. வறுமைக்கோட்டுக்கு மேலே தள்ளப்படுவது மட்டும் போதாது என்று ஏழைகள் கருதுகின்றனர். தரமுள்ள வேலை, கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற சேவைகளைப் பெறுவதில் சம உரிமை வேண்டும் என்கின்றனர். நாம் இத்துறையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

சீர்திருத்தங்களுக்கு முன்னால், இந்தியாவின் வளர்ச்சி பிற வளரும் நாடுகளை விடக் குறைவாக இருந்தது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு வளர்ந்த நாடுகளைவிட அதிகமாகிவிட்டது. சீனம் மட்டுமே விதிவிலக்கு.

மாற்றங்களின் வேகம் தொடர்பான தன்னுடைய கருத்துகள் மாறிவிட்டன என்று மன்மோகன் கூறியிருக்கிறார்; “மெதுவாக மாற வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால், நாட்டின் சூழலைப் பார்த்தபோது, மெதுவாகச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. அடிப்படையான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கான நேரம் இது என்றே முடிவு செய்தேன்” என்கிறார் மன்மோகன். அவரே பிரதமராகப் பதவி வகித்தபோது ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ வந்துவிட்டதாகப் பின்னர் கூறப்பட்டது. அதைப் பற்றிக் கூறுங்களேன்?

சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால் தொழில் திட்டங்களின் காத்திருப்பு எண்ணிக்கை உயர்ந்தது, அரசு - தனியார் பங்கேற்பில் (பி.பி.பி.) தீர்க்கப்படாத பூசல்கள், அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் போன்றவற்றைத்தான் ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ என்று நீங்கள் கூறுவதாகப் புரிந்துகொள்கிறேன். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது நிச்சயம் பிரச்சினையாக இருந்தது. 2012 இறுதியில் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 8% வளர்ச்சி என்பது ஆதரவான அரசின் கொள்கைகளைப் பொறுத்தது என்று கூறியிருந்தோம். கொள்கை வகுப்பதில் தேக்கநிலை ஏற்பட்டால், வளர்ச்சி வேகம் 5% முதல் 5.5% ஆகக் குறைந்து விடும் என்று எச்சரித்தோம். தேக்கநிலைக்கு முக்கியக் காரணம், தீர்வு காண ஒத்துழைக்காமல் அமைச்சகங்கள் செயல்பட்டதுதான். அதற்கும் தீர்வு காண வழிகள் ஆராயப்பட்டன. அதற்குள் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது.

வெகு உறுதியுடன் நாங்கள் செயல்பட்டது பல முறை. அவற்றிலிருந்து சிலவற்றைக் கூறுகிறேன். 2013-ல் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்பாக அழுத்தம் தரப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இறக்குமதி மதிப்பு அதிகம் - ஏற்றுமதி மதிப்பு குறைவு) அதிகமாகி மொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆனது. அந்நிய மூலதனமும் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அதனால், ரூபாயின் மாற்று மதிப்பு வேகமாகச் சரிந்தது. செலாவணி மாற்று மதிப்பை நெகிழ்ச்சியாக வைத்திருந்ததால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் உதவியைப் பெறாமலேயே நிலை மையைச் சமாளித்தோம். நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தே தீருவது என்ற உறுதியான முடிவை நிதியமைச்சர் அப்போது எடுத்ததும், கைவசம் அதிகளவில் இருந்த அந்நியச் செலாவணி மதிப்பும் கைகொடுத்தன. அப்போது நாங்கள் தயங்கியிருந்தால் விளைவுகள் வேதனை தந்திருக்கும்.

2007-08 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த நிதித் தூண்டல் நடவடிக்கைகளால் பொருளாதாரத் துயர் அதிகமானது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். அந்த முடிவுகளை எடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்…

அந்த நிதித் தூண்டல் முடிவுகளின் பின்னால் நான் இருந்தேன் என்று அவர் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். நிதி நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நிதியமைச்சகம்தான். நெருக்கடிக்கு எதிராக தொடக்கமாகச் சில ஊக்குவிப்புகளை வழங்கலாம் என்பதை ஆதரித்தேன். அப்போதைக்கு அதுதான் சரியான நடவடிக்கை. ஜி-20 அமைப்பும் அதைத்தான் பரிந்துரைத்தது. 2009-10-ல் வளர்ச்சி வீதத்தைப் பாதுகாத்ததற்குப் பிறகு 2010-ல் அவற்றைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாம் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருப்போம் என்று கருதுகிறேன்.

திட்டக் குழு தன்னைப் புதிதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். திட்டக் குழு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

எல்லா நிறுவனங்களுமே தாங்கள் தோற்றுவிக்கப் பட்டதற்கான லட்சியத்தை நிறைவேற்றுகிறோமா என்று அவ்வப்போது பரிசீலித்து வர வேண்டும். புதிய பொருளாதாரச் சூழலில் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாகத் திட்டக் குழு போன்ற நிறுவனம் எப்படிச் செயல்பட முடியும் என்று சிந்திக்குமாறு மன்மோகன் எங்களைக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பாக விரிவான அறிக்கை அளித்த நான், அடுத்து வரும் அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றேன். துறைவாரியான கொள்கைகள், தனியான திட்டங்கள் தொடர்பாக திட்டக் குழு சுதந்திரமாக அதே சமயம் உள்ளுக்குள் மட்டும் பரிமாறிக்கொள்ளும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்திருந்தேன். திட்டமிடல் என்பது எந்தத் திட்டத்துக்கு, எந்த மாநிலத்துக்கு, எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதில்தான் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தியதே தவிர, துறைவாரியான திட்டங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அதேபோல, திட்டங்களை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டுப் பார்த்ததில்லை. தேவைப்படும்போது நிபுணர்களை வரவழைத்துப் பயன் படுத்திக்கொள்ளும் வசதி திட்டக் குழுவுக்கு இருந்தது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தில் பெரும்பாலான திட்டங்களுக்குத் தேவைப்பட்ட நிபுணத்துவ ஆலோசனை, துறைகளுக்கு உள்ளே 80% அளவுக்கும் வெளியே 20% அளவுக்கும் கிடைத்தது. இப்போது அது தலைகீழ் விகிதமாகிவிட்டது. முக்கியமான துறைகளில் இப்போது தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளியில் இருக்கும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறை ஏதும் அரசிடம் இல்லை. ஆலோ சனைக் குழுக்களோ, நிபுணர்க ளின் வழிகாட்டலோ போதாது. அந்தந்தத் திட்டங்களை மேற் பார்வை பார்த்து அமல் செய்யக் கூடிய நிபுணர்கள் நிர்வாகப் பொறுப்பிலே அரசின் சிறப்பு அதிகாரியாகவே இருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2 கோடியில் அந்தந்த வேலைகளுக்கு நிபுணர்களைச் சிறப்பு அதிகாரியாகப் பணியில் அமர்த்திக்கொள்ள தீர்மானம் கொண்டுவந்தேன். அதை வரவேற்றவர்கள், அப்படி ஒருவரைக் கொண்டுவரும் நடைமுறை சிக்கலானது என்று குறிப்பிட்டனர். ஒரு பத்திரிகை அந்தத் தொகை ரொம்ப அதிகம் என்றுகூடக் குற்றம் சாட்டியிருந்தது!

திட்டக் குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. முந்தைய அமைப்பில் இருந்த குறைகளைக் களையும் விதத்தில் இது இருக்கிறதா, இப்போதைய தேவைக்கு ஏற்ப அமைந்துள்ளதா?

நீங்கள் கூறியபடி இது தொடங்கப்பட்டு சில காலம்தான் ஆகிறது. அங்கே என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாத போது கருத்துச் சொல்ல முடியவில்லை. புதிய அமைப்பு நன்றாகச் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தரமான ஆய்வும் கூர்மையான ஆலோசனைகளும் அரசின் கொள்கையைச் சிறப்பாக அமல்படுத்த உதவும். அதுதான் நிதி ஆயோக்கின் வரம்பு என்று கேள்விப்படுகிறேன்.

வளர்ச்சி தொடர்பாக மத்திய புள்ளிவிவரத் துறை அளித்த மதிப்பீடுகள் சரியாகத்தான் கணக்கிடப்பட்டுள் ளனவா என்ற சந்தேகம் இருப்பதாக ப.சிதம்பரம் உட்பட பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தொழில்துறையில் உண்மையிலேயே மீட்சி ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. தரவுகள் சுட்டிக்காட்டும் அளவுக்கு உண்மையில் அத்துறை மீட்சி பெற்றுவிடவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விவாதத்தில் உங்களுடைய நிலை என்ன? புள்ளிவிவர மதிப்பீடுகளுக்கும் உண்மை நிலைக்கும் இடையே எப்படித் தொடர்பில்லாமல் போக முடியும்?

சிதம்பரம் மட்டும் இந்த சந்தேகத்தை எழுப்பவில்லை. அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே வியப்பு தெரிவித்திருக்கிறது. எனவே, தீர்க்கப்படாத சில அம்சங்கள் இதில் இருக்கின்றன. வளர்ச்சி வீதம் தொடர்பான புதிய புள்ளிவிவரங்கள் பழைய குறியீடுகளைவிட அதிகமாக இருக்கின்றன. இதைப் பற்றி விசாரிக்க பிரணாப் சென் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் வெகு விரைவில் இதைத் தீர்த்துவைக்க வேண்டும்.

இப்போது சீனத்தில் வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது. சீனத்தைவிட நம்முடைய வளர்ச்சி வேகம் அதிகம். சீனத்தின் புள்ளிவிவரம் உண்மையான வளர்ச்சியை மிதமிஞ்சிக் காட்டுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனத்தின் புள்ளிவிவரமே கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நம்முடையதும் அப்படியே கேள்விக்குள்ளாக்கப்படும். நம்மிடம் உள்ள தகவல்களை எந்த அளவுக்கு வேகமாக பரிமாறிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

இருண்டு காணப்படும் உலகப் பொருளாதாரச் சூழலில் இந்தியா அமைதியான தனித் தீவாகக் காட்சி தருகிறது. பன்னாட்டுச் சூழலின் அதிர்ச்சியால் பாதித்துவிடாமல், உள்நாட்டுத் தொழில் துறை அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது இப்படியே நீடிக்குமா? இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தி, நுகர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா?

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி நடைமுறையை நாம் சார்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. அதனாலேயே நாம் உலக அளவிலான அதிர்ச்சிகளால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறோம் என்று பொருள் அல்ல. முன்பைவிட நாம் இப்போது வெளிப்படையாகச் செயல்படுகிறோம். எனவே, உலகின் எந்தப் பகுதியில், எது நடந்தாலும் நமக்கும் அது முக்கியமே. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு என்ற அதிர்ச்சி இப்போது நமக்குச் சாதகமாக இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டு அம்சங்களைப் பொறுத் திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் தனியார் முதலீட்டைப் புதுப்பிப்பதும் முக்கியம். இவ்விரண்டுமே இறக்குமதியைத்தான் ஊக்குவிக்கும். வெளி வர்த்தகப் பற்றுவரவை நிர்வகிக்க ஏற்றுமதியை அதிகரித்தாக வேண்டும். இந்தியத் தொழில்துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த நேரடி அந்நிய முதலீடும் அவசியம். நமது உற்பத்தி உலக சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அதற்கு நாம் வர்த்தகப் பேச்சுகளை நடத்த வேண்டும். எனவே, உலகப் பொருளா தாரத்துடன் தொடர்புகொள்வது அவசியம். உலகப் பொருளாதாரத்தை அலட்சியம் செய்தால் நமக்கு அது ஆபத்தைத் தரும்.

ரகுராம் ராஜனுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க மறுத்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. பாஜக அவரை விரட்டிவிட்டது என்றும் கூறுகின்றனர். ராஜன் இந்தியாவில் ஆற்றிய பணி குறித்தும் அவர் வெளியேற்றப்படும் விதம் குறித்தும் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

‘‘மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்கிறேன்’’ என்று ராஜனைச் சொல்ல வைத்தது எது என்று தெரியாது. இந்தியப் பொருளாதார நிர்வாகக் குழுவினருக்கு இது உண்மையிலேயே பேரிழப்பு. மிகச் சிறந்த ஆளுநராக அவர் பணியாற்றினார். சர்வதேச அளவில் அவர் மீது மரியாதை அதிகம். இப்படிப்பட்ட திறமைசாலி ஆளுநராக இருந்தால் இந்தியாவின் கொள்கைகளுக்கே தனி மதிப்பு ஏற்படும்.

2013-ல் ஏற்பட்ட நெருக்கடியை நன்றாகக் கையாண்டார். அவர் தொடங்கிய சீர்திருத்தங்களை வெகு விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்போது இருப்பதைவிட மோசமான நிலைக்கு சீனம் செல்லுமா?

சீனத்தின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கவலை உலக நாடுகளிடையே காணப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாகப் பராமரித்துவந்த வளர்ச்சி வேகத்திலிருந்து அவர்கள் குறைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 6.5% ஆக அதன் வளர்ச்சி குறைந்தாலும், இந்த நிலையை அது பராமரிக்க முடிந்ததே பாராட்டுக்குரியது என்று கருதப்பட்டது. ஆனால், அந்தத் தரவும் உண்மைதானா என்கிற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. சிலர் அது 4.5% என்று கூறுகின்றனர். அப்படியானால், வேலைவாய்ப்பு குறைந்து சீனத்திலேயே பதற்றம் அதிகரித்துவிடும். சர்வதேச நெருக்கடிகளுக்குப் பிறகும் கடன் வழங்கியதால் மனை வணிகத் துறை அதிக அடுக்கங்களைக் கட்டி பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க உதவியது. ஆனால், வேலைவாய்ப்பும் வருமானமும் மற்ற துறைகளில் இல்லாததால் அந்த வீடுகளை வாங்க ஆட்கள் இல்லை. சீனப் பொருளாதார வளர்ச்சியின் அச்சாணியே ஏற்றுமதிதான். இப்போது உலக நாடுகள் நெருக்கடிகளில் ஆழ்ந்திருப்பதால் சீனத்தின் ஏற்றுமதி பெருகுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. சீனம் பாதிக்கப்பட்டால் அது அலையலையாக பிற நாடுகளிலும் எதிரொலிக்கும்.

பிரெக்ஸிட் சொல்வது என்ன? ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஏற்பாடு வெற்றியா, தோல்வியா? இதன் பொருளாதார விளைவுகள் என்னவாக இருக்கும்?

பிரெக்ஸிட் முடிவு வியப்பளித்தது. மேல்தட்டு வர்க்கம் எவ்வளவோ இனிமையாகப் பேசினாலும் சாமானிய பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கையில் வளம் இல்லை. அந்த விரக்தியே பிரெக்ஸிட் ஆதரவாக மாறியிருக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்ல; ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. வேலைவாய்ப்பு, வருவாய் குறைந்துவிட்ட நிலையில் வேற்று நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது எல்லோரையும் பீதியில் ஆழ்த்திவருகிறது. பிரிட்டன் வெளியேறித்தான் ஆக வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. புதிய பிரதமர் இதை நாடாளுமன்றத்தின் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற சோதனை முயற்சி இனி சரி செய்ய முடியாத அளவுக்குத் தோற்று விட்டது என்று இப்போதே முடிவு கட்டிவிட முடியாது. பிரெக்ஸிட் டால் ஏற்படக்கூடிய ஆக்கபூர்வ முடிவை யூகிக்க முடிய வில்லை. எதிர்மறையாகப் பலது நடக்கும் என்று தெரிகிறது.

உலகம் முழுக்க தேசியவாதம் வலுத்துவருகிறது. இது பொருளாதாரச் சூழலுடன் தொடர்புள்ளதா? உலகப் பொருளாதாரம் எப்போது மீட்சி பெறும்? எந்தவிதப் பொருளாதாரம் மீட்சிக்குத் தலைமை தாங்கும்?

பொருளாதாரம் சார்ந்த தேசியவாதத்தின் எழுச்சிக்கு இப்போதைய நிரந்தரமான பொருளாதார இன்னல்களே காரணம். நிலைமை திருந்திவிடும் என்று அரசுகள் தொடர்ந்து அலறுகின்றன. உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை. சீனா இன்னும் பிரச்சினைகளில் ஆழ்ந்திருப்பதால் இந்த ஆண்டு மீட்சி வரும் என்று நினைக்கவில்லை. ஐரோப்பாவில் பிரச்சினைகள் ஏற்கெனவே அதிகம், பிரெக்ஸிட் வேறு பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டது. அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நாடுகளில் பொருளாதாரம் மீட்சி அடைந்தால், ஓரளவுக்குப் பலவீனமான மீட்சியை அடுத்த ஆண்டு பார்க்க முடியும். கச்சா எண்ணெய் விலை இப்போதைக்கு அதிகமாக உயராது, இது நமக்கு நன்மை தான். ஆனால், ஏற்றுமதிச் சந்தையில் கடும் போட்டி இருக்கும், அது நமக்கு பாதகமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அமைப்புரீதியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டால் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க முடியும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

ராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு!

வரலாற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நினைவு கூர்வது முக்கியமானது. எனினும், உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா என்று சிலாகிக்க ஏதும் இல்லை.

எனக்கு நரசிம்ம ராவ் இப்படித்தான் ஞாபகத்துக்கு வருகிறார். மைனாரிட்டி அரசாக இருந்தும் ஐந்து வருடங்கள் ‘சாமர்த்திய’மாக ஆட்சியில் நீடித்தவர் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடத்திய குதிரை பேரத்திலிருந்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக்கொடி காட்டியது வரையிலான அவரது போக்குகளின் உச்சம், அவரது நந்தியால் வெற்றி. நந்தியால் தொகுதியில் உள்ள பல வாக்கு மையங்களில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமான ஓட்டுகள் பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எப்படி மறப்பது, என்னவென்று எழுதுவது?

நரசிம்ம ராவ் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘இன்சைடர்’ (உள்ளாள்). அவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தபோது பல அரசியல் கட்டுரைகளை ‘இன்சைடர்’ என்கிற புனைபெயரில் ‘மெயின் ஸ்ட்ரீம்’ என்ற ஆங்கில அரசியல் இதழில் எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் ஆசிரியர் யார் என்பது பலருக்கும் அந்நாட்களில் புரிபடவில்லை. அவற்றை ஆராய்ந்து, நரசிம்ம ராவ்தான் புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதிவந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் என்.ராம். ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவில் இருந்துகொண்டே அக்குழுவின் முடிவுகளை புனைபெயரில் கட்டுரையாக விவாதிக்கும் ‘சாமர்த்தியம்’ நரசிம்ம ராவுக்கு மட்டுமே சாத்தியம்.

மறைக்கப்பட்ட ராவின் முகம்

நரசிம்ம ராவின் பல முகங்களை மறைத்துவிட்டு, தாராளமயமாக்கலின் தந்தை என்று இன்றைக்குப் பலர் அவரைப் பாராட்டிக் கொண்டாடுவது அறியாமை அல்லது புரட்டு என்றே சொல்ல வேண்டும். ராவ் மட்டும் அல்ல; வாஜ்பாய், மோடி இவர்கள் எல்லோரின் வரலாறுமே இப்படிப்பட்டதுதான். ‘சாமர்த்திய’ வரலாறு.

இந்தியாவை முழுமையாகத் தம் வசப்படுத்த ஏகாதிபத்தியம் நெடுநாட்களாகக் காத்திருந்தது. ராவ் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோது, ‘சாமர்த்திய’மாக அதைச் செய்துகொடுத்தார். மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார் மயக்கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சொற்கள் அரசின் தாரக மந்திரமாக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த புரட்சியும் உடன் சேர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொல்லைப்புறமாக மாறியது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தனியார்மயமாக்கல் பெருமளவில் சட்டத் தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டே உள் நுழைக்கப்பட்டது என்பதுதான். தனியார்மயமாக்கல் தொடர்பான கொள்கை அறிவிப்புகள் பொது மேடைகளில் பெரிய அளவில் வந்தனவே ஒழிய, நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் அதற்கான விவாதங்கள் ஒலிக்கவில்லை. விஷயம் அதோடு முடியவில்லை. சட்டம் இயற்றும் மன்றங்கள் சரியாகச் செயல்படாதபோது, மக்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றங்கள்தான்.

தனியார்மயம் விரோதம் இல்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளில், இந்தியா ஒரு ‘சோஷலிஸ குடியரசு’ என்று போடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? அரசின் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமானது இல்லையா? இப்படியான கேள்விகளோடு ‘பால்கோ’ நிறுவனத் தொழிலாளர்கள் போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? வழக்கைத் தள்ளுபடி செய்தது. “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.

மேலும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள சோஷலிஸம் என்ற வார்த்தையைக் கேலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது: “சோஷலிஸம் என்பது நம்முடைய சரித்திரத்திலிருந்து கிடைத்த கவர்ச்சிகரமான வார்த்தையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளிலும் காணப்படலாம். இந்தியச் சமூகம், இன்றியமையாத கூறாக சோஷலிஸத்தை மணம் புரிந்துள்ளது என்ற கருத்தாக்கம், மத்திய அரசு 1990-களின் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவால் உதிரத் தொடங்கியுள்ளது.” (உ.பி. மாநில வெண்கலப் பொருட்கள் நிறுவனம் வழக்கு, 2006).

மேலும் அதே தீர்ப்பில் குறிப்பிட்டது: “உலக மயமாக்கலினால் நாட்டின் பொருளாதார, சமூகக் காட்சிகளில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விளக்கும்போது மாறிவரும் பொருளாதாரக் காட்சிகளை மனதில் கொண்டு யதார்த்தமான பார்வையுடன் நீதிமன்றம் செயல்பட வேண்டும்.”

பிறகு உச்ச நீதிமன்றம் இப்படியும் சொன்னது: “நிர்வாக அதிகாரிகள் விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் தொடங்க எண்ணிவருகின்றனர். இதன் மூலம் சமூகம் பொதுவில் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பெருநகரங்களில் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தத்துவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், மாறிவரும் காட்சிகளைக் கணக்கில்கொண்டு, யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்!”

உச்ச நீதிமன்றத்தின் பச்சைக்கொடி

உச்ச நீதிமன்றம் உலகமயமாக்க லுக்கும் தனியார்மயமாக்கலுக்கும் பச்சைக்கொடி காட்டியதோடு மட்டும் அல்லாமல், வெவ்வேறு தரு ணங்களில் அதன் போக்குக்கும் சென்றது என்று சொல்லலாம். மதுக் கடைகளில் மாலை நேரங்களில் பெண்கள் மது விற்பனையாளராக இருப்பதைத் தடை செய்த டெல்லி அரசின் உத்தரவை 2007-ல் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு ஒருபடி மேலே போய் 2013-ல் மராட்டிய அரசு மதுக் கடை பார்களில் பெண்களின் நடனங்களைத் தடைசெய்யும் சட்டத்தையும் ரத்துசெய்தது. சட்டம் இயற்றும் மன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கும் மன்றங்களும் உலகமயமாக்கலை வாரி அணைத்துக்கொண்டபோது மக்கள் நிலை என்னவானது? முதலாளிகள் பார்வையிலிருந்து அல்ல; தொழிலாளர்கள் நிலை மூலமாகவே அதை நாம் அறிய முடியும்.

இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவர்கள் நேரடித் தொழிலாளர்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்கள் எனும் அங்கீகாரம்கூட அவர்களுக்கு இல்லை. எல்லா நிறுவனங்களிலும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மறைமுகத் தொழிலாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. அயல் பணி ஒப்படைப்பு முறையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை, நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதன் காரணம், குறைந்த கூலியில் அதிக வேலை என்பதோடு, அவர்கள் ஒன்று திரண்டு, சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராட மாட்டார்கள் என்பதும்தான்!

தொழிலாளர்களுக்குப் பொருந்தா சட்டங்கள்

‘ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை சம்பந்தப்பட்ட அரசுகள் தடை செய்தால், அந்தத் தொழிலில் அதுவரை ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுத் துறை நிறுவனங்கள் நேரடித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘ஏர் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (1997) உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு ‘ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா’ வழக்கில் ரத்து செய்தது (2001). இன்றைக்குப் பல கோடித் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்கள் எனும் அடிப்படைத் தகுதிக்கான உரிமைகள்கூட இல்லை.

இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி அமைக்கப்போகிறோம் என்கிறது இன்றைய மோடி அரசு. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளின் வேண்டுகோளின்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மோடி ராஜஸ்தான் அரசைத் தனது தனியார்மயமாக்கலின் சோதனைச் சாலையாகச் செயல்படுத்திவருகிறார். அங்குள்ள பாஜக தலைமையிலான தொழிற்சங்க அமைப்புகளே இச்சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவருகின்றன. அதையும் மீறி, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குத் தொழிலாளர் சட்டங்களிலுள்ள முக்கியமான பிரிவுகள் திருத்தங்களின் மூலம் மாற்றி அமைக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமயமாக்கலின் வெள்ளிவிழா ஆண்டைப் பாராட்டி வசனம் எழுதுபவர்கள் எல்லாம், தொழிலாளர் துறையையும் அதற்கான சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், அவர்களுக்கு உலகமயமாக்கலின் குரூரம் புரியும்.

நரசிம்ம ராவ் ஏற்றிப் பிடித்த தீச்சட்டியை நரேந்திர மோடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய வீரர்போல் ஓடி வருவதையும் பின்னாளில் ஒரு கும்பல் ‘சாமர்த்தியம்’ கருதிப் புகழலாம். ஆனால், ராவ்கள், வாஜ்பாய்கள், மோடிகளின் ‘சாமர்த்தியம்’ தேசம் கொண்டாடக் கூடிய வரலாறு அல்ல. மக்களின் கடைக்கோடி மனிதன் அந்த வரலாற்றைக் கண்ணீரினூடேதான் பார்ப்பான்!

- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்

Nov 20, 2015

மந்திரி தந்திரி – ஜெயலலிதா


2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் ‘மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த…  ‘ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது’ என அறிவித்தார்கள். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அந்த அப்பாடக்கர் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வேட்பாளர் பட்டியல் மட்டுமா தெரியாமல் ரிலீஸ் ஆனது? ‘எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடப் போனார்கள்’ என அறிக்கைவிட்டு மீடியாவை மிரளவைத்தார். ‘ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ எனச் சொல்லி, நீதிமன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். ‘சசிகலாவோடு இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என அதிரடி செய்வார். ஆனால், அடுத்த சில மாதங்களில் மொத்த மன்னார்குடி குழுவினரும் கார்டனில் கோலோச்சுவார்கள். மந்திரிகளைப் பந்தாடுவார்; அமைச்சரவையைக் கலைத்துப்போட்டு ரம்மி ஆடுவார்; கார்டனில் அமர்ந்துகொண்டு கோட்டையை இயக்குவார்; கொடநாட்டில் இருந்தபடி தமிழ்நாட்டைத் தெறிக்கவிடுவார்; கட்சிக்காரர்களை ‘எப்போது பதவி பறிபோகுமோ?’ என்ற பதற்றத்திலேயே வைத்திருப்பார்… இதுதான் ஜெயலலிதா; இவர்தான் ஜெயலலிதா!
‘நடிகை நாடாள முடியுமா?’ என எதிரணியினர் முழங்கிக்கொண்டிருந்தபோது, அதை மெய்ப்பித்துக்காட்டியவர். நடிகை, கொள்கைபரப்புச் செயலாளர், எம்.பி., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர்… என ஜெயலலிதாவின் பயணம் நீண்ட நெடியது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரே காரணம் ஜெயலலிதா மட்டும்தான்.
1991, 2001, 2002, 2011, 2015 என… ஜெயலலிதா முதல்வர் அரியணையில் அமர்ந்திருப்பது இது ஐந்தாவது முறை. இடையில் சொத்துக்குவிப்பு வழக்கினால் சுமார் எட்டு மாத காலம் ஓ.பி.எஸ். தமிழக முதல்வராக இருந்தார். அப்போதும் ‘மக்கள்’ முதல்வராக ஜெயலலிதாதான் இருந்தார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் முதல்வராக ஜெயலலிதா சாதித்தது என்ன? காவல் துறைக்கு அமைச்சராக, ஒட்டுமொத்தத் துறைகளுக்கும் தலைமை நிர்வாகியாக ஜெயலலிதா சாதித்தாரா… சறுக்கினாரா?
விதி 110… அறிவிப்புகள் 181
‘பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர், சபாநாயகரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். அந்த அறிக்கையின் மீது அப்போது எந்தவித விவாதமும் இருத்தல் கூடாது’ – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 இப்படித்தான் விவரிக்கிறது. ஆனால், எந்தப் பொது முக்கியத்துவமும் இல்லாத, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமே 110-ன் கீழ் வெளியிடப்படு கின்றன. இந்த நான்கு ஆண்டு காலத்தில்181 அறிவிப்புகளை 110-ன் கீழ் வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா. 110 என்ற விதியை கடைக்கோடி தமிழன் வரை பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவின் பங்கு மகத்தானது. ஆனால், அந்த அறிவிப்புகள் ஏதாவது செயல்வடிவம் பெறுகின்றனவா?
‘வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 2,160 கோடி ரூபாய் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார். இதுவரை எந்தத் துணைக்கோள் நகரத்தையும் காணவில்லை. இந்தத் திட்டத்துக்கு வரைபடம் தயாரிக்கும் பணியே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் ‘கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதா காட்டமாக அறிக்கைவிட்டார். ‘கருணாநிதி வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தைவிட்டும், சி.ஐ.டி காலனியைவிட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தைக் குறைத்தாலே, துணை நகரத்துக்கு அவசியம் இல்லாமல்போய்விடும்’ என்றார். பிறகு அவரே திருமழிசை துணை நகரத் திட்டத்தை அறிவித்து, அதுவும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
‘மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கரில் அனைத்து வசதிகளுடனும்கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என்பது 110-ன் கீழான இன்னோர் அறிவிப்பு. இதுவரை வரைபடம் தயாரிக்கும் பணிகூட முடியவில்லை.  ‘தமிழகத்தின் தென்பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்’ என்றார். நிலம் கையகப்படுத்துவதற்கான வழிகளைக்கூட இப்போதுதான் ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.எம்.டி.ஏ.
ஓடாத மோனோ ரயில்!
கருணாநிதி மெட்ரோ ரயிலுக்கு அடிக்கல் நாட்டியபோது, ‘மெட்ரோ ரயிலைவிட மோனோ ரயில்தான் பெஸ்ட்’ என பக்கம் பக்கமாக அறிக்கைவிட்டு மட்டம் தட்டினார் ஜெயலலிதா. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடினார். ‘சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித்தடங்கள் கொண்டதாக மோனோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார் ஜெயலலிதா. அத்துடன் ‘மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்’ என ஜிகினாக்களைத் தொங்கவிட்டார். எல்லாமே பஞ்சர்தான்.
நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஆறு பணிகள்தான் முடிக்கப்பட்டிருக்கின்றன. ‘மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பல ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன்கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என 2012-ம் ஆண்டில் அறிவித்தார். அதுவும் அப்படியே இருக்கிறது. ‘திட்டம் சாத்தியமா?’ என்கிற சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்துவிட்டு திட்டத்தை அறிவிப்பதுதான் நடைமுறை. ஆனால், இவர்கள் ரிவர்ஸில் பயணிக்கிறார்கள். இந்த உண்மை இப்படி இருக்க… 110 விதி அறிவிப்புகளை எல்லாம் சேர்த்து ‘விதியை மாற்றிய விதி’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட்டிருக்கிறது அரசு.
மின்சார வெட்டு வாரியம்?
தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மக்கள், அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த மின்வெட்டு ஒரு முக்கியக் காரணி.  ஆட்சிக்கு வந்த பிறகு 2011-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொழில் கூட்டமைப்பினரின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என மொத்த மின் உற்பத்தித்திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு உயரும்’ என பந்தக்கால் போட்டார். ‘தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம்’ என்றார். எதுவும் நடக்கவில்லை.
‘2013-14ம் ஆண்டில் வெளி மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க செலவழிக்கப்பட்ட தொகை 30,529 கோடி ரூபாய். இரண்டு ஆண்டுகள் இப்படி வெளிச்சந்தையில் வாங்கும் தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலே 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும்’ என்கிறார்கள் எதிர்க் கட்சியினர். இப்போது கிடைத்திருப்பதோ, கடன் சுமை மட்டும்தான். தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்’ என எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டும் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை அரசு. ‘அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புதிய மின் திட்டம்கூட உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்கள்கூட தாமதப்படுத்தப்படுகின்றன’ எனக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. டெண்டர் கேட்பதில் தாமதம், அதைத் திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், டெண்டர் மீது முடிவெடுப்பதில் தாமதம் என அனைத்துக் கட்டங்களிலும் மெத்தனம்.
உடன்குடி மின்திட்டம் நிறைவேற்றுவதில் நடந்த குளறுபடிகள் ஊர் அறிந்தவை. 2007-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2012-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால் எட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, தொடங்கிய புள்ளிக்கே வந்து நிற்கிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் 80 கோடி ரூபாய் வீணானதுதான் மிச்சம்.
கேபினெட் கலைப்புகள்!
இந்தியாவிலேயே முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதன் முழுப் பெருமிதமும் ஜெயலலிதாவையே சேரும். நான்கரை ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ‘முன்னாள்’கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்களை முதலமைச்சர் மாற்றலாம். அது அவரது அதிகாரம். ஆனால், அந்த அதிகாரத்தை சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. அமைச்சரவையைப் பந்தாடுவது ஜெயலலிதாவின் விளையாட்டுக்களில் ஒன்று.  2011-ம் ஆண்டில் ஜெயலலிதாவோடு 34 பேர் பதவி ஏற்றனர். அவர்களில் 11 பேர் மட்டுமே இதுவரை முழுமையாக அமைச்சர் பதவியில் நீடிக்கின்றனர். ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலருக்கு மீண்டும் பதவி கொடுப்பதற்கு என்ன பெயர்? ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா, ஆனந்தன் என நீக்கப்பட்டு, மீண்டும் அமைச்சர் ஆனவர்கள் பலர். பள்ளி கல்வித் துறைக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், பழனியப்பன், கே.சி.வீரமணி என ஆறு பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். பெண் புகாரில் சிக்கி பதவி இழந்த ஆனந்தன், மூன்றே மாதங்களில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கேபினெட்டை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடுவது இல்லை.
ஆலோசகர்களா… அதிகார மையங்களா?
முக்கியப் பதவியில் இருப்பவர்களை டம்மியாக்கிவிட்டு ‘ஆலோசகர்கள்’ என்ற பெயரில் இன்னோர் அதிகார மையத்தை உருவாக்கினார். தலைமைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி என உயர் பதவிகளுக்கும் ‘ஆலோசகர்கள்’ நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலாளராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெற்ற அடுத்த நாளே ‘ஆலோசகர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஷீலா பாலகிருஷ்ணனும் ஓய்வுக்குப் பிறகு ஆலோசகர் ஆக்கப்பட்டார். காவல் துறை தலைமை இயக்குநராகப் பணி நீட்டிப்பில் இருந்து ஓய்வுபெற்ற ராமானுஜம், அரசின் ஆலோசகராக அமர்த்தப் பட்டார். வெங்கடரமணன், ஷீலா ப்ரியா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.
இந்த ஆலோசகர்கள் பதவியும் பதவி நீட்டிப்புகளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை டம்மி ஆக்கியதோடு, சீனியாரிட்டியைக் குலைத்து பதவி உயர்வுகளையும் தடுத்து நிறுத்தியது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்குத் திறமை இல்லை என்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்குப் பதவி கொடுத்து அனைத்து அரசு சலுகைகளையும் அதிகாரத்தையும் தொடர்ந்து அனுபவிக்க வகைசெய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
ஏட்டிக்குப் போட்டி!
சென்னைத் துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையில் பறக்கும் சாலைத் திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. 30 சதவிகிதப் பணிகள் முடிந்திருந்த நிலையில், ‘கூவம் ஆற்றில் நீர் தடைபடும்’ எனச் சொல்லி திட்டத்தை நிறுத்தினார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சென்னையின் புறவழிச் சாலையில் இருந்து துறைமுகத்துக்கு எளிதாக சரக்குகளைக் கொண்டுபோயிருக்க முடியும். கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை அனுப்புவதில் பிரச்னை தீர்ந்திருக்கும். இப்படி முதலீட்டுக்கான எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதுதான் கொடுமை.
ஜெயலலிதாவின் ஏட்டிக்குப் போட்டி அரசியலின் இன்னொரு முகம், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு எனச் சொல்லி நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் ஜெயலலிதா. நான்கரை ஆண்டுகள் முடியப்போகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. ரகுபதி கமிஷனுக்காக 1.53 கோடி ரூபாய் செலவானதுதான் மிச்சம். ‘கருணாநிதி கட்டிய அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறேன்’ என ஜெயலலிதா சொன்னதும் நீதிமன்றம் குட்டு வைத்தது. அதனால் நூலகம் காப்பாற்றப்பட்டபோதும், அந்த நூலகத்தை முடக்குவதுபோல புதிய புத்தகங்கள் வாங்காமலும், அடிப்படை வசதிகளைச் செய்யாமலும் அரங்கத்தைப் பூட்டிவைத்தும் பழிதீர்த்தார் ஜெயலலிதா.
காவல் துறையா… ஏவல் துறையா?
காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா, அதைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்பதற்கு சந்திசிரிக்கும் சட்டம் – ஒழுங்கே சாட்சி. ‘பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்’ எனப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை காக்கிகள் நடத்திய விதம் மனசாட்சியுள்ள அத்தனை பேரையும் முகம் சுளிக்கவைத்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யுவராஜ், போலீஸுக்கு தண்ணிகாட்டியதை மறக்க முடியுமா? இந்திய வரலாற்றிலேயே தேதியும் இடமும் குறித்து போலீஸில் சரண்டர் ஆனது யுவராஜ் மட்டும்தான்.
‘ஸ்காட்லாந்து யார்டு’ என மார்தட்டிக்கொண்டிருந்த தமிழ்நாடு காவல் துறை ‘டாஸ்மாக் கார்டாக’ மாறி ஒயின் ஷாப்களை காவல் காத்தது காக்கிகள் வரலாற்றில் கரும்புள்ளி. முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விசாரித்து ஒரு துரும்பையும் கண்டுபிடிக்கவில்லை. சி.பி.ஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் கால அவகாசம் கேட்பதற்குத்தான் காக்கிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
‘உ.பி., மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சிவகங்கையில் ஒரு சிறுமி மீது காவல் துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை மறக்க முடியுமா? தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் இன்னொரு முகம் கௌரவக் கொலைகள். சிவகங்கை, உசிலம்பட்டி, சாத்தூர், சீவலப்பேரி… என வரிசையாக கௌரவக் கொலைகள் அரங்கேறின. இந்தக் குற்றங்களைத் தடுப்பதைவிட மறைப்பதில்தான் அதிக அக்கறை காட்டியது காவல் துறை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசுப் பேருந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், தீயிட்டு எரித்தனர். விளாத்திகுளத்திலும் விருதுநகர் காரியாப்பட்டியிலும் பஸ்கள் எரிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும் அலுவலகங்களும் தப்பவில்லை. இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தது போலீஸ். ‘மரக்காணம் வன்முறையில் சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க 100 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்’ எனக் கூறி, அதை வசூலித்துத் தருவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தனி அமைப்பை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால், அ.தி.மு.க நடத்திய வன்முறைகளுக்கு எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ‘அ.தி.மு.க-வின் நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 9,000 கொலைகளும் 88,500 கொள்ளைகளும் நடந்திருக்கின்றன’ என்கிறார் ராமதாஸ். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள் மற்றும் பதிவுசெய்யப்படும் வழக்கு விவரங்களை காவல் துறை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்தத் தகவல்கள் வெளியாவதை நிறுத்திவிட்டார்கள்.
தமிழ்நாடு போலீஸ் சம்பாதித்துவைத்திருக்கும் இன்னொரு பெயர் ‘வேடிக்கை போலீஸ்’. சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஆரம்பித்த இந்த வேடிக்கை, இப்போது வரை தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதாவை விமர்சித்தபோது தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க-வினர் இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ், அ.தி.மு.க-வினர் சத்தியமூர்த்தி பவனை ஷிஃப்ட் போட்டு அடித்து நொறுக்கியபோது, கைகட்டி வேடிக்கை பார்த்தது. வேறு எதையும் உருப்படியாகச் செய்யவே இல்லையா? ஏன் இல்லை… சேலம் மேற்குச் சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கணேசன், காலில் அடிபட்டதாகக் கூறி10 நாட்கள் லீவு போட்டுவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் கரைவேட்டி கட்டிக்கொண்டு களத்தில் நின்றார். அவர் கரை வேட்டி கட்டி செய்த வேலையை மற்றவர்கள் காக்கியை அணிந்துகொண்டு செய்கிறார்கள், அவ்வளவுதான்!
ஒளிரும் டாஸ்மாக்… மிளிரும் மிடாஸ்!
படிக்கவைக்கவேண்டிய அரசு, குடிக்கவைக்கும் அவலத்தைக் கண்டித்து போராடிய சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி, தன் உயிரையே இழக்க நேர்ந்தது. ‘மூடு… டாஸ்மாக்கை மூடு…’, ‘ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம்…’ என பாடல்கள் பாடிய கோவன், தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராயப் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கை’ எனச் சொல்லி டாஸ்மாக் கடைபரப்பி மக்களின் சமூகப் பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் ஆட்சியை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்க முடியாது. ‘மதுவை விற்று மக்களைக் கொல்லும் அதிகாரம் சமூக விரோதிகளுக்கு இல்லை. எங்களுக்கு மட்டுமே உண்டு’ என்பதை உரக்கச் சொன்னது ஜெயலலிதாவின் ஆட்சிதான்.
சரக்கு விற்றே ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ‘கல்லா’ கட்டும் அளவுக்கு கரன்சி இங்கே புரள்கிறது. ‘சமூக விரோதிகளிடம் பணம் குவிந்துவிடக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு மிடாஸும் எலைட்டும் எஸ்.என்.ஜெ-வும்தான் மஞ்சள் குளிக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் நான்கு புதிய மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. முந்தைய தி.மு.க ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. ஜெயலலிதா ஆட்சியின் கடின உழைப்பால், ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உயர்ந்துகொண்டிருக்கிறது.
மொத்தம் 19 நிறுவனங்கள் டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்கின்றன. டாஸ்மாக் கொள்முதலில் மிடாஸுக்குத்தான் முதல் இடம். இது யாருடைய நிறுவனம் என்பது ஊரறிந்த செய்தி. மது வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, போலி மதுபானம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 10581 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகளைச் சொல்வதற்கு எந்த ஓர் இலவச டோல்ஃப்ரீ நம்பரையும் காணோம்.
‘அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 2011-ம் ஆண்டு முதல் கள்ளச்சாராய சாவுகளே இல்லை’ எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறது அரசு. சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், குடும்பத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு… இவற்றை எந்தக் கணக்கில் சேர்ப்பது? உங்களின் டாஸ்மாக் சரக்கை அருந்திவிட்டுதானே திருவள்ளூர் சோழவரம் அம்பேத்கர் நகர், கிருஷ்ணகிரி தொட்டமஞ்சி ஊராட்சி தொடகரை கிராமம்… என சிறுமிகள் சீரழிக்கப்பட்டனர்? டாஸ்மாக் மதுவால்தானே கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி கூட்டாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்?
முறைகேடுகள், ஊழல் புகார்கள்!
முட்டையில் தொடங்கி தியேட்டர் வரை முறைகேடு புகார்கள் வகைதொகை இல்லாமல் அணிவகுக்கின்றன. ‘டாப் 10 ஊழல் பெருச்சாளிகள்’ என பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள் சினிமா போல டிரெய்லர்  வெளியிடுகிறார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கரன்சி வெறிக்கு உயிரையே விலையாகக் கொடுத்தார் முத்துக்குமாரசாமி. டிரைவர் வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் பணம் வாங்கித் தரச் சொல்லி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவரது ஆட்களும் காட்டிய அடாவடியில்தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக பலரும் பேசினார்கள். அடிமட்டத்தில் அல்ல, அமைச்சரவைக்குள்ளேயே புகார்கள் புரையோடிப்போனபோதும் ஜெயலலிதா பக்கத்து மாநிலத்தில் நடந்த விவகாரம்போல கண்டும்காணாமலும் இருந்தார். எதிர்க்கட்சிகளும் மீடியாவும் விவகாரத்தை வெளிச்சம் ஆக்கியபோதுதான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்கினார்.
முட்டையில் பூஜ்ஜியம்!
தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக 68 லட்சம் பேர் பயன்பெறும் பெரிய திட்டமான சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் ஏகப்பட்ட கோல்மால்கள். வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது அரசு. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக டெண்டர்கள் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட வரையில் பிரச்னை இல்லை. திடீரென்று இந்தக் கொள்முதல் முறை மாற்றப்பட்டது. தமிழ்நாடு முழுக்க ஒட்டு மொத்தமாக டெண்டர் விடும் முறையைக் கொண்டுவந்தனர். ‘ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப்பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்கவேண்டும். அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ‘இவை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு’ என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பினாலும் அரசுத் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்குக்  கிடைக்கும் முட்டைகளை, அதைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் கொடுமையும் நடந்தது. ‘ ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப்பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம். அந்த நிறுவனம்தான் தமிழக அரசுக்கு முட்டை சப்ளை செய்கிறது’ என விலாவாரியாக எடுத்துவைத்தும் ஜெயலலிதா அசரவில்லை.
ஆவின் கபளீகரம்!
ஆவின் நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய முறைகேடு, பால் கலப்பட விவகாரம். தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன்தான் இந்த முறைகேட்டின் சூத்திரதாரி. ஆவின் பாலை டேங்கர் லாரிகளில் கொண்டுவரும்போது, வழியில் நிறுத்தி பாலைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்யப்பட்டுவந்தது. இப்படிப் பல ஆயிரம் லிட்டர் பால் தினம்தோறும் கொள்ளைபோனது. அதிக அளவில் தண்ணீர் கலந்ததை மறைக்க பல்வேறு ரசாயனப் பொருட்களைக் கலந்து, தரமற்றப் பாலை பொது மக்களுக்கு விநியோகித்தார்கள்.
ஆவின் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்த வைத்தியநாதன், டேங்கர் லாரி கான்ட்ராக்ட் எடுத்து  பல வாகனங்களுக்கு அதிபராகி பெரும் செல்வந்தராக மாறினார். விவகாரம் வெடித்து வேறு வழி இல்லாமல் வைத்தியநாதனை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. ‘ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்’ என சென்னை உயர் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்குப்போனது நிலைமை.
கோகோ கோலா கோல்மால்!
‘எங்கோ ஓர் ஆலையின் சங்கு ஒலிக்கும்போது ஒரு கிராமத்தின் அழிவு ஆரம்பமாகிறது’ என்பார்கள். ‘ஓர் ஆலை உருவாகிறது என்றால், பலருடைய பாக்கெட் நிரம்பப்போகிறது’ எனப் புரியவைத்துவிட்டது கோகோ கோலா விவகாரம். அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் அடாவடி அத்துமீறலுக்கு நேரடி சாட்சி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை கோகோ கோலா ஆலை விவகாரம். சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா ஆலை அமைக்க, பல சலுகைகளை வழங்கி ஒப்பந்தம் போட்டது அரசு. கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம்… என ஆலைக்கு எதிராக பெரிய கொந்தளிப்புகள் நடந்தன. ‘கோகோ கோலா நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை’ என சட்டமன்றத்தில் சொன்னார் வெங்கடாசலம். ஆதாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அள்ளிப்போட்டதும் அமைச்சரின் பொய் அம்பலம் ஏறியது. ‘இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சரா… இல்லை கோகோ கோலா நிறுவனத்துக்கு முகவரா?’ என போர்க்கொடி தூக்கினார் இளங்கோவன். வேறு வழி இல்லாமல் கோகோ கோலா தொழிற்சாலைக்குத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு.
பகாசுர கிரானைட் கொள்ளை!
16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையைக் கண்டுபிடித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மதுரை கலெக்டராக இருந்த சகாயம். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சகாயத்தைப் பந்தாடினார் ஜெயலலிதா. சகாயம் அறிக்கை மீடியாவில் வெளியானபோதுதான் கிரானைட் கொள்ளையின் முகம் ஊருக்குத் தெரிந்தது. கிரானைட் முறைகேட்டை விசாரிக்க சகாயத்தை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் ஜெயலலிதா அரசு, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை. அரசை எச்சரித்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பிறகுதான், விசாரணைக்கு ஒப்புக்கொண்டது அரசு. ஒப்புக்கொண்டார்களே தவிர, இப்போது வரை ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் ‘எலும்புக்கூடுகளைக் களவாடிவிடுவார்கள்’ என தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் சுடுகாட்டில் படுத்துக் கிடந்தார்.
கிரானைட் கொள்ளை யால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மோசடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாக இருக்கிறது அரசு. கிரானைட் விவகாரத்தில் அரசு காட்டும் சண்டித்தனம் சந்தேக அதிர்வலைகளை உண்டாக்குகிறது.
பருப்பு கொள்முதல் ஊழல்
பருப்பு கொள்முதல் முறைகேடு, உணவுத் துறையில் நடக்கும் ஊழலுக்கு ஒரு சாம்பிள். ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. ‘வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம் பருப்பும் துவரம் பருப்பும் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டால், அரசுக்கு  730 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டுக்கான பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது அரசுக்குக் கூடுதல் இழப்பு ஏற்படும். பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஏதோ ஒரு நன்றிக் கடனுக்காக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் ஆர்டர் வழங்கப்படுவது ஏன்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் டாக்டர் ராமதாஸ்.
தாது மணல் கொள்ளை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்காக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு, கடத்தப்படுவதாக புகார் எழ… ‘சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், அரசுக்குப் பரிந்துரை செய்தார். இதனால் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ‘அந்த ஆய்வு அறிக்கையை ஏன் இதுவரை வெளியிடவில்லை?’ என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும் கண்டுகொள்ளப்படவில்லை. 71 தனியார் குவாரிகளிலும் தாது மணல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை நீடிக்கும் நிலையில் வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேர்ல்ட் கார்னெட் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சொந்தமான குவாரிகளில் மட்டும் தாது மணல் வெட்டி எடுக்க நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டிருக்கிறது.
ரேஷன் அரிசி கடத்தல்
‘தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது’ என அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை. 2011-12ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டதாகச் சொன்னது அந்த அறிக்கை. இதன் மதிப்பு 610 கோடி ரூபாய்.
கர்நாடகாவுக்காகக் கள்ள மௌனம்!
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு… என தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளில் துணிவான சட்டப் போராட்டம் நடத்துவதில் ஜெயலலிதா முன் நின்றார். காவிரியின் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவைத்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என சுற்றியிருக்கும் மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கும்போது எல்லாம் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் அனல் பறக்கும். இவை எல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான 2014-ம் ஆண்டு செப்டம்பர் வரையில்தான். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவின் குணம் மாறிப்போனது.
கர்நாடகா மேக்கேதாட்டூவில் அணை கட்டும் விவகாரம் பற்றி எரிந்தபோது, ஜெயலலிதாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. விவசாயிகள் ஒன்று திரண்டு பந்த் நடத்தியபோது அதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கர்நாடகாவைக் கண்டிக்கும் வாசகங்கள் இல்லை. இலங்கையைக் கண்டித்து தீர்மானங்கள் போட முடிந்தவர்களால் கர்நாடகாவைக் கண்டிக்க முடியாமல்போனதற்குக் காரணம், கர்நாடகாவில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு அல்லாமல் வேறு என்ன?
பரணில் தூங்கும் விருதுகள்!
சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்… என தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த விருதுகளை 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையில் ஆறு ஆண்டுகளாக வழங்காமல் வைத்திருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருது, திரைப்படங்களுக்கு அரசு மானியம், சின்னத்திரை விருதுகளும்கூட நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
சினிமா விருதுகளுடன் வழங்கப்படும் அறிஞர் அண்ணா, கலைவாணர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், தியாகராஜ பாகவதர் பெயர்களிலான விருதுகளையும் பரணில் கட்டிவைத்துவிட்டார்கள்.
விரயமாகும் மக்கள் பணம்!
விளம்பரத்தால் திரைப்படங்களை ஓட்டலாம்… அரசாங்கத்தை ஓட்ட முடியுமா? முடியும் என்பதற்கு ஜெயலலிதா ஆட்சிதான் முன்னுதாரணம். ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சாதனை விளம்பரங்களுக்கு கோடிகளில் கரன்சிகள் கொட்டப்பட்டன. முதல் ஆண்டு சாதனைக்கு 29 கோடி ரூபாய் தொடங்கி, இப்போது நான்கு ஆண்டு சாதனைக்கு 20 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது.
கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதால் 76.04 கோடி ரூபாய் கூடுதல் செலவு. இப்படி மாற்றப்பட்ட மருத்துவமனையை நேரில் போய் திறக்காமல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்தத் திறப்பு விழா விளம்பரச் செலவு மட்டும் 1.74 கோடி ரூபாய்!
100 நாள் சாதனை மலர், ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை என ஆண்டுக்கு ஒரு மலர், ‘அம்மாவின் எழுச்சிமிகு உரைகள்’, ‘அம்மாவின் அமுத மொழிகள்’, ‘அம்மாவின் முத்தான கதைகள்’ போன்ற தலைப்புகளில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் புகழ் பாடின. அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் வெளியிடப்படவேண்டிய இந்தப் புத்தகங்களை எல்லாம் அரசு சார்பில் வெளியிட்டு மக்கள் பணத்தை வீணடித்தார்.
மீடியா தொடர்பு!
2011-ம் ஆண்டு தேர்தலில் வென்ற குஷியில் இருந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், ‘நமக்குள் ஓர் ஒப்பந்தம் வைத்துக்கொள்வோம். போகும்போது வரும்போது எல்லாம் என்னிடம் பேட்டி கேட்காதீர்கள். வாரத்துக்கு ஒரு முறை அதாவது செவ்வாய்க்கிழமை தோறும் உங்களைச் சந்திக்கிறேன்’ எனச் சொன்னார். சொன்னதுபோல அடுத்த செய்வாய்க்கிழமை சந்தித்தார். அதன் பிறகு மீடியாவை டீலில் விட்டார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் நடந்த அதிகாரபூர்வ பிரஸ்மீட்களின் எண்ணிக்கை ஐந்து மட்டும்தான். ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னைக்காக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, டெல்லியில் நடந்த பிரஸ்மீட்கள், எம்.பி தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது ஒரு சந்திப்பு… அவ்வளவுதான். திட்டமிடப்படாத மீடியா சந்திப்புகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. மீடியாவோடு தொடர்பு இல்லாமல் ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருக்க முடியாது. அந்தச் சாதனையையும் படைத்துவிட்டார் ஜெயலலிதா.
விஷன்… இல்லை மிஷன்!
‘தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போகிறேன்’ – ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்போவதாகச் சொல்லி ‘தொலைநோக்குத் திட்டம் – 2023’-ஐ (விஷன்-2023) 2012-ம் ஆண்டில் வெளியிட்டார். இரண்டு வருடங்கள் கடந்து 2014-ம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். உடனே அமைச்சர்கள் கனவே நனவாகிவிட்டதுபோல வார்த்தை மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டார்கள். ஆனால், 15 லட்சம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள், செங்கல்பட்டு – தூத்துக்குடி, தூத்துக்குடி –  கோவை, கோவை – செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முக்கோண ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறைத் திட்டங்கள், 25,000 கோடி ரூபாயில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள்… என, காட்டப்பட்ட கலர் மத்தாப்புகள் எப்போது எரியும் என்பது அம்மாவுக்குத்தான் வெளிச்சம்.
‘மாணவன் ஒருவன் தேர்வு எழுதிக்கொண்டிருந்தான். கேள்வித்தாளில் ‘தென்னை மரத்தைப் பற்றி 30 வரிகளில் கட்டுரை ஒன்று எழுதுக!’ என இருந்தது. அந்த மாணவனோ அரைகுறைப் பேர்வழி. ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதும் இல்லை; நன்றாகப் படிப்பதும் இல்லை. தென்னை மரத்தைப் பற்றி, அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பசுவைப் பற்றி அரைகுறையாகப் படித்துவைத்திருந்தான். ஆகவே அவன் எழுதினான்… ‘பசு இருக்கிறதே பசு, அதற்கு நான்கு கால்கள் உண்டு, இரண்டு கொம்புகள் உண்டு, ஒரு வால் உண்டு. அது புல்லைத் தின்னும்…’ இப்படியே 29 வரிகள் பசுவைப் பற்றி எழுதிவிட்டு கடைசியாக ‘இந்தப் பசுவை, தென்னை மரத்தில் கட்டுவார்கள்’ என எழுதினான். தலைப்பு ‘தென்னை மரம்’, எழுதியது பசுவைப் பற்றி! எப்படி இருக்கிறது கதை?’ ஒருமுறை ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைதான் இதுவும். ஜெயலலிதா சொன்னது ஒன்று, செய்தது வேறு… வேறு என்ன சொல்ல! ஆனால், அவர் நம்மிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறார் மிரட்டலாக… ‘செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா?’
ஓட்டு போட்டதைப் பற்றி சொல்கிறாரோ?

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நடந்தபோது, ‘அரசு அனுமதி கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. தனியார் நிறுவனம், விதிகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது’ எனச் சொன்னார் ஜெயலலிதா. விசாரணை கமிஷனும் இதைத்தான் வழிமொழிந்தது. ‘ஜெயலலிதாவிடம் பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்றால், கூடை வடிவப் பூங்கொத்துதான் தர வேண்டும்; இரண்டு அடி தள்ளி நின்று நீட்ட வேண்டும்; முதலமைச்சர் தொட்டுத் தந்து, உதவியாளர் வந்து வாங்கும் வரையில் அந்தப் பூங்கொத்தைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். போட்டோவுக்கு இந்த பொசிஷனில் இருந்துதான் போஸ் தர வேண்டும்…’ என்றெல்லாம் பூங்கொத்துத் தருபவர்களுக்கு விதிகள் போடப்படுகின்றன. ‘முதலமைச்சருக்கு அளிக்கப்படும் பூங்கொத்தில் பிசிறுகள் இருக்கிறதா… ஸ்டாப்ளர் பின் எதுவும் உள்ளதா… பூக்களில் முட்கள் இருக்கின்றனவா?’ என எல்லாவற்றையும் பரிசோதிப்பார்கள். முதலமைச்சருக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கு இத்தனை ரூல்ஸ் போடுபவர்கள், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்படும்போது எங்கே சென்றிருந்தனர்? பூங்கொத்தைவிட மனித உயிர்கள் மலிவாகிவிட்டனவா?
நன்றி - ஆனந்த விகடன்