Showing posts with label Medicine. Show all posts
Showing posts with label Medicine. Show all posts

Jul 8, 2016

முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்?

‘இன்றைக்கு யார் யாரெல்லாம் சாப்பிடலை? சாப்பிடாதவங்க எல்லாரும் கையைத் தூக்குங்க’- மருத்துவப் பணி காரணமாகக் கிராமப்புறப் பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். அநேகமாகச் சரிபாதிக் குழந்தைகள் கையைத் தூக்கிவிடுவார்கள். பள்ளிக்கு நேரமாச்சு, பஸ்ஸுக்கு லேட்டாயிருச்சு, பசிக்கலை, வீட்டில் சமையல் செய்யலை, பழைய சோறு சாப்பிடப் பிடிக்கலை என்பது போன்ற காரணங்களைச் சொல்வார்கள். ‘வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லை’, ‘பழைய சோற்றைச் சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்பதுதான் அதிகமானோர் சொல்லும் பதில். பொதுவாகக் கிராம ஊராட்சிப் பள்ளிகளின் நிலைமை இதுதான்.

தொடக்கப்பள்ளி சிறுகுழந்தைகள் காலையில் சாப்பிடாமல் வருவதைப் பார்ப்பது வேதனைதான். இதனால் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிச் செல்வேன். அதைப் பார்த்துவிட்டு ‘சார், இன்னைக்குக் கொடுத்துட்டுப் போய்டுவீங்க, நாளைக்கு யார் கொடுப்பாங்க?’ என்று ஒரு ஆசிரியர் கேட்டார்.

மதிய உணவுத் திட்டம்

ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால், பெரியவர்களுக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வரும். எதையும் தெளிவாகப் பார்க்க முடியாது; தலை சுற்றும்; காது அடைக்கும்; எதிலும் கவனம் செலுத்த முடியாது. அப்படியென்றால் சிறு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். பசி மயக்கம், வயது வித்தியாசம் பார்க்குமா என்ன?

பள்ளிகளில் கல்வி இலவசம் என்றிருந்த காலத்திலும் மாணவர்களின் குறைவான வருகைக்கு வறுமைதான் காரணம் என்பதையும் உணவு ஒரு முக்கியப் பிரச்சினை என்பதையும் அறிந்த அன்றைய முதல்வர் காமராஜர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. அவர்களுக்கு ஒரு வேளை உணவும் கிடைத்தது.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர், ‘அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்துக்கு வருபவர்களுக்குச் சோறு போடுகிறோம்’ என்று கூறினார். அதற்கு நிதி ஒரு பிரச்சினை என்றால் இந்தத் திட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்று பிச்சை எடுக்கவும் அவர் தயாராக இருந்தார் என்பதை அறியும்போது, இந்தத் திட்டத்தில் அவருக்கு இருந்த அளப்பரிய ஆர்வத்தையும் மாணவர்களிடம் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அறிய முடிகிறது.

நகர்ப்புறக் குழந்தைகளின் பிரச்சினை

கிராமப்புறக் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காதது பிரச்சினை என்றால், நகர்ப்புறக் குழந்தைகளுக்கோ அதுவே தலைகீழ். ‘என் குழந்தை சரியாகச் சாப்பிடுவதேயில்லை, காய்கறி எதை வைத்தாலும் தொடுவதே கிடையாது’, ‘காலையில் ஒரு இட்லி அல்லது ஒரு தோசைதான் சாப்பிடுகிறார்கள். கேட்டால் ‘ஸ்கூலுக்கு நேரமாச்சு’ என்று சாக்குபோக்கு சொல்கிறார்கள்…

ஸ்கூலுக்குக் கொண்டுசென்ற மதிய உணவையும் அப்படியே கொண்டுவந்துவிடுகிறார்கள் அல்லது கொட்டிவிடுகிறார்கள்’ - இது நகர்ப்புறப் பெற்றோரின் ஆதங்கம்; வருத்தம். இதைத் தவிர உடம்பை ‘ஸ்லிம்மாக’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் காலை உணவைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

‘உனக்குப் பிடித்த காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு’ என்று குழந்தைகளிடம் கேட்டால், உருளைக்கிழங்கு, தக்காளி மிஞ்சிப்போனால் கத்திரிக்காய், முருங்கைக்காய்... அதற்கு மேல் சொல்லத் தெரிவதில்லை. லேஸ், குர்குரே, பீட்சா, நூடுல்ஸ், பர்கர் தெரிந்த அளவுக்கு நம் குழந்தைகளுக்குக் காய்கறிகள் தெரியவில்லை.

இதற்கு பெற்றோரான நாமும் ஒரு காரணம். குழந்தைகளை மார்க்கெட்டுக்கு, காய்கறிக் கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வகை வகையான பச்சை, மஞ்சள் காய்கறி, கீரைகளைக் காண்பித்து ஒவ்வொன்றின் சிறப்பையும் எடுத்துச் சொல்லி, நம் வாழ்வில் அவற்றின் பங்கை உணர்த்த வேண்டும். காய்கறிகளை விளைவித்துச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கு உழவர்கள் படும் பாடும் துயரங்களும் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்குப் பிறகு காய்கறிகளைக் குழந்தைகள் ஒதுக்கமாட்டார்கள்.

காலை உணவு ஏன் முக்கியம்?

காலை உணவு மிக முக்கியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடல்நலனில் காலை உணவு முதன்மையானது, ராஜா சாப்பிடுவதைப்போல அது இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். சிறப்பான ஊட்டச்சத்து மிகுந்தும் நிறைவாகவும் அந்த உணவு இருக்க வேண்டும்.

இரவு உணவுக்குப் பின் சுமார் 10 மணி நேரம் கழித்து மறுநாள் காலை 8 மணிக்குத்தான் காலை உணவைச் சாப்பிடுகிறோம். இந்த நீண்ட விரதத்தைப் போக்குவதுதானே காலை உணவு (Break - fast) . இந்த உணவைத் தவிர்த்துவிட்டால், அடுத்து 1 மணிக்குத்தான் மதிய உணவைச் சாப்பிடுவோம். அப்போது முழுமையான உணவைச் சாப்பிடாத இடைவெளி 15 மணி நேரமாகிவிடும். இப்படி இருந்தால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, ரத்தச் சோகை போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதுபோன்ற இடையூறுகள் அடிக்கடி வாழ்க்கையில் இடைப்படும்.

பசியோடு இருக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றலுக்கு, மேம்பட்ட கவனிப்புத் திறனுக்கு, நன்றாகப் பேசுவதற்கு, தனித்திறமைக்கு, சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு, பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு - காலை உணவு மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவைத் தவிர்த்தால், வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மாதவிடாய்க் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. திருமணமான பிறகு பிரசவக் காலத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம், பிரசவமும் சிக்கலாகலாம்.

அனைவருக்கும் அவசியம்

காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் நாள் முழுக்கச் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவுகிறது. நலமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்குக் குழந்தைகளுக்குக் காலை உணவு அவசியம். இதையெல்லாம் உணர்ந்துகொண்டுதான் ‘வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்க வேண்டும்’ என்று காமராஜர் அன்று நினைத்தார்; செயல்படுத்தியும் காட்டினார்.

நலவாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் காலை உணவு, பள்ளி மாணவர்களின் உடல்நலனில் மட்டுமல்லாமல் அவர்களுடைய கல்வியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளியிலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கல்வித் தரத்தை உயர்த்தும் காலை உணவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் 
தொடர்புக்கு: veera.opt@gmail.com

தலைமுடி வளர 60 மூலிகைகள்


எனக்குக் கடந்த இரண்டு வருடங்களாக முடி உதிர்தல் பிரச்சினை உள்ளது. அதற்குக் கடையில் விற்கப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்தினேன். பெரிய பலனில்லை. என் கல்லூரியில் பலருக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. இதற்காக நாங்கள் மொட்டை அடித்துள்ளோம். முடி உதிர்வதை நிறுத்த, கொட்டிய முடிகள் மீண்டும் வளர என்ன செய்ய வேண்டும்? மருத்துவ ஆலோசனை தர முடியுமா?
- அரவிந்தன், மின்னஞ்சல்

முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரும் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே அளவு வளர்வது இல்லை. குளிக்கும்போதோ, ஷாம்பு போடும்போதோ, தலை வாரும்போதோ இதைப் பார்க்க முடியும்.

சிந்தா துஷ்டி அதிகம் வந்தால் முடி உதிரும் என்பதைச் சரகர் கூறுகிறார். வழுக்கைத் தலையை alopecia என்பார்கள். ஆண்களுக்கு உருவாகும் ஒருவிதமான வழுக்கைக்கு androgenetic alopecia என்று பெயர். சில நேரம் புழுவெட்டு போல் ஏற்பட்டுக் கண் புருவம்கூட உதிர்ந்துவிடும்.

பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் போதும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் காணப்படும். பொடுகு நோய் தாருணம் (seborrheic dermatitis) முடி உதிர்வதற்கு ஒரு காரணம். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும்.

ஆயுர்வேதத்தில் அஸ்தி தாதுவின் மலமாக முடி சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் எனும் சிரோ அப்யங்கம் நமது கலாசாரத்தின் ஒரு அங்கம். தென் பகுதிகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். வடப் பகுதிகளில் குளித்து முடிந்து நன்றாக உலர்ந்த பிறகு, எண்ணெய் தேய்ப்பார்கள். முடி வளர்வதற்குத் தேங்காய் எண்ணெயில், மற்றப் பொருட்கள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட எண்ணெய்களே சிறந்தவை.

முதலில் முடியை நன்றாகச் சுத்தி செய்வதற்கு ஒரு மருந்தை எடுத்துக்கொண்டு (20 கிராம் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் இரவு எடுத்துவிட்டு), பிறகு சிகிச்சையைத் தொடங்கலாம். வீட்டிலேயே எளிமையாகத் தைலம் காய்ச்சிக் கொள்ளலாம்.

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக் கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் வரை விடலாம்.

பொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். இளநரை உள்ளவர்கள் அகஸ்திய ரசாயனம் தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடுக்காயும், தசமூலமும் முக்கியப் பொருளாக உள்ளன.

மற்றவர்கள் நரசிம்ம ரசாயனம் எனும் லேகியத்தைச் சாப்பிடலாம். பாலும் எள்ளுருண்டையும் சாப்பிடலாம். இரும்புச் சத்தை அதிகரிக்கக் காந்தச் செந்தூரம் (500 மி.கி.) மாத்திரையில் 2 மாத்திரையை மதியம் சாப்பிடலாம். பித்தத்தின் வேகத்தைத் தணிப்பதற்காக அணு தைலமோ, மதுயஷ்டியாதி தைலமோ மூக்கின் வழியாக 2 துளிகள் விட்டுக் கொள்ளலாம்.

எக்காரணம் கொண்டும் பிறர் பயன்படுத்திய சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். முடியைக் குறைவாக வெட்ட வேண்டும். ஒரு வருடமாவது பொறுத்திருக்க வேண்டும். இன்று எண்ணெயைத் தேய்த்துவிட்டு நாளை முடி வளரவில்லையே என்று வருத்தப்படக் கூடாது.

முடி வளர 60 மூலிகைகள் உள்ளன. எல்லா மருத்துவர்களும் இந்த மூலிகைகளை மாற்றி மாற்றி போட்டே விளம்பரம் செய்கிறார்கள். பல நேரங்களில் விளம்பரங்கள், எண்ணெய் பாட்டில் அட்டைப் படத்தைப் பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள். வீட்டிலேயே எண்ணெய் காய்ச்ச முயற்சிக்க வேண்டும்.

ஒரு சிலருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்தால் ஜலதோஷம் வரும். அவர்கள் ஒரு கரண்டியை லேசாகச் சூடு செய்து, அதில் எண்ணெயை விட்டுப் பிறகு தேய்க்கலாம். அப்படியும் ஜலதோஷம் வந்தால் கடையில் கிடைக்கும் திரிபலாதி கேரம் எனும் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது. எந்தக் கெடுதலும் செய்யாது.

கூந்தல் உதிர்வதைத் தடுக்க
# அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு க எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப் பிரித்துச் சேமியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
# வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
# அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.

எனது மகளுக்கு மூன்றரை வயதாகிறது. மூன்று வயதுவரை அவளுக்கு டயபர் பயன்படுத்தினோம். இப்போது பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நாள் இரவும் குறைந்தது 3 முறை படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள். இதற்குத் தீர்வு காண்பது எப்படி என்று ஆலோசனை தர முடியுமா?
- எம்.நாகராஜன், மின்னஞ்சல்

இந்தப் பிரச்சினையைச் சய்யா மூத்திரம் அல்லது bed wetting என்று கூறுவார்கள். இது தன்னிச்சை செயல். 5 முதல் 8 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு இது வரும். பகலிலும் இரவிலும் இப்படி ஏற்படலாம். பொதுவாக இரவில் தூங்கும்போது குழந்தைகள் அறியாமல் சிறுநீர் போவதைத்தான் bed wetting என்று சொல்வார்கள். இந்த நோயை nocturnal enuresis என்றும் கூறுவார்கள். இது சாதாரணமானதுதான்.
7, 8 வயதுவரைகூடக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவதைப் பார்த்திருக்கிறேன். 10 வயதுக்கு மேல் இது சிறிது சிறிதாகக் குறையும். சில குழந்தைகள் எப்பொழுதும் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். உடல் அதிகச் சிறுநீரை உற்பத்தி செய்வதாலும், மூத்திரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாததாலும், குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதாலும் இப்படி ஏற்படும்.
இதனால் குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. சில குழந்தைகளுக்குக் கூச்ச உணர்வு வரலாம். Self esteem எனப்படும் தன்னம்பிக்கை குறையலாம். குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்படி பெற்றோர்கள் பேச வேண்டும். இது சாதாரண விஷயம்தான். இது மாறிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும். இரவு உறங்கும் முன் அவர்களை வற்புறுத்திச் சிறுநீர் போகச் செய்ய வேண்டும்.
இரவு நேரத்தில் குளிர்ந்த உணவு, திரவ உணவு கொடுப்பதைக் குறைக்க வேண்டும். சில நேரம் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பி, சிறுநீர் போகச் செய்ய வேண்டும். சிறிது சிறிதாகக் குழந்தை தானாக எழுந்து போய்ச் சிறுநீர் கழித்த பின் படுத்துக் கொள்ளும். இந்தச் செயல்முறை நடைமுறையில் பலனளிக்கச் சற்று நாளாகும்.
குழந்தைக்கு மனஉளைச்சல் வராமல் பாதுகாக்க வேண்டும். மூத்திரப்பையில் பழுப்பு, காய்ச்சல் போன்றவை இல்லையா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சில நேரம் இதற்கென்று மருந்து கள் தேவைப்படுகின்றன. அபான வாயுவின் ஜலக் குணம் அதிகரித்து, மூத்திரத்துடன் சேர்ந்து தன்னிச்சையாக மூத்திரம் வெளியேறலாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு நல்லெண்ணெயைச் சூடாக்கி, தொப்புளுக்குக் கீழே தடவி வருவது பலன் கொடுக்கும். விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவுவதும் நல்லது. வஸ்தி ஆமய அந்தக கிருதம் என்னும் நெய்யை இரவு உறங்கும் முன் 1 ஸ்பூன் கொடுக்கலாம். தர்ப்பைப்புல் கஷாயம் சிறந்த கைமருந்து. தாமரை சூர்ணம், அரசம்பட்டை சூர்ணம் இரண்டையும் 5 கிராம் தேனில் கலந்து கொடுக்கலாம்.
இரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். நரம்புகளை வலுவாக்க அஸ்வகந்தாதி சூர்ணம் 3 அல்லது 5 கிராம் பாலில் கலந்து கொடுக்கலாம். தலைக்கு லாக்ஷாதி தைலம் தேய்த்துக் குளிக்கச் சொல்லலாம். நாள்பட இது குணமாகி விடும். அதன் பிறகும் மனதில் கூச்ச உணர்வு அதிகமாக இருந்தால் வல்லாரை நெய் அல்லது கல்யாணகம் நெய் கொடுக்கலாம்.
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in 
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

Nov 12, 2015

நல்லது செய்யும் ‘ஆவி'



தமிழ் சினிமாவில் பேய்கள் ஆட்சி செலுத்தும் காலம் இது. இந்த நிலையில் ஆவி பிடித்தல் என்று சொன்னால், உடனடியாக எந்த ஆவியைப் பிடிக்க வேண்டும்? அது நல்ல ஆவியா, கெட்ட ஆவியா என்பது போன்ற கேள்விகள் எழலாம். மருத்துவரீதியில் ‘ஆவி பிடிப்பது' என்னும் சிகிச்சை முறை, நிச்சயம் உடலுக்கு நல்லதே செய்யும். கிட்டத்தட்ட செலவில்லாத, வீட்டிலேயே எல்லோரும் செய்யக்கூடிய, உடல்நல சிகிச்சை இது.

ஏழைகளின் மருந்து

அதிலும் குறிப்பாக வியர்வையின் சுவை உப்பா, இனிப்பா என்று தெரியாத, உடல் உழைப்பு மிக மிகக் குறைவாக உள்ள மனிதர்களுக்கும், வியர்வையின் வாசனையே அறியாத `ஏ.சி.’ வாசிகளுக்கும் ‘ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்' அத்தியாவசியமான சிகிச்சை. முக வீக்கம், நீர்க்கோவை, தலைபாரம் போன்ற உபாதைகளுக்கு ஆவி பிடித்து, அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீரை, வியர்வையின் மூலம் வெளியேற்றி குணம் பெறலாம். வேது பிடித்து நோய்களை விரட்டும் முறை, இன்றைக்கும் கிராம மக்களிடையே இருக்கிறது.

பொதுவாக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களும், குளிர்காலத்தில் மாதம் இரண்டு முறை, வெயில் காலத்தில் மாதம் ஒரு முறை சுத்தமான நீரில் வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

“இருமல், தும்மலுக்குப் போய் யாராவது பயப்படுவாங்களா? துளசி இல, ரெண்டு கிராம்பு, கொஞ்சம் தும்பப் பூவ சுடுதண்ணில போட்டு, கம்பளில உடம்பு முழுசாப் போத்தி, ஆவி புடிச்சி பாரு, இருமலும் தும்மலும் தெறிச்சி ஓடிடும்!” என்று இயற்கை மருத்துவக் குறிப்புகளை சட் சட்டென்று அன்றைய தாய்மார்கள் வழங்கிவந்தார்கள். ஆனால் இன்றைக்கு, சாதாரண இருமலுக்கும் தும்மலுக்கும்கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ‘ஆன்ட்டிபயாடிக்’ மருந்துகளைத் தேடி, பலரும் மருந்தகங்களில் தஞ்சமடைவதைப் பார்க்கிறோம்.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள வேது முறைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர சில எளிய குறிப்புகள்:

கப நோய்களுக்கு

உடலில் கபம் அதிகரித்து சளி, இருமல் தொல்லைப்படுத்தும்போது கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடித்தால் மூச்சுப் பாதையில் இறுகிக்கிடக்கும் கோழை இளகி, சுவாசம் தங்கு தடையின்றி உலா வரும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுபவர்கள், இந்த முறையை தாராளமாகப் பின்பற்றலாம். மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ‘வாலடைல் ஆயில்' (Volatile oil), சுவாசப் பாதையில் தஞ்சமடைந்த நோய்க் கிருமிகளை அழித்துக் கோழையை வெளியேற்றும் (Expectorant action) செயலைச் செய்கின்றன.

தலையில் நீர்க்கோத்துக்கொண்டு தலை பாரத்தையும், வலியையும் கொடுக்கும் நீர்க்கோவை நோயைப் போக்க எலுமிச்சை விதையையும், மஞ்சள் பொடியையும் நீரில் கலந்து, கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலை பாரம் நீங்கும்.

சித்தர்களின் சூத்திரம்

‘யமக வெண்பாவில்' வேது பிடிக்கும் முறை பற்றி சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார். ‘அரிசனை நொச்சிவெடி யட்டறல் செங்கல்லே’ என்ற வரி வேது பிடிக்க, மஞ்சள், நொச்சி, சாம்பிராணி, செங்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் மற்றும் சாம்பிராணிக்கு ‘கிருமிநாசினி’ (anti-microbial) பண்பும், வீக்கமுறுக்கி (anti-inflammatory) தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வேது பிடிக்கும் நீரில் செங்கல் சேர்த்துப் பயன்படுத்துவதால், நீரின் சூடு நீண்ட நேரம் நிலைத்திருப்பது மட்டுமன்றி, பல வகையான நீர்ப் பிணிகள் நீங்கும்.

தைல மர வேது

தைல மர இலைகளைச் சேர்த்துச் செய்யப்படும் வேது முறையால், நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் அழியும். தைல மர இலைகளுக்கு, தசை இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை இருப்பதால் (Anti-spasmodic action), சுவாசப் பாதையில் உண்டான இறுக்கம் தளர்வடையும். இதில் உள்ள ‘சினியோல்' (Cineole) எனும் வேதிப்பொருளுக்குக் கோழையை அகற்றும் தன்மை உண்டு.

வாத நோய்களை விரட்ட

உடல் வலி, தொல்லை தரும் வாயு நீங்க, அலமாரி டப்பாக்களில் குவிந்து கிடக்கும் வலி நிவாரணி மருந்துகளை `படக்’ என்று எடுத்து விழுங்காமல், சூடேற்றிய நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, நிறைய உப்பு சேர்த்து, அதிலிருந்து வரும் ஆவியை உடலில் படுமாறு செய்யலாம். வாத நோய்கள் நீங்க ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து, அந்த ஆவியை முகரலாம்.

உடல் முழுவதும் வியர்வை பிடிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராகும்.

சருமம் மிளிர

ஆவி பிடிப்பதன் மூலம், தோலில் உள்ள அடைபட்ட துவாரங்கள் திறக்கப்பட்டு, கழிவு வெளியேறி உடலின் வெப்பநிலை சீரடையும். கழிவு நீக்கப்படுவதால், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். மிதமான வெந்நீரில் ரோஜா இதழ்களையும், சந்தன பொடியையும் கலந்து வேது பிடித்துவர முகப்பருவின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து, முகம் பொலிவடையும். தலை, முகம் மட்டுமன்றி, உடல் முழுவதும் வியர்வை பிடிப்பதால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அசுத்தம் அகன்று, தேகம் புத்துயிர்ப் பெறும்.

வேது பிடிக்கக்கூடாதவர்கள்

வறண்ட தேகம் கொண்டவர்கள், சொரியாஸிஸ், கரப்பான், படை போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த மிகைஅழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், காமாலை நோய்க்கு ஆட்பட்டவர்கள் வேது பிடிக்கக்கூடாது. பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் வேது பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.