Showing posts with label Germany. Show all posts
Showing posts with label Germany. Show all posts

Oct 7, 2015

புகையில் கரையும் ஃபோக்ஸ்வேகன்!

எம்.ரமேஷ்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


புகை நமக்குப் பகை. இன்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை புதைகுழிக்கு இட்டுச் சென்றுள் ளதும் இந்தப் புகைதான். இந்நிறுவ னத்தின் தலைவராக கடந்த 8 ஆண்டு களாக கோலோச்சிய மார்டின் வின்டர் கோர்னை வீட்டுக்கு அனுப்பியதும் இந்தப் புகையே.

பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 78 ஆண்டுக்கால சரித்திரத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், இன்று உலக அளவில் கார் விற்பனையில் முக்கிய இடத்தில் உள்ள இந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சரிவு அனைவருக்குமே வியப்பாக இருக்கும். ஜெர்மனியின் உல்ஃப்ஸ்பர்க் நகரில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 1937-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1975-ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமமாக வளர்ந்த இந்நிறுவனம் இன்று ஜப்பானின் டொயோடா நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது.

மக்களின் கார்

1930 களின் ஆரம்பத்தில் ஜெர்மனியில் தயாரான கார்கள் மிகுந்த விலையில் இருந்தன. இதனால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கிளையே பயன்படுத் தினர். அப்போது 50 ஜெர்மானியர்களில் ஒருவரிடமே கார் இருந்தது.

1933-ம் ஆண்டு அப்போதைய ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லர், அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் கார்களை வைத்திருப்பதைப் போல ஜெர்மானியர்களும் வீட்டுக்கு ஒரு கார் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார்.இப்போது உள்ள சுலப தவணைத் திட்டத்தைப் போல வாரத்துக்கு 5 மார்க் சேமிக்கக்கூடிய குடும்பத்தினர் ஒருகாரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி 3.36 லட்சம் மக்கள் காருக்கு முன் பதிவு செய்தனர். பின்புறம் இன்ஜின் கொண்ட கார்கள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய கார்களை தயாரிக்க 1938-ம் ஆண்டு உருவானதுதான் ஃபோக்ஸ்வேகன்.

ஆனால் இரண்டாவது உலக போர் தொடங்கியதால் உற்பத்தி பாதிக் கப்பட்டது. 1939-ம் ஆண்டு ஹிட்லரின் 50-வது பிறந்த தினத்தன்று ஒரு காரை இந்நிறுவனம் அன்பளிப்பாக தயாரித்து அளித்தது. இன்று இந்நிறுவனத்துக்கு 27 நாடுகளில் 100 ஆலைகள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஓடாத சாலைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்நிறுவன கார்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளன.

முதல் பொய்

இரண்டாம் உலகப் போரின்போது இந்த ஆலை ராணுவ வாகனங்களை தயாரிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் டைப் 82 குபெல்வேகென் கார்களை ராணுவ வீரர்களின் போக்குவரத்துக்கு தயாரித்தது. வாகனத் தயாரிப்பில் போர் அடிமைகளும் பயன்படுத்தப்பட்டனர். ஏறக்குறைய 15 ஆயிரம் அடிமைகளை கார் தயாரிப்புக்குப் பயன்படுத்தியதாக இந்நிறுவனம் 1998-ம் ஆண்டுதான் ஒப்புக் கொண்டது. இதைப் போலத்தான் இப்போதும். 2009-ம் ஆண்டிலிருந்து தவறு செய்து வந்தது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதோ 2013-ல். தவறை ஒப்புக் கொண்டதோ 2015-ல். இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்ட பிறகே இந்நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் இந்நிறுவனம் தயாரித்த கார்களின் எண்ணிக்கை 1.10 கோடி.

என்ன தவறு

இந்நிறுவனம் தயாரித்த ஜெட்டா, பீட்டில், கோல்ப், பசாட் மற்றும் ஆடி ஏ3 மாடல் டீசல் கார்களில் புகை அளவு சோதனையைக் காட்டும் சாஃப்ட்வேரில் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகன புகை சோதனை செய்யும்போது இதில் உள்ள சாஃப்ட்வேர் கருவி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்த புகையளவுக்குட்பட்டுத்தான் புகை வெளியேறுவதாகக் காட்டும். ஆனால் உண்மையில் வாகனம் வெளியிடும் புகையின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40 மடங்கு அதிகம்.

4.82 லட்சம் கார்

அமெரிக்காவில் ஓடும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் 4.82 லட்சம் கார்கள் அதிக அளவு புகை வெளியிடுவதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை (இபிஏ) கண்டுபிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் செய்துள்ள இந்த தவறுக்கு 1,800 கோடி டாலர் அபராதம் விதிக்கலாம் என இபிஏ பரிந்துரைத்துள்ளது.

உண்மை வெளி வந்தது எப்படி?

ஃபோக்ஸ்வேகன் கார்களில் மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடித்தவர் 45 வயதுடைய அமெரிக்க பொறியாளர் டேனியல் கார்டெர். வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அடங்கிய குழுவி னருடன் இவர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் ஆய்வு செய்து 2013-ல் இக்குழுவினர் அறிக்கை அளித்தனர். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இரண்டு ஆண்டுகளாகியுள்ளது.

நைட்ரஜன் ஆக்ஸைடு

ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிக அளவு நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 2.5 லட்சம் முதல் 10 லட்சம் டன் வரை நைட்ரஜன் ஆக்ஸைடு கூடுதலாக வெளியேறி சுற்றுச் சூழலை பாதித்துள்ளதாம். இந்த அளவானது இங்கிலாந்தில் உள்ள அனைத்து மின் நிலையங்கள், வாகனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் வேளாண் இயந் திரங்கள் ஒட்டுமொத்தமாக வெளி யிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு அளவுக்கு சமமானது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் ஆக்ஸைடு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இது பிற காற்றுகளுடன் கலக்கக் கூடியது. அவ்விதம் கலக்கும்போது மனிதனுக்கு இதய நோய் ஏற்படும். லண்டனில் மட்டும் நைட்ரஜன் ஆக்ஸைடு சுவாசிப் பதால் ஆண்டுதோறும் 9,500 குறைப் பிரசவ மரணங்கள் நிகழ்வதாக கணக் கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் பேர் மாச டைந்த காற்றை சுவாசிப்பதால் உயிரிழக் கின்றனர். காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணமே வாகன புகைதான். அதிலும் டீசல் வாகன புகை பெரும் பங்கு வகிக்கிறது.

பாடம்

ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி பல நாடுகளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சூழல் விதிமுறைகள் கடுமையாக உள்ளபோதிலும், அங்கேயே ஃபோக்ஸ்வேகன் இத்தகைய மோசடி செய்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம். அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சட்ட திட்டங்கள் கடுமையாக இல்லாத சூழலில் இதுபோன்ற நிறுவனங்கள் எத்தகைய நிலைமைக்கும் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

நஷ்டம்

பங்குச் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்நிறுவனத்துக்கு 6,600 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அரசு அபராதம் விதித்தால் 1,800 கோடி டாலர் செலுத்த வேண்டியிருக்கும். இதைப் போல பிற நாடுகளும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. அந்த நாடுகளும் அபராதம் விதித்தால் அல்லது ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு தடை விதித்தால், நிறுவனத்தின் 78 ஆண்டுக்கால வளர்ச்சி புகை போல மறையும்.

ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி பல நாடுகளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பது இதன் மூலம் உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் விதிமுறைகள் கடுமையாக உள்ளபோதிலும், அங்கேயே ஃபோக்ஸ்வேகன் இத்தகைய மோசடி செய்துள்ளது அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

பிளாட்டினம் விலை சரிவு

ஃபோக்ஸ்வேகன் கார்களின் பிரச்சினையால் பிளாட்டினம் விலை சரிந்துள்ளது. மிகவும் விலை உயர்ந்த உலோகங்களில் பிளாட்டினமும் ஒன்று. ஃபோக்ஸ்வேகன் மோசடியால் அந்நிறுவன பங்குகள் சரிந்ததில் அர்த்தமுண்டு. ஆனால் பிளாட்டினம் விலை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டீசல் என்ஜினில் புகை அளவைக் கட்டுப்படுத்த பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிளாட்டினம் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் பிளாட்டின தேவையில் நான்கில் ஒரு பங்கு ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 17 லட்சம் அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் 28.34 கிராம்) பயன்படுத்தப்படுகிறது. ஒரு காருக்கு சராசரியாக 5.5 கிராம் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

காசோலின் கார்களில் பல்லாடியம் பயன்படுத்தப்படுகிறது. பிளாட்டினம் விலை குறைந்தாலும் பல்லாடியம் விலை குறையவில்லை. ஒரு டிராய் அவுன்ஸ் (31 கிராம்) பிளாட்டினம் விலை சர்வதேச சந்தையில் 900 டாலராக சரிந்துவிட்டது. இதற்கு முன்பு ஒரு டிராய் அவுன்ஸ் 1,100 டாலராக இருந்தது.

ஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே நரேந்திர மோடியும்!

சமஸ்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


அடால்ஃப் ஹிட்லரை ஞாபகப்படுத்தக் கூடியவை ‘ ஃபோக்ஸ் வேகன்’ கார்கள். ஜெர்மனில் ‘ஃபோக்ஸ்வேகன்’ என்றால், மக்களுடைய வாகனம் என்று அர்த்தம்.

சீமான்கள் மட்டுமே கார் வைத்திருந்த காலம். சிறிய ரக கார்களை உருவாக்கும் முயற்சிகள் 1920-களில் தொடங்கின என்றாலும், ஹிட்லரால் புதிய போக்கு உருவானது. அமெரிக்காவைப் போல ஜெர்மனியிலும் வீட்டுக்கு ஒரு கார் சூழலை உருவாக்க நினைத்தார் ஹிட்லர். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாக ஒரு கார் - அதுவும் 999 ரெய்க்ஸ் விலைக்குள். ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை + பொருளாதாரத்தில் உத்வேகத்தை உருவாக்குவதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் இத்திட்டம் உதவும் என்பது கணக்கு.

1937-ல் இப்படித்தான் ‘ஃபோக்ஸ்வேகன்’ உருவாக்கப்பட்டது. இதற்கென ஒரு சேமிப்புத் திட்டமும்கூட அறிமுகப்படுத்தப்பட்டது. 1939-ல் புதிய கார் உருவானது. கூடவே யுத்த சூழலும் ஊழல்களும். தொழிற்சாலைகள் யுத்தத் தளவாட உற்பத்தி ஆலைகளாக மாற, ‘வதைமுகாம் அடிமைகள்’ கொடூரமாக வேலை வாங்கப்பட்ட இடங்களில் ‘ஃபோக்ஸ்வேகன்’ஆலையும் அடக்கம். யுத்தத் துக்குப் பின் எல்லாம் சீர்குலைந்தன. மீண்டும் தலையெடுத்த ‘ஃபோக்ஸ்வேகன்’ 1950-களில் அமெரிக்கச் சந்தையில் கால் பதித்தது. அடுத்த 10 ஆண்டுகளில், தனக்கென அங்கு ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டது. கடந்த முக்கால் நூற்றாண்டில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கார்களை விற்று, உலகின் ஏனைய நிறுவனங்களை எல்லாம் பின்தள்ளி, ‘டொயாட்டா’வுக்கு அடுத்து பெரிய கார் நிறுவனம் எனும் இடத்துக்கு வந்தது; 2018-ல் முதலிடத்தை அடைவது இலக்கு.

இந்நிலையில்தான் எந்த அமெரிக்கச் சூழலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, எந்த அமெரிக்காவைத் தனது வலுவான சந்தை களில் ஒன்றாக உருமாற்றிக்கொண்டதோ, அதே அமெரிக்காவின் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’யால் (இபிஏ) பேரிடிக்கு ஆளாகியிருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. மாசுக் கட்டுப்பாட்டு வரையறை களை எட்டாத தனது டீசல் கார்களில், தரக் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல போலியாகக் காட்டும் மென்பொருட்களை நிறுவியிருந்திருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. இந்த முறைகேட்டைக் கண்டறிந்த அமெரிக்கச் சுற்றுச்சூழல் முகமை, அந்நிறுவனத்துக்கு ரூ. 1.17 லட்சம் கோடி அபராதம் விதித்திருக்கிறது.

செய்தி வெளியான முதல் நாள் ‘ஃபோக்ஸ் வேகன்’பங்குகளின் மதிப்பு 20% வீழ்ந்தது; அடுத்த நாள் மேலும் 17% வீழ்ந்தது. முதலில் கள்ள மவுனம் சாதித்த ‘ஃபோக்ஸ்வேகன்’ அடுத்து, அமெரிக்காவில் நிறுவனத்தின் செயல்பாடு முடக்கப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கோன் பதவி விலகியிருக்கிறார்.

இந்நடவடிக்கைக்குப் பின்னணியில், அமெரிக்க அரசுக்கு என்னென்ன உள் ஆதாய நோக்கங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை; இருக் கலாம். ஆனாலும்கூட, மிகத் துணிச்சலான, மக்கள் - சூழல் நலன்சார் நடவடிக்கை இது. அமெரிக்கர்களிடம் பாராட்ட வேண்டிய விஷயமும்கூட. உலகையெல்லாம் தன் நாட்டின் - தம் தொழில் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டாலும், குறைந்தபட்சம் தன் நாட்டின் மீதும் மக்கள் நலன் மீதும் அமெரிக்கர்கள் கொண்டிருக்கும் கரிசனம் கவனிக்க வேண்டியது.

அமெரிக்காவைப் போலத் தொழில் துறையை வளர்த்தெடுப்பதற்காக தேசத்தின் உடல், பொருள், ஆன்மா என அத்தனையையும் அடகுவைக்கத் தலைப்படும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசியல்வாதிகள் எந்த அளவுக்குச் சூழல் பாதுகாப்பைப் பொருட்படுத்துகிறார்கள்?

அமெரிக்கா எப்போது தொழில் துறையை உத்வேகப்படுத்த ஆரம்பித்ததோ, அதே காலகட்டத்தில் சூழலியல் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க ஆரம்பித்தது. சுயேச்சையான சூழல் பாதுகாப்பு அமைப்பை வலியுறுத்தி 1950-களில் ஒலிக்கத் தொடங்கிய குரல்களுக்கு அது ஆற்றிய எதிர்வினையே 1970-ல் அதிபர் நிக்ஸன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு, 16,000 + நிரந்தர ஊழியர்கள் + அதற்கு இணையான ஒப்பந்த ஊழியர்கள், பரந்து விரிந்த ஆய்வகங்கள், கடல் ஆய்வுகளுக்குச் சொந்தக் கப்பல் என ஒரு பெரிய துறையாகச் செயல்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை ஒரு விதத்தில் இந்தியா போன்ற நாடுகளுக்கு முன்மாதிரி.

அமெரிக்காவில் காற்று, நீர், நில மாசில் தொடங்கி கதிரியக்க அபாயம் வரை கண்காணிக்கும் / ஒழுங்குபடுத்தும் இந்த அமைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்ற குறை அமெரிக்கர்களிடம் உண்டு. ஆனால், அதன் கையில் இப்போது இருக்கும் அதிகாரமே எத்தகையது என்பதற்கு உதாரணம் ‘ஃபோக்ஸ்வேகன்’ விவகாரம். வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும், அந்நிய முதலீடுகள் குறைந்துவிடும் என்றெல்லாம் பயந்து ‘யூனியன் கார்பைடு’ நிகழ்த்திய போபால் படுகொலைகள் முதல் ‘நோக்கியா’, ‘வோடஃபோன்’ நிகழ்த்திய பொருளாதார மோசடிகள் வரை எல்லாவற்றிலும் கை கட்டி வாய் பொத்திப் பார்க்கும் இந்திய அரசாங்கத்தோடு ஒப்பிட்டால், அமெரிக்கர்கள் எவ்வளவு முன்னே இருக்கிறார்கள்!

சுதந்திரத்துக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின், அதுவும் போபால் பயங்கரத்துக்குப் பின்புதான் நம் ஆட்சியாளர்கள் சூழல் சீர்கேடு எனும் வார்த்தைகளையே காதின் உள்ளே அனுமதித் தார்கள். பின்னரும் நாம் இயற்றிய சட்டங்கள் புத்தகங்களுக்குள்ளேயே தூங்கவைக்கப்பட்டன. சுற்றுச்சூழலியலாளர்களின் தொடர் குரல்களின் விளைவாக உச்ச நீதிமன்றம், “இந்தியாவிலும் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையை 2014-க்குள் உருவாக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

2014-ல் பொதுத் தேர்தல். குஜராத் முதல்வராக இருந்தபோது தொழில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியவர் மோடி. பிரதமரான பின் அவருடைய நோக்கப்படி, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் முக்கியமான பாதுகாப்புச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய டி.எஸ்.ஆர்.சுப்ர மணியன் குழுவை நியமித்தார். இரு மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது அக்குழு. அந்த அறிக்கை என்ன சொல்கிறது; அரசின் போக்கு எப்படியிருக்கிறது என்பதற்கு ரந்தீப் சர்ஜிவாலா விமர்சனத்தின் ஒரு வரி போது மானது: “இந்தியா 60 ஆண்டுகளாக உருவாக்கிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பையும் அடித்து நொறுக்கி பெரு நிறுவனங்களின் கையில் எல்லாவற்றையும் ஒப்பளிக்க 60 நாட்களில் யோசனை தெரிவித்திருக் கிறது இந்த அறிக்கை.”

தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை உருவாக்கத்தில் அவசரப் படப்போவதில்லை” என்று தற்காலிகமாக இந்த விவகாரத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறது அரசு.ஒவ்வொரு நாளும் தொழில் வளர்ச்சியின் பெயரால் சராசரியாக 333 ஏக்கர் வனப் பரப்பை இழந்துகொண்டிருக்கும், ஆண்டு உற்பத்தி மதிப்பில் 5% இழப்பைச் சூழல் கேடுகளால் பறிகொடுக்கும் நாடு இந்தியா! நாட்டின் பிரதமர் மோடி இப்போது, தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க், கலிஃபோர்னியா என்று சுற்றும் மோடி, வாஷிங்டனில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அலுவலகத்துக்கும் அவசியம் போக வேண்டும். ஜனநாயகம், வளர்ச்சி எனும் வார்த்தைகளுக்குள் உண்மையில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை அவருடைய அரசு இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in