Showing posts with label Savings. Show all posts
Showing posts with label Savings. Show all posts

Nov 18, 2015

ஏன் தேவை பங்குச் சந்தை முதலீடு?

வாசு கார்த்தி

சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சேமிப்பு என்பது பணத்தை செலவு செய்யாமல் வங்கியில் வைத்திருப்பது. முதலீடு என்பது நமக்கு வருமானத்தை கொடுக்க கூடியது. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இந்த வித்தியாசம் தெரிந்தவர்கள் கூட சரியான விகிதத்தில் பிரித்துக் கொள்வதில்லை.

மொத்த தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பரிந்துரை அல்ல இந்த கட்டுரை. ஆனால் அதேசமயம் பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் பலனை விட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஏன் முதலீடு?

இன்ஃபோசிஸ் அல்லது விப்ரோ பங்கு வெளியான போது சில ஆயிரம் ரூபாய்களுக்கு அந்த பங்குகளை வாங்கி இருந்தீர்கள் என்றால், போனஸ் பங்கு பிரிப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது இப்போது அதன் மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என்று பங்குச் சந்தையில் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இவை கதை அல்ல முற்றிலும் உண்மை. அதேபோல மொத்த முதலீடும் காணாமல் போன கதையும் கேள்விபட்டிருப்பீர்கள்.

அதிக லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். மொத்த முதலீட்டையும் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று கேட்டால், முதலீடு செய்யலாம் ஆனால் சில விதிமுறைகளுடன் சந்தையில் பயணிக்க வேண்டும். தவிர நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் கிடைக்கிறது.

பிரித்து முதலீடு செய்க!

பங்குச் சந்தை முதலீடு தேவைதான். ஆனால் அதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் அத்தனை தொகையையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. உங்கள் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக உங்களுக்கு 30 வயதாகிறது. 100 ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் (100-30) 70 ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இது பொதுவான விதி. ஒவ்வொருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல 70 ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டாலும் ஒரே சமயத்தில் அனைத்து முதலீடுகளையும் செய்ய வேண்டாம். 70 ரூபாயை நான்காக பிரித்து நேரம் வரும் போது முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடா, வர்த்தகமா?

அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்பு, முதலீட்டுக்கும் வர்த்தகத்துக்கும் இடையே வித்தியாசத்தை தெரிந்துகொள்வது. சில முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிடுவார்கள். சில காலத்துக்கு / வருடத்துக்கு பிறகு அவர்கள் விற்றுவிடுவார்கள். இது முதலீடு. ஆனால் சிலர் காலையில் வாங்கி மதியம் விற்பது, மாலை விற்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் இதற்கு பெயர் வர்த்தகம். இது ரிஸ்க் மிகுந்தது. நீங்கள் காலையில் வாங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த பங்கு தொடர்ந்து சரிய ஆரம்பிக்கும். இன்னும் சில நாளைக்கு பிறகு லாபத்துடன் விற்கலாம் என்று முடிவெடுப்பீர்கள். ஆனால் அந்த பங்கு நீங்கள் வாங்கிய விலைக்கு மீண்டும் வரவே வராது. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் இதில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கலாம்.

போர்ட்போலியோ!

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது, மொத்த முதலீட்டையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்யக்கூடாதோ அதேபோல, மொத்த முதலீட்டையும், ஒரே பங்கு அல்லது ஒரு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு துறையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போது, அந்த துறை சார்ந்த பங்குகள் அனைத்திலும் சரிவு ஏற்படும். அப்போது உங்களது முதலீடு அதிகளவு சரிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் வங்கி, பார்மா, ஐடி, என்று துறை வாரியாக பிரித்து முதலீடு செய்து ஒரு போர்ட்போலியோவை உருவாக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

தள்ளி நின்று கவனிக்க

பங்குச்சந்தை களேபரங்களில் இருந்து தள்ளி நின்று உங்கள் முதலீடுகளை செய்யுங்கள். எப்போது பங்குச் சந்தையில் உற்சாகம் மிகுதியாக இருக்கிறதோ அப்போது விற்றுவிடவேண்டும். எப்போது பங்குச்சந்தையில் பயம் அதிகமாக இருக்கிறதோ அப்போது முதலீடு செய்ய வேண்டும். இது முதலீட்டு ஆலோசகர் வாரன் பபெட் கூறிய முதலீட்டு தத்துவம். சந்தையின் இரைச்சலில் இருந்து விலகி இருந்தால்தான் என்ன நடக்கிறது என்பதை கண்டுக்கொள்ள முடியும். இல்லையெனில் கூட்டத்துடன் சேர்ந்து தவறான முடிவெடுப்போம்.

கடன் வாங்கி முதலீடு வேண்டாம்

பங்குச்சந்தையில் முதலீடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்திருக்கிறது என்றாலும், கடன் வாங்கி முதலீடு செய்வது ஆபத்தானது. உங்களிடம் இருக்கும் உபரி பணமாக இருந்தால் யாருக்கும் பதில் சொல்லத்தேவை இல்லை. ஆனால் கடன் வாங்கும் போது விட்டதை பிடிக்க மேலும் மேலும் கடன் அதிகமாக அந்த சுழலில் இருந்து வெளியே வரமுடியாமல் போய்விடலாம்.

மறு ஆய்வு

தங்கம் இன்று எவ்வளவு வர்த்தகம் ஆகிறது. வீட்டின் சதுரடி மதிப்பு இன்று எவ்வளவு என்பதை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் முதலீடு செய்த பங்குகள் மட்டும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பார்க்கத் தவறுவதில்லை. முதலீடு செய்த பங்குகளின் மதிப்பை தினமும் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல பார்க்காமல் விட்டுவிடுவதும் தவறு. பங்குகளின் விலையை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு முதலீடு செய்திருந்த பங்குகளை பற்றி என்ன செய்திகள் வருகின்றன என்பதில் கவனம் செலுத்தலாம். செய்திகள் சரியாக இல்லை என்றால் அவற்றை விற்பதை பற்றி பரிசீலனை செய்யலாம்.

எதில் முதலீடு?

பங்குச் சந்தையில் முதலீடு ஏன் தேவை என்பதற்கு காரணங்கள் கூறலாமே தவிர, எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தை வல்லுநர்களுடன் விவாதியுங்கள்.
நீங்கள் முதலீடு செய்யப்போவது பங்குகளில் அல்ல, தொழிலில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உணருங்கள், அதேபோல உங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்ற வாரன் பபெட்டின் ஆலோசனையை நினைவில் கொள்வதும் நல்லது.

Sep 7, 2015

கடன் பொறியில் சிக்க வைக்கும் திட்டமில்லாத செலவுகள்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை  


முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை.

இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இப்போது வெங்காயம் விலையை கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், சிலரோ செலவுகளைக் குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள் கின்றனர்.

அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. என்னதான் கட்டுப்படுத் தினாலும் விலைவாசியை இனிமேல் குறைக்கவும் முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் மட்டும்போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டுக் கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.

தவிர்க்க முடியாத அத்தியா வாசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல் , ஹோட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும்.

திட்டமிடுவது

கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான். முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து செய்து கொண்டிருப் பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

சேமிப்பு

எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கும் உதவும்.

கடன்

நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கி யம். மேலதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கிடைத்தாலும் நமது வருமானத்தையும் தாண்டி வாங்கு வதை தவிர்க்கலாம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள்.

கிரெடிட் கார்டு

அவசரத்துக்கு என்று கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கி இப்போது எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு நீட்டுவதை வழக்கமாக வைத்திருப்பது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். ஒரு வருடத்தின் கிரெடிட் கார்டு பயன் பாட்டை கணக்கிலெடுத்து அதற்கு எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். கிரெடிட் கார்டு கையிலிருப்பது அவசியம் இல்லாத பொருட்களையும் வாங்கத் தூண்டும் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

வாகன பயன்பாடு

தனிநபர் செலவில் கணிசமான தொகை யை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். அக்கம் பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் வாகனத்துக்கு பழகி வருகிறோம். பொதுப் போக்குவரத்துக்கு பழகுவதும், நமது சொந்த வாகனங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்கும் பழக வேண்டும்.

ஷாப்பிங்

வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும்.அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக் கூடாது.

தள்ளுபடி

ஷாப்பிங் சலுகைகளை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தள்ளுபடி பயனுள்ளதாக இருக்க வேண்டும். சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காக பல பொருட்களையும் வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும். சில பொருட்களை 3 வாங்கினால் 1 இலவசம் கொடுப்பார்கள். நமக்கு 2 பொருள் இருந்தாலே அதிகம் என்கிற பட்சத்தில் 2 வாங்கினால் மட்டும் போதும். ஷாப்பிங் நேரத்தில் அந்த நேர முடிவுகளில் அதிக கவனமாக இருந்தால் திட்டமில்லாச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

பொழுதுபோக்கு

நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வாரந்தோறும் ஏதேனும் ஒரு இடத்துக்கு குடும்பத்துடன் வெளியே செல்லும் கலாச் சாரம் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அடிக்கடி செல்வதை குறைத்துக் கொள்ளலாம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒரு முறை ஹோட்டல் சென்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது செலவாகிறது.

மின்சாரம்

மின்சாரத்தை செலவு செய்வதிலும் நம்மிடம் அலட்சியம் உள்ளது. இதன் மூலமும் செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் மின் விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார செலவுகளை கட்டுப்படுத்தலாம். அவசியம் இருந்தால் மட்டுமே ஏசி பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மோட்டார் இயக்குவதற்கான மின்சாரம் சிக்கனமாகும் என்கிற கண்ணோட் டத்திலும் யோசிக்க வேண்டும்.

செல்போன்

பண்டிகை நாட்களில் சகட்டு மேனிக்கு வாழ்த்து குறுஞ்செய்திகளை அனுப்பு வார்கள். வழக்கத்தைவிட அதிகக் கட்டணம் என்றாலும் தெரிந்தே செய்யும் இந்த பழக்கம் தவிர்க்க வேண்டியதில் முக்கியம். எந்த வகையில் செலவு செய்தாலும் நமது தேவையிலிருந்தே எல்லாவற்றையும் அணுகு வேண்டும். இதனால் திட்டமில்லாத செலவுகளை தவிர்க்க முடியும்.

பத்து ரூபாய் பாக்கி வரவேண்டும் என்றால் அதற்கு வேறு பொருளை எடுத்து ரவுண்ட்ஆப் செய்யும் பழக்கம் கூட திட்டமில்லாத செலவுதான். எனவே எந்த இடத்தில் யோசிக்காமல் செலவு செய்கிறோம் என்பதைப் யோசி யுங்கள்.
ஒவ்வொரு செலவையும் நமது தேவையை ஒட்டியே இருப்பதுபோல திட்டமிடுங்கள். திட்டமில்லாத செலவு களை தவிர்ப்பதற்கு அதுவே சிறந்த வழி.