Showing posts with label ISRO. Show all posts
Showing posts with label ISRO. Show all posts

Jul 14, 2016

விண்வெளியை ஆராயலாமா?

விண்வெளி ஆராய்ச்சி என்றாலே ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய விண்வெளி வீரர்கள்தான் நமக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால், வானியல் துறை எனப்படும் விண்வெளி தொடர்பான துறை பல பிரிவுகளையும் பணிகளையும் கொண்டது. ஒரு விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று பல வேலைப் பிரிவுகளும் வாய்ப்புகளும் உள்ளன.

நமது பூமியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. அப்போலோ மூன் ப்ரோக்ராம் திட்டத்தின் அடிப்படையில் மனிதர்கள் முதலில் நிலவில் இறங்கியபோதுதான், பூமியின் முதல் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. பூமி மட்டுமின்றி, நமது பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஆராய விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம்.

மேலிருந்து பூமியை நிர்வகிக்கிறோம்

பூமியிலிருந்து நாம் அனுப்பும் செயற்கைக் கோள்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளைக் கடத்துவதற்கு உதவுகின்றன. புவிநிலையறி அமைப்பு (Global Positioning System) பூமியில் செல்லும் கார்களுக்கும் வானில் பறக்கும் விமானங்களுக்கும் வழிகாட்டுகின்றன. பூமியை ஒட்டுமொத்தமாக நெருக்கமாக பார்த்து செயற்கைக் கோள்கள் அனுப்பும் ஒளிப்படங்கள் மூலம் பூமியை நிர்வகிப்பது எளிமையாக உள்ளது. பூமியிலுள்ள சமுத்திரங்கள், மழைக்காடுகள், பாலைவனங்கள், பனித்திட்டுகள், பருவநிலை மற்றும் நகரங்களைப் பார்வையிட முடிகிறது. கார்களிலிருந்தும், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளிப்படும் புகையால் சுற்றுச்சூழலும் ஓசோன் அடுக்கும் மாசுபடுவதைச் செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் தெரிந்துகொண்டு மாசுபாட்டைக் குறைக்கும் வழிகளைத் திட்டமிடவும் சாத்தியமாகிறது.

புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் முன்னோடி

விண்வெளித் துறைதான் புதுப்பித்தக்க மின்னாற்றலை முன்னோடியாகப் பயன்படுத்திய துறை. விண்வெளி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பொறியாளர்கள்தான் செயற்கைக் கோள்களைச் செயல்படுத்துவதற்கு சூரிய மின்கலங்களை முதன்முதலில் பயன்படுத்தினார்கள். ஒரு செயற்கைக் கோள் பயன்படுத்தும் ஒவ்வொரு வாட் மின்சாரத்தையும் தயாரிப்பது சூரிய மின்கலங்கள்தான்.

பருவநிலை மாறுதல்கள் மற்றும் பேரிடர்களைக் கண்காணித்தல்

பருவநிலைகள் மாறுவதையும் இயற்கைப் பேரிடர்களையும் கணிப்பதற்கு செயற்கைக் கோள்களே உறுதுணையாக உள்ளன. சமுத்திரங்களின் வெப்பநிலையைக் கணித்து, புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு முன்னரே அரசுகளும் மக்களும் தயாராவதற்கும் செயற்கைக் கோள்கள் நமக்கு உதவுகின்றன. புவிவெப்பமடைவதால் பனிப்படிவுகள் உருகுவது, மழைக்காடுகளின் பரப்பு குறைவது போன்றவற்றையும் பற்றித் தெரிந்துகொள்ள செயற்கைக் கோள் தொழில்நுட்பங்களே ஆதாரமாக உள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

விண்வெளி வீரர்

உலகம் முழுக்கவே விண்வெளி வீரர் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. ஒரு விண்வெளி வீரராக ராக்கெட்டில் பயணிப்பதற்கு அதிகபட்ச ஆரோக்கியத் தகுதியும், கடும் பயிற்சிகளும் அவசியம். அறிவியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நல்ல அனுபவம் கொண்ட விமான ஓட்டியாகவும் இருத்தல் அவசியம். விண்வெளி வீரர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலை அல்லது ஆய்வுப்பட்டம் முடித்தவர்களாக இருந்துள்ளனர். உயரம், எடை, கண்பார்வைத் துல்லியம் அவசியம். நாசா போன்ற புகழ்பெற்ற விண்வெளி நிலையங்கள் தங்களுக்கென்று பிரத்யேகமான தகுதி, திறன்களை விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வைத்துள்ளன.

விண்வெளிப் பொறியாளர்கள்

விண்வெளி ஆராய்ச்சியை பூமியிலிருந்தே சாத்தியப்படுத்துபவர்கள் விண்வெளிப் பொறியாளர்கள்தான். விண்வெளி செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளி நிலையங்களை வடிவமைப்பதோடு மட்டுமின்றி அவற்றின் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இவர்கள்தான். ஏரோஸ்பேஸ் அல்லது ஏரோநாட்டிகல் இன்ஜீனியரிங், ஏவியானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜீனியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் இன்ஜீனியரிங், மெட்டிரீயல்ஸ் இன்ஜீனியரிங், மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், ரோபாட்டிக்ஸ் இன்ஜீனியரிங், ஸ்பேஸ்க்ராப்ட் இன்ஜீனியரிங், டெலிகம்யூனிகேஷன் இன்ஜீனியரிங் படித்தவர்கள் விண்வெளிப் பொறியாளர்களாகலாம்.

வானியலாளர்கள்

வானியலில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. வேற்றுக் கிரகங்களி லிருந்து கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மருந்துத் துறை ஆராய்ச்சி யாளர் புதிய மருந்துகளை உருவாக்கலாம்.

வான் இயற்பியலாளர்கள்

விண்மீன்கள், விண்பொருட்கள் மற்றும் விண்வெளியில் இயற்பியல் விதிகளின் செயல்பாடுகளை ஆராய்பவர்கள் வான் இயற்பியலாளர்கள் (Astrophysicists).

வான் உயிரியலாளர்கள்:

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆராய்பவர்கள்.

வான் வேதியலாளர்கள்

விண்வெளியில் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் விண்கற்களின் வேதிக்கலவைகளை ஆராய்பவர்கள்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள்

விண்வெளி வீரரோ, ஒரு பிராணியோ விண்வெளியில் பயணிக்கும்போது அவருக்கு ஏற்படும் உடல் விளைவுகள், அங்கு கொண்டுசெல்லப்படும் தாவரங்களுக்கு ஏற்படும் விளைவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள்.

நிலவியலாளர்கள்

பூமி, மற்றும் கிரகங்களின் நிலவியல் பண்புகளை ஆராய்பவர்கள்.
வானிலையியல் வல்லுநர்கள்
விண்வெளியாலும் மற்ற கிரகங்களா லும் பூமியின் தாக்கத்தை ஆராய்பவர்கள்.

தொடர்பியல் தொழில்நுட்பம்

தொடர்பியல் தொழில்நுட்ப வியலாளர்கள், கணிப்பொறி வரை வடிவமைப்பாளர்கள் (கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்), எலக்ட்ரிஷியன்கள், லேசர் டெக்னிஷியன்கள், தர உத்தரவாத நிபுணர்கள், ரேடார் நிபுணர்கள், ரோபாட்டிக் நிபுணர்கள், செயற்கைக் கோள் நிபுணர்கள் விண்வெளித் தொடர்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் முதுகெலும்பாகச் செயல்படுகின்றனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்
டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
நேஷனல் ஏரோநாட்டிக்கல் லபாரட்டரீஸ் லிமிடெட்
ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரி

இஸ்ரோவில் வேலை

1969-ல் விஞ்ஞானி விக்ரம் சாராபாயால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆறில் ஒன்றாக இது உள்ளது. 35 வயதுக்குக் கீழ் உள்ள இந்தியக் குடிமக்கள் இஸ்ரோ நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சயன்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் பி.இ. அல்லது பி.டெக். முடித்தவர்கள், 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இஸ்ரோ சார்பாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இணையம் வழியாகவே இத்தேர்வு நடக்கும்.

விண்வெளி அறிவியலைக் கற்றுத்தருபவர்கள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம்
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா, ராஞ்சி
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ், பெங்களூரு
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மும்பை, சென்னை, காரக்பூர் மற்றும் கான்பூர்

விண்வெளி விஞ்ஞானியாக

இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றைப் பாடங்களாக பிளஸ் டூ-வில் எடுத்தவர்கள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் சேர்ந்து பி.டெக். படிக்கலாம். அங்கே ஏரோஸ்பேஸ் இன்ஜீனியரிங், ஏவியானிக்ஸ், பிசிக்கல் சயன்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளன. ஐஐடி ஜேஇஇ (IIT JEE) தேர்வு மூலம் ஐஐஎஸ்டியில் சேரலாம்.

Sep 28, 2015

இஸ்ரோ செலுத்தும் விண்வெளி டெலஸ்கோப்

என். ராமதுரை

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


'ஆஸ்ட்ரோசாட்' என்ற விசேஷ செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் உயரே செலுத்துகிறது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்று வர்ணிக்கலாம். ஏனெனில், இது செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற அதே நேரத்தில், விண்வெளியை நோக்கியபடி நட்சத்திரங்களை ஆராயும். பூமியில் அதாவது தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள் மூலம் கண்டறிய முடியாத விஷயங்களைக் கண்டறிவது அதன் நோக்கமாகும்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் எண்ணற்ற டெலஸ்கோப்புகள் ஏற்கெனவே உள்ளன. இவை மூலம் கடந்த காலத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவற்றால் அறிய முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

மின்காந்த அலைகள்

பகல் நேரமாக இருந்தால் சூரியனிலிருந்து ஒளி வருகிறது. இரவு நேரமாக இருந்தால் நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருகிறது. அந்த ஒளியை நம்மால் காண முடிகிறது. ஆனால் சூரியனாகட்டும் நட்சத்திரங்களாகட்டும் அவற்றிலிருந்து ஒளி மட்டுமன்றி வேறு வகைக் கதிர்களும் வருகின்றன. பலரும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் மின்காந்த அலைகள் பற்றிப் படித்திருப்பார்கள். அலை நீளங்களைப் பொறுத்து மின்காந்த அலைகள் பல வகைப்பட்டவை. இந்த அலைகளில் ஒளியும் ஒன்று. எக்ஸ்ரே கதிர்கள், காமா கதிர்கள் எனப்படுபவையும் இந்த மின்காந்த அலைகள் குடும்பத்தைச் சேர்ந்தவையே. புற ஊதாக் கதிர்கள் (அல்ட்ரா வயலட்) அகச் சிவப்புக் கதிர்கள் (இன்பரா ரெட்) ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவை. வானொலி ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்படுகின்ற ரேடியோ அலைகளும் இந்தக் குடும்பத்தில் அடங்கும்.

இந்த விதவிதமான அலைகளில் ஒளி அலைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். மற்ற வகை அலைகளை நம் கண்ணால் பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க, நட்சத்திரங்களிலிருந்தும் இதர வான் பொருட்களிலிருந்தும் எத்தனையோ வகையான கதிர்கள் (அலைகள் என்றும் கூறலாம்) வெளிப்படுகின்றன. அவற்றையும் ஆராய்ந்தாக வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன, விசேஷ வகைக் கருவிகளைக் கொண்டு அந்தக் கதிர்களை ஆராயலாமே என்று கேட்கலாம். அதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

பூமியைச் சுற்றி அமைந்த காற்று மண்டலமானது நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற காமா கதிர்களையும் எக்ஸ் கதிர்களையும் தடுத்து நிறுத்திவிடுகிறது. காற்று மண்டலமானது ஒளி அலைகளை அனுமதிக்கிறது. ரேடியோ அலைகளை அனுமதிக்கிறது. சிலவகை புற ஊதாக் கதிர்களையும், அகச் சிவப்புக் கதிர்களையும் ஓரளவுக்கு அனுமதிக்கிறது. அந்த அளவில் உலகின் பல நாடுகளிலும் உள்ள டெலஸ்கோப்புகள் ஒளி அலைகளையும் ரேடியோ அலைகளையும்தான் ஆராய்கின்றன. பலவும் இரவு நேரங்களில் நட்சத்திர ஒளியை ஆராய்கின்றன. வேறு வகை டெலஸ்கோப்புகள் நட்சத்திரங்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை இரவு பகல் என எல்லா நேரங்களிலும் ஆராய்பவையாக உள்ளன. அவற்றுக்கு ரேடியோ டெலஸ்கோப் என்று பெயர். இவை மிக அகன்ற ஆன்டெனாக்களைக் கொண்டவை. இவற்றைத் தொலைநோக்கி என்று கூற முடியாது. இவை எதையும் காண்பதில்லை. நமது காதுகள் எவ்விதம் ஒலி அலைகளைச் சேகரிக்கின்றனவோ அவ்விதம் அவை ரேடியோ அலைகளைச் சேகரிப்பவை. வேண்டுமானால், இவற்றைத் தொலைக் கேட்பிகள் என்று வர்ணிக்கலாம்.

எக்ஸ் கதிர் வானவியல்

இந்நிலையில், நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்களையும் இதர வகைக் கதிர்களையும் ஆராய வேண்டுமானால், காற்று மண்டலத்தைத் தாண்டி உயரே சென்றாக வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். பல மில்லியன் டிகிரி வெப்பத்தைக் கொண்ட நட்சத்திரங்கள் எக்ஸ் கதிர்களை வெளிவிடுகின்றன. சூரியனும்தான். 1963-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு ராக்கெட்டைச் செலுத்தி, அதிலிருந்த கருவிகள் மூலம் சூரியனின் எக்ஸ் கதிர்களை ஆராய்ந்தனர். பின்னர், 1978-ம் ஆண்டில் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுகிற எக்ஸ் கதிர்களை ஆராய ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.

இவ்விதமாக அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையில் எக்ஸ் கதிர் வானவியல் என தனிப்பிரிவு தொடங்கியது. பின்னர் வேறு பிரிவுகளும் தோன்றின. நாசா உயரே செலுத்தியுள்ள `சந்திரா' டெலஸ்கோப், நட்சத்திரங்களின் எக்ஸ் கதிர்களைக் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ந்து, பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பெயரைத் தாங்கிய இந்தப் பறக்கும் டெலஸ்கோப், சுருக்கமாக ‘சந்திரா டெலஸ்கோப்’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளில் பல பறக்கும் டெலஸ்கோப்புகள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஹப்புள் டெலஸ்கோப்பும் அடங்கும். இது சுமார் 560 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிவருகிறது. 11 டன் எடை கொண்ட இந்த டெலஸ்கோப், 1990-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய தூசு, வானை ஆராய்வதற்குப் பெரிய தொல்லையாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் ஹப்புள் செலுத்தப்பட்டது. ஹப்புள் கடந்த பல ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.ஹப்புள் டெலஸ்கோப்பில் புற ஊதாக் கதிர்களையும் அகச் சிவப்புக் கதிர்களையும் வெளியிடுகின்ற வான் பொருட்களை ஆராயவும் வசதிகள் உள்ளன.கோடானு கோடிதொலைவில் உள்ள நட்சத்திரங்களில் பலவும் சூரியனைப் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம். அவற்றைப் பூமியில் இருந்தபடி கண்டுபிடிப்பது இயலாத காரியம். எனவே, நாசா இதற்கென `ஸ்பிட்சர்' என்னும் டெலஸ்கோப்பைச் செலுத்தியது. இது 2003-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இந்த டெலஸ்கோப் எங்கோ உள்ள நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இது அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் வான் பொருட்களைக் கண்டறிவதற்கானது. இது முதல்கட்டப் பணியை முடித்துக்கொண்டு இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது.

ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை வெளியிடுகின்ற அனைத்தையும் கிரகித்து ஆராயும் திறன் கொண்ட டெலஸ்கோப், ஆகும். அதற்கான கருவிகள் இந்தப் பறக்கும் டெலஸ்கோப்பில் உள்ளன. இதையே வேறு விதமாகச் சொல்வதானால், இந்த டெலஸ்கோப் நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சார்கள் எனப்படும் நட்சத்திரங்கள், வெள்ளைக் குள்ளன்கள் எனப்படும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற அண்டங்களின் மையங்கள் முதலியவற்றை ஆராயும்.

தனித் தன்மை கொண்ட ஆஸ்ட்ரோசாட்

இந்த ஆராய்ச்சிகள் அல்லாமல் தரையில் அமைந்த டெலஸ்கோப்புகளுடனும் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா இவ்வித ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது இது முதல் தடவை அல்ல. நட்சத்திரங்கள் வெளிவிடும் எக்ஸ் கதிர்களை ஆராய ஆரம்ப காலத்தில் பல நாடுகளும் பலூன்களையும் ராக்கெட்களையும் பயன்படுத்தியதுபோல இந்தியாவும் செய்துள்ளது. தவிர, 1996-ம் ஆண்டில் இந்தியா செலுத்திய ஐ.ஆர்.எஸ். பி-3 என்னும் செயற்கைக்கோளில் எக்ஸ் கதிர் பதிவுக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

இப்போது செலுத்தப்படும் ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பில் கனடாவின் நிபுணர்களும், இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழக நிபுணர்களும் உருவாக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பை நாசா ஏற்கெனவே செலுத்திய ஹப்புள், சந்திரா டெலஸ்கோப், ஸ்பிட்ஸ் டெலஸ்கோப் ஆகியவற்றுடன் ஒப்பிட முடியாது. நாசாவின் டெலஸ்கோப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி பணிக்கானவை. அதிக எடை கொண்டவை. அதிக நுட்பம் கொண்டவை. மாறாக ஆஸ்ட்ரோசாட் பல பணிகளையும் உள்ளடக்கியது என்ற வகையில் தனித் தன்மை கொண்டது.

ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப் 1,650 கிலோ எடை கொண்டது. இது 650 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி மேற்கிலிருந்து கிழக்காக பூமியைச் சுற்றிவரும். இது பல சாதனைகளைப் படைத்துள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும்.